நீங்கள் சொல்வதைச் செய்யுங்கள் என சமயங்களுக்கு இடையிலான அமைப்பு நஜிப்பிடம் சொல்கிறது

கிறிஸ்துவர்கள் மத மாற்றம் செய்வதாகக் கூறப்படுவது மீது கவனம் செலுத்தும் இஸ்லாமிய சமய ஆசிரியர்களுக்கான ஜோகூர் கல்வித் துறை கருத்தரங்கிற்கு அங்கீகாரம் அளித்ததற்காக சமயங்களுக்கு  இடையிலான அமைப்பு ஒன்று அரசாங்கத்தை சாடியுள்ளது.

அந்த நிகழ்வினால் அதிர்ச்சி அடைந்துள்ள MCCBCHST என்ற மலேசிய பௌத்த, கிறிஸ்துவ, இந்து, சீக்கிய, தாவோ ஆலோசனை மன்றம் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கிற்கு உணர்ச்சிப்பூர்வமான வேண்டுகோளை விடுத்துள்ளது.

“நீங்கள் சொல்வதைச் செய்ய வேண்டும் என நாங்கள் கேட்டுக் கொள்கிறோம். தான் போதிப்பதை பின்பற்றும் பொறுப்புள்ள அரசாங்கத்தின் தலைவராக நீங்கள் இருக்க வேண்டும். உங்களுடைய ஒரே மலேசியா கோட்பாடும், மிதவாதத்திற்கான உங்கள் வேண்டுகோளும் சிதறிப் போய் விட்டன.”

முதலில் அந்தக் கருத்தரங்கின் தலைப்பு இதுவாகும்: “Pemantapan Aqidah, Bahaya Liberalisme dan Pluralism Serta Ancaman Kristianisasi Terhadap Umat Islam. Apa Peranan Guru?” (“சமய நம்பிக்கையை வலுப்படுத்துவது, தாராளப் போக்கும் பல்வகைப் போக்கும் கொண்டுள்ள அபாயங்கள், முஸ்லிம்களை கிறிஸ்துவ மயமாக்கும் மருட்டல். ஆசிரியர்களுடைய பங்கு என்ன ?”

பொது மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததைத் தொடர்ந்து கிறிஸ்துவம் சம்பந்தப்பட்ட சொற்கள் அந்தத் தலைப்பிலிருந்து நீக்கப்பட்டன.

உலக சமயங்களுக்கு இடையிலான வாரத்தை ஒட்டி சமயங்களுக்கு இடையிலான தேசிய வாரத்தை பிப்ரவரி மாதம் தொடக்கி வைத்து துணைப் பிரதமரும் கல்வி அமைச்சருமான முஹைடின் யாசின் ஆற்றிய உரையையும் MCCBCHST குறிப்பிட்டுள்ளது.

“ஒரே மலேசியா சிந்தனையின் கீழ் நமது சக மலேசியர்கள் பின்பற்றி வருகிற பல்வேறு சமயங்களை மதித்து கொண்டாடுமாறு முஹைடின் எல்லா மாணவர்களையும் ஆசிரியர்களையும் கேட்டுக் கொண்டுள்ளார்.”

“இந்த விவகாரம் மீது நாங்கள் செவிமடுக்கும் அரசாங்கத்தின் ஒரே குரல்- அந்த கருத்தரங்கை அங்கீகரிக்கும் இஸ்லாமிய விவகாரங்களுக்கான அமைச்சருடையதாகும்.”

“அதே அமைச்சர் சமயங்களுக்கு இடையில் புரிந்துணர்வையும் ஒற்றுமையையும் வளர்ப்பது மீதான அமைச்சரவைக் குழுவுக்கு ஆலோசகர்களில் ஒருவராக இருப்பதும் வினோதமாக இருக்கிறது,” என்றும் அந்த மன்றம் குறிப்பிட்டது.

அரசாங்கம் அந்த “கடுமையான அத்துமீறலுக்கு” பொறுப்பேற்க வேண்டும் எனவும் அந்த அமைப்பு வலியுறுத்தியது. ஒற்றுமையை மேம்படுத்தும் முயற்சிகள்  அனைத்தும் ‘அர்த்தமற்றதாகி’ விட்டதாக அது மேலும் கூறியது.

தலைப்பு மாற்றப்பட்டது

நேற்று ஜோகூர் அரசாங்கம் அந்தக் கருத்தரங்கிற்கான தலைப்பை மாற்றியது. புதிய தலைப்பு  “Liberalisme, Pluralisme dan Gejala Murtad: Apa Peranan Guru Di Dalam Mepertahankan Akidah” (தாராளப் போக்கும் பல்வகைப் போக்கும் மதம் மாற்றமும்: சமயத்தை பாதுகாப்பதில் ஆசிரியர் பங்கு என்ன ?)  என்பதாகும். “முஸ்லிம்களிடையே சமய நம்பிக்கையை வலுப்படுத்துவது” அதன் நோக்கம் என்றும் அது கூறியது.

அரசமைப்பில் பொறிக்கப்பட்டுள்ளவாறு மக்களுடைய உரிமைகளையும் சலுகைகளையும் பாதுகாப்பதாக வாக்குறுதி அளித்துள்ள ஆளும் கூட்டணியில் இடம் பெற்றுள்ள முஸ்லிம் அல்லாத தலைவர்கள் மௌனமாக இருப்பதையும் MCCBCHST சாடியது.

“மலேசியாவில் பெரும்பான்மை மக்கள் அவர்கள் எந்தச் சமயத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் ஒருவர் மற்றொருவருடன் அமைதியாகவும் ஒற்றுமையாகவும் வாழவே விரும்புகின்றனர் என்பதை அரசாங்கத்தில் உள்ள தலைவர்கள் அனைவருக்கும் நாங்கள் நினைவுபடுத்த விரும்புகிறோம்,” என்று அது குறிப்பிட்டது.

அரசாங்கம் உடனடியாக அந்தப் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்றும் MCCBCHST கேட்டுக் கொண்டது.