காஜாங்கில் உள்ள டோங் ஜோங் கட்டிடத்துக்கு முன் புறமுள்ள கார் நிறுத்துமிடத்தில் நேற்றிரவு அமைதியாக ஒன்று கூடிய 60க்கும் மேற்பட்ட சிலாங்கூர் மசீச இளைஞர் பிரிவு உறுப்பினர்கள் ‘வன் முறைக்கு எதிர்ப்பு’ தெரிவித்தனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று காஜாங்கில் உள்ள நியூ எரா கல்லூரியில் நிகழ்ந்த “சீனக் கல்வியைக் காப்பாற்றுங்கள்” என்னும் பேரணியின் போது தாம் தாக்கப்பட்டதாக கல்வித் துணை அமைச்சர் வீ கா சியோங் கூறிக் கொண்டதைத் தொடர்ந்து சிலாங்கூர் மசீச இளைஞர் தலைவர் காவ் சியோங் வெய் தலைமையில் அவர்கள் ஒன்று கூடினர்.
இரவு மணி 7.32க்கு கூடிய அவர்கள் ஒரு மணி நேரத்துக்குப் பின்னர் கலைந்து சென்றனர். மசீச-வின் அதிகாரத்துவ நிறமான வெள்ளை நிறத்திலான ஆடைகளை அவர்கள் அணிந்திருந்தனர். அவர்கள் பதாதைகளை ஏந்தியிருந்ததுடன் “அமைதி” “வன்முறை வேண்டாம்” என்ற வார்த்தைகளையும் முழங்கினார்கள்.
அந்த இடத்தில் ஒழுங்கை நிலை நிறுத்துவதற்கு 30க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு
நிறுத்தப்பட்டிருந்தனர். விரும்பத்தகாத சம்பவங்கள் ஏதும் நிகழவில்லை. அந்தப் பேரணியில் தம்மை நெருங்கி வந்த பங்கேற்பாளர் ஒருவர் தம்மைத் தாக்கியதாக வீ கூறிக் கொண்டார்.
வீ தாக்கப்படவில்லை என போலீஸ் கூறிய போதிலும் தம்மை ஒருவர் தொடுவதை தாம் உணர்ந்ததாகவும் அவர் வலியுறுத்தினார்.
ஆனால் வீ அந்தச் சம்பவம் பற்றிப் போலீசில் புகார் செய்ய மறுத்து விட்டார். தாக்கியவரை மன்னித்து விட்டதாகவும் அந்த விவகாரத்தை முடித்து வைக்க விரும்புவதாகவும் வீ குறிப்பட்டார்.
அவரைக் குத்தியதாகக் கூறப்படும் 65 வயதான லீ சியாக் தா அந்தக் குற்றச்சாட்டை மறுத்து போலீஸிலும் புகார் செய்துள்ளார்.