அடுத்த பொதுத் தேர்தலில் பிஎன் சிலாங்கூரில் மொத்தமுள்ள 56 சட்டமன்றத் தொகுதிகளில் 36ல் வெற்றி பெற்று மாநிலத்தை மீண்டும் கைப்பற்றும் என அந்த மாநில அம்னோ துணைத் தலைவர் நோ ஒமார் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளார். 36 இடங்கள் என்பது மாநிலச் சட்டமன்றத்தில் மூன்றில் இரு பங்கு பெரும்பான்மைக்கு ஒரிடம் குறைவாகும்
சீன மொழி நாளேடுகளுக்கு அவர் அளித்த பேட்டியில் விவசாய, விவசாய அடிப்படைத் தொழில் அமைச்சருமான நோ ஒமார் அவ்வாறு கூறியுள்ளார். அந்தப் பேட்டி நேற்று நன்யாங் சியாங் பாவ் ஏட்டில் வெளியானது.
அம்னோ தான் போட்டியிடும் 35 இடங்களில் 30 இடங்களை வெல்லும் என்றும் மசீச போட்டியிடும் 14 இடங்களில் ஐந்தில் வெற்றி பெறும் என்றும் மஇகா-வும் கெரக்கானும் தாங்கள் போட்டியிடும் முறையே மூன்று, நான்கு தொகுதிகளில் ஒன்றைப் பிடிக்கும் என்றும் அவர் அந்தப் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
13வது பொதுத் தேர்தலில் சிலாங்கூரில் மீண்டும் வெற்றி பெறுவது பிஎன் இலக்கு எனக் குறிப்பிட்ட நோ ஒமார், மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெறுவது ‘போனஸாக’ இருக்கும் என்றார்.
கடந்த பொதுத் தேர்தலுக்குப் பின்னர் பிஎன் நடவடிக்கைகளுக்கு ஆதரவு மேலோட்டமாக இருந்தது என்றும் அம்னோ/பிஎன் தலைவருமான பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் தலைமைத்துவத்தின் கீழ் நிலைமை மாறி விட்டது என்றும் அவர் கூறிக் கொண்டார்.
பிஎன் நிகழ்வுகளுக்கு மக்களைக் கொண்டு வர அது கூடுதல் பஸ்களை வாடகைக்கு எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதிலிருந்து அது தெளிவாகத் தெரிகிறது என அவர் சொல்லிக் கொண்டார். கடந்த காலத்தில் ஐந்து பஸ்கள் அனுப்பப்பட்டால் அவர் காலியாகத் திரும்பி வரும். ஆனால் இப்போது ஐந்து பஸ்கள் கூட போதுமானதாக இல்லை என்றார் நோ ஒமார்.
பிஎன் நிகழ்வுகளுக்கு 10,000 நாற்காலிகளுக்கு ஏற்பாடு செய்தால் 20,000க்கும் மேற்பட்ட மக்கள் வருவதாகவும் அவர் பெருமையடித்துக் கொண்டார். “சிலாங்கூர் மக்கள் பிஎன் மீது ஆர்வம் காட்டுவதையே அது உணர்த்துகிறது. இல்லை என்றால் அவர்கள் வரமாட்டார்கள்.”
அந்த மாற்றம் வாக்குகளாக மாறுமா என அவரிடம் வினவப்பட்டது. அதற்கு “அவை மாறும் என நம்புவோம்,” என அவர் பதில் அளித்தார்.
சிலாங்கூரில் உள்ள 22 நாடாளுமன்றத் தொகுதிகளில் 12ஐ பிஎன் கைப்பற்றும் என நோ ஒமார் உறுதியாக நம்புகிறார்.
அம்னோ போட்டியிடும் 10 இடங்களில் 7லிலும் மசீச ஏழு இடங்களில் மூன்றையும் மஇகா நான்கு இடங்களில் குறைந்தது இரு இடங்களிலும் வெற்றி பெறும் என அவர் ஆரூடம் கூறினார்.
“பண்டான் தொகுதியை மசீச தக்க வைத்துக் கொள்ளும் எனத் தோன்றுகிறது.”
இதனிடையே அவர் எந்த இடத்தில் போட்டியிடுவார் என்ற கேள்வியைத் தாம் நஜிப்பின் முடிவுக்கு விட்டு விடுவதாக நோ ஒமார் தெரிவித்தார்.
“அம்னோ வெற்றி பெறுவதற்கு என்னால் முடிந்த உதவிகளைச் செய்வதாக நான் வாக்குறுதி அளித்துள்ளேன். ஆனால் யார் மந்திரி புசார் என்பதை முடிவு செய்வது என் வேலை அல்ல,” என்றார் அவர்.