நேரில் பார்த்தவர்: வீ-க்கு ‘கட்டை விரல் கீழ் நோக்கிக் காட்டப்பட்டது’

காஜாங்கில் நடைபெற்ற சீனக் கல்விப் பேரணியின் போது கல்வித் துணை அமைச்சர் வீ கா சியோங் மீது நடத்தப்பட்டதாகக் கூறப்படும் ‘தாக்குதலை’ நேரில் பார்த்த ஒருவர்,  அந்தத் ‘தாக்குதல்காரர்’ வீ-யை குத்துவதற்கு முயலவில்லை என்றும் தமது ‘கட்டை விரலை கீழ் நோக்கியே’ காட்டினார் என்றும் கூறுகிறார்.

அந்தச் சம்பவம் நிகழ்ந்த போது வீ-யிடமிருந்து ஒரு மீட்டர் தொலைவில் இருந்த கோலாலம்பூர், சிலாங்கூர் சீனர் அசெம்பிளி மண்டபத்தின் தலைமைச் செயலாளர் ஸ்டான்லி யோங் இயூ வெய் அதனைத் தெரிவித்தார். அது தாக்குதல் அல்ல என்று கூறிய அவர் “அது பொருத்தமற்ற நடவடிக்கை” என அவர் சின் சியூ நாளேட்டிடம் தெரிவித்தார்.

பேரணி நிகழ்ந்த நியூ எரா கல்லூரியிலிருந்து மேடைக்கு முன்பு இருந்த தமது இருக்கைக்கு வீ செல்வதற்கு ஏழு நிமிடங்கள் பிடித்ததாக அவர் சொன்னார். வீ-யுடன் 10 போலீஸ்காரர்களும் மெய்க்காவலர்களும் வந்தார்கள்.

வீ தமது இருக்கைக்கு அருகில் சென்ற போது ஆறு முதல் ஏழு பேர் அவரை அணுகினர்.

“அந்த நேரத்தில் மஞ்சள் நிற உடை அணிந்திருந்த நடுத்தர வயதுடைய ஒருவர் மற்றவர்களை நெருக்கிக் கொண்டு முன்னுக்குச் செல்ல முயன்றார். வீ உட்காரவிருந்த வேளையில் அந்த மனிதர் முன்னுக்கு சென்று வீ பதவி விலக வேண்டும் என விரும்புவதாக மெதுவாக முணுமுணுத்தார். அப்போது அவருடைய வலது கை கட்டை விரல் ‘கீழ் நோக்கும்’ அறிகுறியைக் காட்டியது. அதாவது வீ விலக வேண்டுமென்பது அதன் அர்த்தமாகும்,” யோங் சொன்னதாக சின் சியூ செய்தி குறிப்பிட்டது.

அந்த  மனிதர் தமது கைகயை வீ-யை நோக்கி நீட்டிய போது அவரது கட்டை விரல் வீ-யின் கன்னத்தில் பட்டிருக்க வேண்டும் என்றும் அவர் சொன்னார்.

“ஆனால் அந்த மனிதருடைய நடவடிக்கை மிகவும் மெதுவாக இருந்தது. வீ-யை அவர் குத்த விரும்பியதாக நான் எண்ணவில்லை. அந்த மனிதருடைய கையைப் போலீசார் தடுத்து விட்டனர். ஆனால் 10 நொடிகளுக்குள் வீ-யை நோக்கி முன்னேறிய அந்த மனிதர் வீ-யை மீண்டும் திட்டினார்.”

“அந்த அந்த மனிதருடைய நடவடிக்கை கடுமையானதாக இருந்தால் வீ-யின் தலை பின் புறம் சாய்ந்திருக்க வேண்டும். மாறாக அது பக்கவாட்டில் சாய்ந்தது. வீ தமது முகத்தைத் தொட்டார், புன்னகை செய்தார், வியப்படைந்ததற்கான அறிகுறிகள் எதனையும் காட்டவில்லை. பின்னர் அவர் ஏதும் நடக்காதது போல அமர்ந்தார்,” என யோங் சொன்னதாக சின் சியூ செய்தி வெளியிட்டுள்ளது.

அடுத்து அந்தமனிதருக்கு போலீஸ்காரர்கள் அறிவுரை கூறி சாந்தப்படுத்தினர். பின்னர் அந்த மனிதர் அங்கிருந்து வெளியேறினார்.

அந்த மனிதர் வீ-யைத் தாக்கியிருந்தால் போலீஸ்காரர்கள் அவரது விவரங்களைப் பதிவு செய்திருப்பார்கள் என்றும் யோங் சொன்னார்.

போலீசார் நிருபர்களை விசாரிப்பர்

சீனப் பள்ளிக்கூடங்களில் சீன மொழியில் கல்வி கற்ற ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவுவதற்கு ஆட்சேபம் தெரிவிக்கும் பொருட்டு சீன மொழிக் கல்வி போராட்ட அமைப்பான டோங் ஜோங் ஏற்பாடு செய்த பேரணியில் 10,000க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டார்கள்.

ஏற்பாட்டாளரும் சிலாங்கூர் போலீசாரும் வீ ‘தாக்கப்படவில்லை’ எனக் கூறிய போதிலும் தாம் கிட்டத்தட்ட குத்தப்பட்டதாக வீ பிடிவாதமாக வலியுறுத்துகிறார்.

இதனிடையே வீ குத்தப்பட்டதை ஆதாரங்கள் காட்டினால் அவரிடம் டோங் ஜோங் மன்னிப்புக் கேட்கும் என அதன் துணைத் தலைவர் சாவ் சியூ ஹொங், சின் சியூ நாளேட்டிடம் கூறினார்.

என்றாலும் அன்றைய ஒளிப்பதிவுகள் தாக்குதல் நிகழ்ந்ததைக் காட்டவே இல்லை என அவர் சொன்னார்.
 
தாம் சம்பந்தப்பட்ட தரப்புக்களிடம் முழு ஒளிப்பதிவுகளையும் டோங் ஜோங் திரையிட்டுக் காட்டும்.

அந்தச் சம்பவம் தொடர்பில் காஜாங் போலீசாரிடம் ஐந்து புகார்கள் சமர்பிக்கப்பட்டுள்ளன என்றும் அது குறித்து வாக்குமூலங்களைப் பதிவு செய்வதற்காக நான்கு நிருபர்களை காஜாங் போலீசார் அழைப்பர் என்றும் இன்னொரு சீன மொழி நாளேடான சைனா பிரஸ் தெரிவித்துள்ளது.