ஆயர்: ஆசிரியர் கருத்தரங்கு கருப்பொருள் அவநம்பிக்கையையும் வெறுப்புணர்வையும் தூண்டுகிறது

முஸ்லிம்களைக் கிறிஸ்துவ மயமாக்கும் மருட்டல் மீது ஜோகூரில் நிகழும் கல்விக் கருத்தரங்கு ஒன்று கிறிஸ்துவர்களுக்கு எதிராக அவநம்பிக்கையையும்  எதிர்ப்புணர்வையும் தூண்டும் என கத்தோலிக்க ஆயர் டாக்டர் பால் தான் சீ இங் அச்சம் தெரிவித்துள்ளார்.

“சமய நம்பிக்கையை வலுப்படுத்துவது, தாராளப் போக்கும் பல்வகைப் போக்கும் கொண்டுள்ள அபாயங்கள், முஸ்லிம்களை கிறிஸ்துவ மயமாக்கும் மருட்டல். ஆசிரியர்களுடைய பங்கு என்ன?” என்னும் கருப்பொருளுடன் இந்த வார இறுதியில் ஜோகூர் மாநிலத்தில் உள்ள 55 தேசியப் பள்ளிகளைச் சார்ந்த சமய ஆசிரியர்களுக்கு கருத்தரங்கு ஒன்று நடத்தப்படவிருக்கிறது. அதற்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

அந்தக் கருப்பொருளில் தவறு ஏதுமில்லை என சில முஸ்லிம் அமைப்புக்கள் கூறும் வேளையில் கிறிஸ்துவ, சமயங்களுக்கு இடையிலான கூட்டமைப்புக்கள் அது குறித்துக் கவலை தெரிவித்துள்ளன.

மலாக்கா ஜோகூர் கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவருமான ஆயர் பால் தான், அந்தக் கருப்பொருளை எதிர்ப்பவர்கள் பட்டியலில் இணைந்துள்ளார்.

“அந்தக் கருப்பொருள் புனையப்பட்டுள்ள முறையைப் பார்க்கும் போது எந்த ஒரு விரிவுரையாளரும் கிறிஸ்துவர்களுக்கு எதிராக எதிர்ப்புணர்வையும் அவநம்பிக்கையையும் ஏற்படுத்தாமல் தவிர்ப்பதற்கு மிகவும் சிரமப்பட வேண்டியிருக்கும்,” என அவர் சொன்னார்.

முஸ்லிம்கள் கிறிஸ்துவர்களாக மாற்றப்படுவதாகக் கூறப்படுவதற்கு ஆதாரம் ஏதும் காட்டாமல் அரசியல் சிந்தனை கொண்ட சமய போதகர்கள் அங்கும் இங்கும் பேசிக் கொண்டிருக்கும் வேளையில் இத்தகைய கருப் பொருள் கருத்தரங்கு ஒன்றில் இணைக்கப்படுவது அவசியமா ?” என ஆயர் பால் தான் வினவினார்.

அதிகாரிகள் கைகளை கட்டிக் கொண்டு நிற்கின்றனர்

“அரசியல் சிந்தனை கொண்ட சமயப் போதகர்கள் முற்றிலும் உண்மையில்லாத விஷயங்களைச் சொல்லிக் கொண்டும் உணர்வுகளைத் தூண்டும் அறிக்கைகளை வெளியிடுவது,” மீது அதிகார வர்க்கத்தினர் நடு நிலை வகிப்பது தமக்கு அதிர்ச்சியை அளித்துள்ளதாகவும் அவர் சொன்னார்.

“விதி விலக்கைப் பெற்றவர்கள் போல அவர்கள் அச்சத்தையும் அவநம்பிக்கையையும் தூண்டி விட அனுமதிக்கும் அந்த நடு நிலையைக் கடைப்பிடிக்க நாம் யார் ?”

வெறுப்புணர்வையும் அவநம்பிக்கையையும் ஏற்படுத்தும் அத்தகைய மனிதர்களுக்கு எதிராக இந்த நாட்டில் உள்ள ஒவ்வொரு சமயத்தையும் சார்ந்த மிதவாதிகளும் பேசுவதற்கு காலம் கனிந்து விட்டது என ஆயர் பால் தான் வலியுறுத்தினார்.

அரசியல் சிந்தனை கொண்ட சமயப் போதகர்கள் கட்டுப்பாடு இல்லாமல் பேச அனுமதிக்கப்பட்டுள்ள போது அவர்களைத் தடுத்து நிறுத்த சமய மிதவாதிகள் ஒன்றிணைய வேண்டும்,” என அந்த ஆயர் கூறினார்.