பங்கு விலையில் தில்லுமுல்லுக்காக பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் இரண்டாவது புதல்வரான நஜிபுடினை விசாரிக்குமாறு பங்குப் பத்திர ஆணையத்தை டிஏபி கேட்டுக் கொண்டுள்ளது.
அண்மையில் இரண்டு நிறுவனங்களின் பங்கு விலைகள் வெகு வேகமாக ஏறி இறங்கியது மிகவும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என அந்தக் கட்சியின் தேசியப் பிரச்சாரப் பிரிவுச் செயலாளர் டோனி புவா விடுத்த அறிக்கை கூறியது.
முதலாவது விஷயத்தில் Harvest Court Industries Bhd இயக்குநர்கள் வாரியத்தில் கடந்த ஆண்டு இறுதி வாக்கில் நஜிபுடின் சேர்ந்த பின்னர் அந்த நிறுவனத்தின் பங்கு விலைகள் 2,575 விழுக்காடு ஏற்றம் கண்டன. ஆனால் அதற்கு அடுத்த ஒரு மாதத்தில் அவர் விலகிய பின்னர் அந்த விலைகள் கிடுகிடுவெனச் சரிந்தன.
இரண்டாவது விஷயத்தில் ACE மார்க்கெட் பங்குச் சந்தையில் பட்டியலிட்டுள்ள Supercomnet Technologies Bhdல் 18.66 விழுக்காடு பங்குகளைக் கொள்முதல் செய்வதற்கான வாய்ப்பு நஜிபுடினுக்குக் கொடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்ட பின்னர் அதன் பங்கு விலைகளும் 362 விழுக்காடு உயர்ந்தன.
ஆனால் அதற்கு அடுத்த இரண்டு நாட்களுக்கு பின்னர் நஜிபுடின் அந்த வாய்ப்பை நிராகரித்து விட்டதாக நிறுவனம் அறிவித்ததும் Supercomnet பங்கு விலைகள் வீழ்ச்சி அடைந்தன.
அரசியலில் ஈடுபடுவதற்கு முன்னர் 2007ம் ஆண்டு சிங்கப்பூர் பங்குப் பட்டியலில் இடம் பெற்றிருந்த வெற்றிகரமாக இயங்கிய நிறுவனம் ஒன்றை புவா விற்று விட்டார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
Supercomnet பங்கு விலைகளின் எழுச்சியும் வீழ்ச்சியும் பெரிய அளவில் தில்லுமுல்லு நிகழ்ந்திருப்பதற்கான அறிகுறிகளைக் காட்டுவதாக புவா சொன்னார்.
“குறிப்பிட்ட தகவல்கள் முதலீட்டாளர்களுக்கு கால அட்டவணை அடிப்படையில் கொடுக்கப்படுவதை நடப்புப் பங்குதாரர்களும் நஜிபுடினும் உறுதி செய்வதில் ஆற்றிய பங்கு அப்பட்டமான அலட்சியத்தைக் காட்டுகிறது.”
“அந்த நிறுவனத்தில் 18.66 விழுக்காடு பங்குகளை ‘வாங்குவதற்கான வாய்ப்பை ஏற்றுக் கொள்வது மீது நஜிபுடின் நேர்மாறாக நடந்து கொண்டு 48 மணி நேரத்தில் அதனை நிராகரித்துள்ளது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. அது உடனடியாக விசாரிக்கப்பட வேண்டும்,” என்றும் புவா வலியுறுத்தினார்
அந்த இரு விவகாரங்களும் மலேசியப் பங்குச் சந்தையின் தோற்றத்துக்கு களங்கத்தை ஏற்படுத்தியிருப்பதால் பங்குப் பத்திர ஆணையம் விருப்பு வெறுப்பின்றி நஜிபுடினையும் மற்ற தரப்புக்களையும் இப்போது விசாரிக்க வேண்டும் என்றும் புவா வாதாடினார்.
அந்த முழு நடவடிக்கை- திங்கட்கிழமை மாலை வாய்ப்பு கொடுக்கும் ஒப்பந்தம் பற்றி அறிவிக்கப்பட்டதற்கு முன்னதாக பங்குகளை வாங்கி, செவ்வாய்க்கிழமை காலை அந்த வாய்ப்பு நிராகரிக்கப்பட்டதாக அறிவிக்கப்படுவதற்கு முன்னதாக பங்குகளை விற்றதின்- மூலம் டன் கணக்கில் பணம் பண்ணியவர் யார் என்ற கேள்வியும் எழுப்பப்பட வேண்டும்,” என்று அந்த பெட்டாலிங் ஜெயா உத்தாரா எம்பி-யுமான அவர் கேட்டுக் கொண்டார்.