பெற்றோர் ஆசிரியர் சங்க தேர்தலில் அரசியல் வேண்டாம், சேவியர்

கடந்த நான்கு ஆண்டுகளாக தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டுக்கு சிலாங்கூர் மாநில பக்காத்தான் அரசு மானியங்கள் வழங்கி வருகிறது. இன்று தின குரலில் மலாக்கா புக்கிட் அசாகான் தமிழ்ப்பள்ளியில் நிலவும் நாற்காலி, மேஜை இல்லாத  நிலையே அன்று சிலாங்கூரிலும் நிலவியது என்பதனை யாரும் மறக்கக்கூடாது. தமிழ்ப்பள்ளிகளை அன்றைய அவல நிலையிலிருந்து விடுவிக்க இம்மாநில ஆட்சியையே மாற்ற வேண்டியதாகியது.

இந்த மாற்றத்தால் எடுப்பார் கைபிள்ளையாக இருந்த தமிழ்ப்பள்ளிகள் இன்று தலை நிமிர்ந்து நிற்கின்றன. நாம், எந்த கட்சி என்ற அடிப்படையில் இல்லாமல்  உதவி தேவைப்பட்ட எல்லா தமிழ்பள்ளிகளுக்கும் உதவும் நோக்கில் மாநிலத்திலுள்ள எல்லா  தமிழ்ப்பள்ளிகளுக்கும் உதவி வருகிறோம்.

கடந்த மூன்று ஆண்டுகளாக அமைதியாக நடந்து வந்த பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்க தேர்தல்களும், கூட்டங்களும் இப்பொழுது வீண் சலசலப்புகளை சந்தித்து வருவது வருந்தத்தக்கது. சிலர் அரசியல் காரணங்களுக்காக பெற்றோர் ஆசிரியர் சங்க பதவிகளுக்கு குறிவைப்பதாகவும் வேண்டாத அரசியல் வியக்கியானங்களை பள்ளிகளில் செய்வதாகவும் நிறைய புகார்கள் வரத்தொடங்கி விட்டன.

இப்பொழுது தமிழ்பள்ளிகளில் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வும், சமுதாயம் தமிழ்ப்பள்ளிகள் மீது காட்டும் அக்கறையும்  தொடரவேண்டும். அதனால் பயனடைவது நமது பிள்ளைகளும், நமது மொழி பள்ளிகளும் ஆகும். இவை அனைத்தும் இக்குறுகிய காலத்தில் இச்சமுதாயம் காட்டிய உழைப்புக்கும் ஒற்றுமைக்கும் கிடைத்த வெற்றியாகும்.

இந்த சுபீட்சமான சமுதாய வளர்ச்சியைக்காண சகிக்காத அம்னோவின் கையால்கள் ஆங்காங்கே நமது பள்ளிகளில்  பல கைங்காரியங்களில் ஈடுப்பட்டு அவர்களின் அழிவு வேலைகளை  நடத்திவருகிறார்கள்  என்பதனை நாம் கவனிக்க வேண்டும். மலாக்காவில் பாரிசான் ஆட்சியில்  குறிப்பாக ஒரு ம இ கா  சட்டமன்ற தொகுதியிலுள்ள ஒரு தமிழ்ப்பள்ளியில் மாணவர்களுக்கு நாற்காலி  மேசைகள் இல்லை என்றால் முழு அம்னோ கட்டுப்பாட்டிலுள்ள இடங்களிலிருக்கும்  நமது பள்ளிகளின் அவல நிலைக்கு  வேறு என்ன சான்று வேண்டும்.

இவ்வேளையில் நமது பெற்றோர்கள் முக்கியமாக நினைவில் வைக்க வேண்டியது நமது பிள்ளைகளின்  எதிர்காலம் மற்றும் அவர்களின் நலமுமேயாகும். பள்ளிகள் மற்றும் பிள்ளைகளின் நலத்தில் குறியாக இருப்பவர்களை, பெற்றோர் ஆசிரியர் சங்க பொறுப்பாளர்களாக தேர்ந்தெடுத்தால் எப்பொழுதும் நமது பிள்ளைகளின் நலன் காக்கப்படும். நமது பள்ளிகள் தொடர்ந்து முன்னேற்றம் காணும். ஆனால் அரசியல் இலாபத்திற்க்காக  பள்ளிகளில் ஊடுறுபவர்கள் தேர்தல் முடிந்தவுடன் காணாமல் போய் விடுவார்கள் என்பதனை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஆகவே, சமுதாயத்தில் அனைவரும் ஒன்றிணைந்து தமிழ்ப்பள்ளிகள் மீது அக்கறை உள்ளவர்களை  பெற்றோர் ஆசிரியர்  சங்க பதவிகளுக்கு  தேர்ந்தெடுத்து நம் பள்ளிகளின் வளர்ச்சியை உறுதி செய்ய வேண்டும் என்றார் டாக்டர் சேவியர்ஜெயக்குமார்.

.