பாலியல் பாகுபாடு காட்டுவதாக அரசாங்கத்தை டிஏபி மகளிர் சாடியுள்ளனர்

பெண்களுக்கு எதிரான எல்லா வகையான பாகுபாடுகளையும் அகற்றுவது மீதான ஒப்பந்தத்தை (Cedaw) அமலாக்குவதற்கு அரசாங்கம் தயக்கம் காட்டுவதாக எதிர்த்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சாடியுள்ளனர்

நிவாரண ஆசிரியர் ஒருவர் மீது காட்டப்பட்ட பாகுபாடு தொடர்பில் வழங்கப்பட்ட வரலாற்றுப்பூர்வமான தீர்ப்புக்கு எதிராக கல்வி அமைச்சு முறையீடு செய்து கொண்டிருப்பதைத் தடுப்பதற்கு மகளிர் குடும்ப, சமூக மேம்பாட்டு அமைச்சு தவறி விட்டதாக டிஏபி பத்து காஜா எம்பி போங் போ குவான் கூறினார்.

அந்த Cedaw ஒப்பந்தம் சட்ட ரீதியாக அமலாக்கப்பட முடியும் என்றும் மலேசிய பாலியல் சமநிலைச் சட்டங்களை அது கட்டுப்படுத்தும் என்றும் கூறி நோர்பாடிலா அகமட் சைக்கினுக்கு சாதகமாக ஷா அலாம் உயர் நீதிமன்ற நீதிபதி கடந்த ஆண்டு ஜுலை 12ம் தேதி தீர்ப்பளித்தார்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு காஜாங்கில் உள்ள இடைநிலைப் பள்ளிக்கூடம் ஒன்றில் பயிற்சி பெறாத நிவாரண ஆசிரியராக பணியாற்றுவதற்கு வழங்கப்பட்ட நியமனக் கடிதத்தை அவர் கர்ப்பிணியாக இருந்த காரணத்தால் பேட்டி ஒன்றின் போது மீட்டுக் கொண்டதற்காக 29 வயதான நோர்பாடிலா கல்வி அமைச்சு, அரசாங்கம் உட்பட பல தரப்புக்கள் மீது வழக்குத் தொடர்ந்திருந்தார்.

அந்தத் தீர்ப்பை நிலை நிறுத்துமாறு மகளிர் அமைச்சு அரசாங்கத்தை வற்புறுத்த வேண்டும் என டிஏபி புக்கிட் மெர்ட்டாஜாம் எம்பி சொங் எங்-குடன் போங்-கும் கோரினார்.

அந்த நீதிமன்ற ஆணையை அமலாக்குவதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அவர் வினவினார்.

“கல்வி அமைச்சு நோர்பாடிலா வழக்கில் அந்தத் தீர்ப்பை எதிர்த்து ஜனவரி 28ம் தேதி முறையீடு  செய்து கொண்டுள்ளது.”

“அது எப்படி அனுமதிக்கப்பட முடியும் ?” என போங், அரச உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை நிறைவு செய்து வைத்துப் பேசிய மகளிர், குடும்ப, சமூக மேம்பாட்டுத் துணை அமைச்சர் ஹெங் சியாய் கீ-யிடம் வினவினார்.

ஒரே பல்லவி

என்றாலும் அந்தக் கேள்விக்கு நேரடியாகப் பதில் அளிக்காமல் சுற்றி வளைத்த ஹெங், “அந்தத் தீர்ப்புக்கு எதிராக முறையீடு செய்து கொள்ளும் முடிவு முழுக்க முழுக்க கல்வி அமைச்சின் கரங்களில் இருக்கிறது,” என சாந்தமாகச் சொன்னார்.

“என்றாலும் மகளிர் அரசமைப்பின் 8(2) பிரிவுக்கு ஏற்ப மகளிர் உரிமைகளை நிலை நிறுத்திய முறையீட்டு நீதிமன்ற முடிவுக்கு எனது அமைச்சு ஆதரவளிக்கிறது.
 
அதனால் ஆத்திரமடைந்த போங்-கும் சொங்-கும் பாலியல் பாகுபாட்டை தெளிவாகக் காட்டும் கொள்கைகள் மீது அரசாங்கம் “முரண்பாடான”நிலையைப் பின்பற்றுவதாக போங்-கும் சொங்-கும் குற்றம் சாட்டினர்.

“இந்த நாட்டில் உள்ள பெண்களை பிரதிநிதிக்கும் அமைச்சு என்ற முறையில் வரலாற்றுச் சிறப்பு மிக்க அந்தத் தீர்ப்பை அங்கீகரிக்குமாறு அரசாங்கத்தை ஏன் கட்டாயப்படுத்த முடியவில்லை? என சொங் கேள்வி  எழுப்பினார்.

பதில் கொடுக்குமாறு ஹெங்-கை அந்த இரண்டு டிஏபி உறுப்பினர்களும் தொடர்ந்து வலியுறுத்திய போது ஹெங் தடுமாறுவதாகத் தெரிந்ததும் மக்களவை சபாநாயகர் பண்டிக்கார் அமின் முலியா தலையிட்டார்.

“நீங்கள் நினைப்பதைப் போல நான் முட்டாள் அல்ல. உங்கள் செய்தியை நான் புரிந்து கொண்டேன். அரசாங்கம் தனது நிலையில் முரண்பாடாக நடந்து கொள்கிறது. ஆகவே அந்த விஷயத்தை மீண்டும் மீண்டும் எழுப்ப வேண்டாம்,” எனக் கூறிய பண்டிக்கார் அந்த விவகாரத்துக்கு முற்றுப் புள்ளி வைத்தார்.