அரசாங்கம் இன உறவுச் சட்டங்களை இயற்றுவதற்குப் பதில் சுஹாக்காமைப் போன்று சம உரிமைகள் ஆணையத்தை அமைக்க வேண்டும் என இளைஞர், விளையாட்டுத் துணை அமைச்சர் கான் பெங் சியூ கருதுகிறார்.
அத்தகைய சட்டங்கள் தேவை இல்லை என வலியுறுத்திய அவர் போதுமான சட்டங்கள் நாட்டில் இருப்பதாகத் தெரிவித்தார்.
இன்று வழக்குரைஞர் மன்றம் இன உறவுகள் மீது ஏற்பாடு செய்த கருத்தரங்கில் கான் உரையாற்றினார். அந்த நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டார்கள்.
“நம்பிக்கையை நாம் எப்படி சட்டமாக்க முடியாதோ அதே போன்று ஒருவரை நேசிக்குமாறு இன்னொருவரை கட்டாயப்படுத்த சட்டம் போட முடியாது,” என்றார் அவர்.
எனவே கட்சிச் சார்பற்ற உறுப்பினர்களைக் கொண்ட சம உரிமைகள் ஆணையத்தை அமைப்பதற்கு முயற்சிகள் செய்யலாம் என கான் குறிப்பிட்டார். அந்த ஆணையம் அமைப்பு நிலைகளில் உள்ள பாகுபாடான கொள்கைகளையும் சட்டங்களையும் ஆய்வு செய்யலாம் என்றும் அவர் சொன்னார்.
அந்த ஆணையம் பொது மக்களிடமிருந்து கிடைக்கும் புகார்களை ஆய்வு செய்து அரசுக்குப் பரிந்துரைகளையும் வழங்கலாம் என அந்த மசீச செனட்டர் தெரிவித்தார்.
அடுத்த நடவடிக்கையாக ஒவ்வொரு அமைச்சும் தங்களது கொள்கைகளை ஆய்வு செய்ய ஒரு குழுவை அமைக்கலாம் என அவர் யோசனை கூறினார்.
பின்னர் நிருபர்களிடம் பேசிய கான், அமைச்சரவையில் தாம் அந்த விஷயத்தை எழுப்பப் போவதாகத் தெரிவித்தார். ஆனால் அது தமது திட்டங்களில் முதலிடம் வகிக்கவில்லை என்றார் அவர்.
இன உறவுகள் மசோதா இன்னும் முடிவாக வில்லை.
உத்தேச இன உறவுகள் மசோதாவின் நடப்பு நிலை பற்றியும் அவரிடம் கேட்கப்பட்டது. அது நடப்புக் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் சமர்பிக்கப்பட மாட்டாது என்பதை அவர் உறுதிப்படுத்தினார்.
“தேர்தல் எந்த நேரத்திலும் எதிர்பார்க்கப்படுவதால் நாடாளுமன்றத்தில் அந்தச் சட்டம் மீது இன்னொரு சுற்று விவாதம் நிகழ்வதை அரசாங்கம் விரும்பப் போவதில்லை,” என்றும் கான் தெரிவித்தார்.
எதிர்ப்பை கிளப்பியுள்ள ஜோகூர் ‘கிறிஸ்துவ மய’ கருத்தரங்கு பற்றிக் குறிப்பிட்ட அவர் பிரதமர் துறை அமைச்சர் ஜமில் பாஹாரோம் மட்டுமே ஏற்பாட்டாளர்களை ஆதரித்துள்ளார் என்றும் மற்றவர்கள் அவ்வாறு செய்யவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
“அதனை ஆதரிப்பதாக கூறியுள்ள அமைச்சர்களும் உள்ளனர். ஆனால் வேறு விதமாக சொன்ன அமைச்சர்களும் உள்ளனர்.”
“இந்த இடத்தில்தான் சம உரிமைகள் ஆணையம் தேவைப்படுகிறது,” என்று கான் குறிப்பிட்டார்.
அரசாங்க பாரங்களில் இனம் பற்றிய பகுதி இன்னும் அவசியமா என்ற கேள்விக்கு அவர் நேரடியாகப் பதில் அளிக்காமல் அரசாங்கம் தனது நோக்கத்தை தெளிவுபடுத்த வேண்டும் என்றார்.
என்றாலும் புள்ளி விவர நோக்கங்களுக்காக அந்தப் பகுதி இருப்பது அவசியம் எனத் தாம் கருதுவதாக கான் கூறினார். “ஆனால் புள்ளி விவரங்களை தவறாகப் பயன்படுத்த வேண்டாம்.” என அவர் அறுதியிட்டுக் கூறினார்.