பர்மாவிலிருந்து வீட்டுப் பணிப்பெண்களை வேலைக்கு எடுப்பது பற்றி மலேசியா பரிசீலிக்கலாம்

இந்தோனிசியாவிலிருந்து வீட்டுப் பணிப்பெண்களை அனுப்புவதை கடந்த இரண்டு ஆண்டுகளாக முடக்கி வைத்துள்ளதைத் தொடர்ந்து அந்நியப் பணிப் பெண்களுக்கு ஏற்பட்டுள்ள பற்றாக்குறையை சமாளிப்பதற்கு பர்மா உடபட பல நாடுகளிலிருந்து வீட்டுப் பணிப்பெண்களைக் கொண்டு வருவது பற்றி மலேசியா பரிசீலிக்கக் கூடும்.

பர்மாவுக்கு பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் மேற்கொண்ட இரண்டு நாள் அதிகாரத்துவப் பயணத்தின் போது பர்மா விடுத்த வேண்டுகோளைப் பரிசீலிக்க மலேசியா ஒப்புக் கொண்டுள்ளது. நஜிப்பின் பர்மிய பயணம் இன்று முடிவடைந்தது.

பர்மிய குடிமக்கள் வீட்டுப் பணிப்பெண்களாக வேலைக்குச் சேர்க்கப்படும் சாத்தியம் இருப்பதாக அவர் தமது பயண முடிவில் மலேசிய நிருபர்களிடம் கூறினார். என்றாலும் அது பற்றி மேலும் விவாதிக்கப்பட வேண்டும் என்றார் அவர்.

“அந்த யோசனை பற்றி நாங்கள் மேலும் விவாதிக்க வேண்டும். நிபந்தனைகள் என்ன என்பது எங்களுக்குத் தெரியாது. நிபந்தனைகள் ஏற்றுக் கொள்ளத்தக்கதாக இருந்தால் நாங்கள் நிச்சயம் அதனை ஆய்வு செய்வோம்,” என்றார் அவர்.

பர்மாவிலிருந்து வீட்டுப் பணிப்பெண்களை வேலைக்கு சேர்க்கும் யோசனையை மலேசியா வரவேற்பதாகவும் நஜிப் சொன்னார்.

பர்மிய மக்கள் ‘மிகவும் மரியாதையான மக்கள்’ என வருணித்த நஜிப், மலேசிய வாழ்க்கை முறையுடன் அவர்கள் பண்பாட்டு ரீதியில் ஒத்துப் போக முடியும் என்றால் அந்த யோசனையத் தொடருவதில் எந்தச் சிரமமும் இருக்காது என்றார்.

ஆறு பி திட்டத்தின் கீழ் 250,000 பர்மியக் குடிமக்கள் பதிவு செய்து கொண்டுள்ள தகவலையும் தாம் பர்மாவிடம் தெரிவித்ததாக நஜிப் மேலும் கூறினார்.

பெர்னாமா