ரெலா கலைக்கப்பட வேண்டும், வழக்குரைஞர் மன்றம் கோருகிறது

ரெலா என்றழைக்கப்படும் மக்களின் தன்னார்வலர் படைப்பிரிவு கலைக்கப்பட வேண்டும் என்றும் அதற்கான நிதியைக் கொண்டு போலீஸ் படையை வலுப்படுத்தலாம் என்று மலேசிய வழக்குரைஞர் மன்றம் பரிந்துரைத்துள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பரில் அவசரக்கால சட்டம் ரத்து செய்யப்பட்டதால், ரெலாவின் தேவை குறித்து அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் அம்மன்றத்தின் தலலைவர் லிம் சீ வீ கூறினார்.

“27 மில்லியன் மலேசிய மக்களில் 3 மில்லியன் பேர் ரெலா உறுப்பினர்களாக இருக்கின்றனர். அதாவது பத்து மலேசியரில் ஒருவர் (படையில் சம்பந்தப்பட்டுள்ளார்). இந்த எண்ணிக்கை பெரிய அளவிலானதாகும்”, என்று கோலாலம்பூர் வழக்குரைஞர் மன்ற தலைமையகத்தில் இன்று நடந்த ஒரு கருத்தரங்கிற்குப் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

ரெலா சட்டவிரோதமானதாகி விடும்

ரெலா அமைப்பு ஜூன் மாதத்தோடு காலாவதியாவதால் அரசாங்கம் அதைக் கலைத்துவிட வேண்டும் என்றும் லிம் கூறினார்.

ரெலா சம்பந்தப்பட்ட புதிய சட்டம் அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தில் தாக்கல் செய்யப்படும் என்று துணை உள்துறை அமைச்சர் லீ சீ லியோங் கூறினார்.

புதிய சட்டம் என்றால், அது ஜூன் 30 க்குள்  இயற்றப்பட வேண்டும் என்று வழக்குரைஞர் மன்றத்தின் மனித உரிமைகள் குழுவின் தலைவர் அண்ட்ரூ கூ எச்சரித்தார்.

“அரசாங்கம் புதிய சட்டத்தை ஜூன் 30 க்குள் இயற்றவில்லை என்றால், ரெலா சட்டவிரோத அமைப்பாகி விடும்”, என்றாரவர்.