பிரஞ்சுக் கடற்படைத் தற்காப்புத் தளவாடங்களைத் தயாரிக்கும் DCNS நிறுவனம், முதுநிலை மலேசிய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக கூறப்படுவது தொடர்பில் சுவாராம் என்ற மலேசிய மனித உரிமைப் போராட்ட அமைப்பு அதற்கு எதிராக தொடர்ந்துள்ள சிவில் வழக்கு துரிதமடைந்து வருகிறது.
77.3 பில்லியன் ரிங்கிட் செலவில் இரண்டு ஸ்கோர்ப்பியோன் ரக நீர்மூழ்கிகள் கொள்முதல் செய்யப்பட்டது சம்பந்தமான அந்த வழக்கு தொடர்பான நீதிமன்ற ஆவணங்கள் தங்களுக்குக் கிடைத்துள்ளதாக பிரான்ஸில் உள்ள சுவாராம் வழக்குரைஞர்கள் அந்த அரசு சாரா அமைப்பிடம் வியாழக்கிழமை தெரிவித்தனர்.
இனிமேல் அந்த ஆவணங்களை வழக்குரைஞர்கள் ஆய்வு செய்து எடுக்க வேண்டிய அடுத்த நடவடிக்கை பற்றி சுவாரமுக்கு ஆலோசனை கூற இயலும் என சுவாராம் இயக்குநர் சிந்தியா கேப்ரியல் கூறினார்.
“ஆனால் நாங்கள் அந்த ஆவணங்களைக் காட்சிக்கு வைக்க முடியாது. நாங்கள் அதனைப் பெறலாம். ஆய்வு செய்யலாம். அதனை மேற்கோளும் காட்டலாம். ஆனால் பிரஞ்சுச் சட்டப்படி நாங்கள் அவற்றை வெளியிடக் கூடாது,” என அவர் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
“இது உண்மையில் எங்களுக்குப் பெரிய சவால். என்றாலும் அந்த வழக்கு தோற்றம் பெற்று சரியான பாதையில் முன்னேற்றம் காண்பது குறித்து நாங்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளோம்.”
2009ம் ஆண்டு சுவாராம் முதலில் அந்த வழக்கைச் சமர்பித்தது. இறுதியில் திறந்த நீதிமன்றத்துக்கு அது கொண்டு செல்லப்பட்டுள்ளதையே அவர் அவ்வாறு குறிப்பிட்டார்.
பிரான்ஸில் அந்த வழக்கை மேற்பார்வையிட இரண்டு நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக இரண்டு வாரங்களுக்கு முன்பு சுவாராம் அறிவித்தது. Roger Le Loire, Serge Tournaire ஆகியோரே அந்த இருவர் ஆவர்.
திறந்த நீதிமன்ற விசாரணைக்கு அந்த வழக்கு பதிவு செய்யப்படும் என்பதே அதன் பொருளாகும்.
அந்த நீர்மூழ்கிகளை வாங்கியதின் தொடர்பில் கொடுக்கப்பட்ட தரகுப் பணம், பயணப் பற்றுச்சீட்டுக்கள், கொடுக்கப்பட்ட மற்ற தொகைகள் ஆகியவை பற்றிய விவரங்களும் நீதிமன்ற ஆவணங்களில் அடங்கும்.
இதனிடையே அந்த வழக்கு தொடர்பில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை விளக்குவதற்காக பிரான்ஸில் உள்ள சுவாராம் வழக்குரைஞர்களான William Bourdon, Joseph Brehem ஆகிய இருவரில் ஒருவர் மலேசியாவுக்கு வரக் கூடும் என்றும் கேப்ரியல் அறிவித்தார்.
“எந்த விதமான தகவல்களை வெளியிடலாம், எந்த வகையான பிற்காலத்துக்கு வைத்திருக்கப்பட வேண்டும் என்பது மீது நாங்கள் விவாதிக்க வேண்டியுள்ளது,” என்றும் அவர் சொன்னார்.
“என்றாலும் நாங்கள் முதலில் நிலமையை ஆராய வேண்டியுள்ளது. அவர்கள் இங்கு வர முடியாவிட்டால் நாங்கள் பின்னர் முடிவு செய்யும் ஒர் இடத்தில் நாங்கள் (சுவாராம்) அவர்களைச் சந்திப்போம்,” என கேப்ரியல் வலியுறுத்தினார்.
கடந்த ஆண்டு Bourdon பினாங்கில் நிதி திரட்டும் விருந்து ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திலிருந்து திருப்பி அனுப்பப்பட்டார்.