போலீஸ் படை, தேசிய போலீஸ் படைத் தலைவர் மூசா ஹசான் தலைமைத்துவத்தின் கீழ் இயங்கிய போது போலீஸ்காரகளின் இட மாற்றங்கள், பதவி உயர்வுகள் மீது ரகசியக் கும்பல் தலைவர்களுக்கு செல்வாக்கு இருந்ததா?
‘Copgate’ என அழைக்கப்படும் போலீஸ் ஊழலில் பிகே தான் ( BK Tan ) என அடையாளம் கூறப்பட்டுள்ள இன்னொரு ரகசியக் கும்பல் தலைவன்- ஜோகூர் ரகசிய கும்பல் தலைவன் தெங்கு கோ-வுடன் தொடர்புடையவன் என சந்தேகிக்கப்படுகிறது.- முதுநிலை போலீஸ் அதிகாரிகளுடைய இட மாற்றங்கள் பதவி உயர்வுகள் சம்பந்தமாக மூசா-வுக்கு பல முறை ஆலோசனை கூறியிருப்பதாக புதிய குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
மூசா, சட்டத்துறைத் தலைவர் அப்துல் கனி பட்டெய்ல் அப்போதைய ஊழல் தடுப்பு நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து முன்னாள் வர்த்தகக் குற்ற புலனாய்வுப் பிரிவுத் தலைவர் ராம்லி யூசோப் மீதும் அவரைச் சார்ந்த ஆறு போலீஸ் அதிகாரிகள் மீதும் குற்றச்சாட்டுக்களை ஜோடித்ததாக ஏற்கனவே கூறப்பட்டுள்ளது. அந்த ஏழு அதிகாரிகளும் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டனர்.
புதிய குற்றச்சாட்டுக்களில் தான் ( BK Tan )- உடைய ‘யோசனையை’ மூசா கேட்டதாகவும் சில சமயங்களில் தான், போலீஸ் படையில் முக்கியமான நியமனங்கள், இட மாற்றங்கள் தொடர்பான விவாதங்களுக்கு பெட்டாலிங் ஜெயாவில் உள்ள மூசா-வின் இல்லத்துக்கு சென்றுள்ளார் என்றும் சில வட்டாரங்கள் மலேசியாகினியிடம் தெரிவித்தன.
அது குறித்து விளக்கமளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்ட போது மூசா, அப்போதைய உள்நாட்டுப் பாதுகாப்பு அமைச்சின் ஆசீர்வாதத்துடன் இணக்கத்துடன் தான் பங்கேற்பு இருந்ததாகவும் அவருடைய ரகசியக் கும்பல் தொடர்புகள் ‘நல்ல’ ‘கெட்ட’ போலீசாரை அடையாளம் காண உதவியதாகவும் தெரிவித்தார் என அந்த வட்டாரங்கள் கூறின.
இட மாற்றம் செய்யப்படும் அல்லது பதவி உயர்வு வழங்கப்படும் அதிகாரிகளின் பெயர்களைக் கொண்ட ரகசியப் பட்டியல் அடங்கிய நீல நிற ஆவணத்தை மூசா உதவியாளர் வைத்திருந்ததைத் பார்த்ததாக ஒரு வட்டாரம் கூறிக் கொண்டது. அந்த பரம ரகசிய ஆவணத்தின் பிரதி ஒன்றை மூசா தான் -இடம் கொடுத்ததாகச் சொல்லப்படுகிறது.
உள்துறை அமைச்சுக்கு தகவல் கொடுக்கப்பட்டது
சர்ச்சைக்குரிய அந்த விஷயத்தை மூசாவின் முன்னாள் உதவியாளரான ( aide de camp ) ஏஎஸ்பி நூர் அஜிஸுல் ரஹிம் தாஹாரிம் அப்போது பிரதமர் துறையில் அமைச்சராக இருந்த முகமட் ராட்சி ஷேக் அகமட், உள்நாட்டுப் பாதுகாப்புத் துணை அமைச்சராக இருந்த ஜொஹாரி பாஹாரோம் ஆகியோரது கவனத்துக்குக் கொண்டு சென்றார்.
கோ செங் போ என்ற இயற்பெயரைக் கொண்ட தெங்கு கோ, 2005ல் அல்லது 2006ல் ஜோகூர் பாருவில் மூசாவை அவரது ஹோட்டல் அறையில் சந்தித்ததாக இன்னொரு வட்டாரம் மலேசியாகினியிடம் கூறியது. அதனை நூர் அஜிஸுல் உறுதி செய்துள்ளார்.
மூசா, தமக்கு விசுவாசமாக உள்ளவர்களையும் ரகசியக் கும்பல்களுடன் தமக்கு உள்ளதாகக் கூறப்படும் அணுக்கமான ஒத்துழைப்புக்கு மறைமுகமாக ஆதரவளிக்கின்றவர்களுக்கும் பதவி உயர்வு அளித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
நாட்டின் போலீஸ் தலைவராக மூசா தொடர்ந்து பணியாற்றுவதை உறுதி செய்யும் வகையில் வாரிசுத் தொடர் (The line of succession) வடிவமைக்கப்பட்டதாகவும் சொல்லப்பட்டது. அவர் அந்தப் பதவியை நான்கு ஆண்டுகளுக்கு அதாவது 2006ம் ஆண்டு தொடக்கம் 2010ம் ஆண்டு வரை வகித்தார்.
அவரது பதவிக் காலம் நீட்டிக்கப்படாதது குறித்து அவர் ஏமாற்றம் அடைந்ததாகக் கூட கூறப்பட்டது. தமக்கு அடுத்து பொறுப்பேற்கும் சாத்தியமுள்ள இஸ்மாயில் ஒமார் தமது இடத்தை நிரப்புவதற்கு இன்னும் தயாராகவில்லை என மூசா ஒரு முறை கூறியுள்ளார்.
மூசாவின் உதவியாளரான நூர் அஜிஸுல், தமது எஜமானருடைய இரகசியக் கும்பல் தொடர்புகள் எனக் கூறப்படுவது மீது தமக்குத் தெரிவித்ததாக ராம்லி நேற்று மலேசியாகினியிடம் கூறினார்.
“ஏஎஸ்பி நூர் அஜிஸுல் ரஹிம் என்னிடம் அது பற்றி தெரிவித்தார். சட்டத்துறைத் தலைவருடன் சேர்ந்து மூசா என்னைச் சிக்க வைக்க முயலுகிறார் என்ற என் சந்தேகத்தை அது உறுதிப்படுத்தியது. போலீஸ் படி நிலையிலிருந்து நான் நீக்கப்படுவதை உறுதி செய்வதே அதன் நோக்கமாகும்,” என்றார் அவர்.
“எனக்கு எதிராக சுமத்தப்பட்ட மேலோட்டமான குற்றச்சாட்டுக்கள் என்னுடைய அச்சத்தையும் சந்தேகத்தையும் உண்மையென உறுதி செய்தன. என்னுடைய சபா வழக்கில் 75வது சாட்சியாக ஆஜராகும் அளவுக்குக் கூட மூசா சென்றார்.”
“இறுதியில் மற்ற போலீஸ் சாட்சியங்கள் அனைத்துக்கும் முரண்பாடாக சாட்சியமளிக்க மூசா முயன்ற பின்னர் அவர் உண்மையற்ற சாட்சி என கருதப்பட்டார்.”
நூர் அஜிஸுல் மூசாவின் துணைவராக இருந்த முகமட் நஜிப் அப்துல் அஜிஸ். போலீஸ் படை ஆணையத்தில் உள்ள இரண்டு உறுப்பினர்கள் ஆகியோர் உட்பட பல முது நிலை போலீஸ் அதிகாரிகளைச் சந்தித்து உதவி கோரியதாகவும் ஆனால் எந்தப் பலனும் இல்லை என்றும் ராம்லி நினைவு கூர்ந்தார்.
அதனைத் தொடர்ந்து விரக்தி அடைந்த நூர் அஜிஸுல் 2009ம் ஆண்டு அந்த விவகாரம் மீது சத்தியப் பிரமாண வாக்குமூலத்தை வெளியிட்டார்.
நூர் அஜீஸுல் 2005ம் ஆண்டு முதல் 2007ம் ஆண்டு வரை மூசாவுக்குத் தனிப்பட்ட உதவியாளராக பணியாற்றினார்.
நூர் அஜீஸுலின் சத்தியப் பிரமாணப் பிரதி ஒன்று கால ஒட்டத்தில் வலைப்பதிவாளர் ராஜா பெத்ரா கமாருதினின் மலேசியா டுடே இணையத் தளம் உட்பட பல தளங்களில் வெளியானது.
தெங்கு கோ, பிகே தான் ஆகியோருடனான மூசாவின் தொடர்புகளை வெளியிடும் சத்தியப் பிரமாணங்களைப் பல போலீஸ் அதிகாரிகள் வெளியிட்டுள்ளது தமக்குத் தெரியும் என அந்த சத்தியப் பிரமாணத்தில் நூர் அஜிஸுல் குறிப்ப்ட்டுள்ளார்.
“எனக்குத் தெரிந்த தகவல்கள் மற்றும் ஐஜிபி-க்கு உதவியாளராக பணியாற்றியதின் மூலம் மூசா குறித்து அவர்கள் விடுத்த வாக்குமூலங்கள் உண்மையானவை என்றும் அவர்கள் வருணித்துள்ள நிகழ்வுகளை அவை சரியாக பிரதிபலிக்கின்றன என்றும் நான் உறுதி செய்ய முடியும்.”
“தான் (Tan) வழங்கிய யோசனைகள், நகல்கள் அடிப்படையில் பதவி ஆணைகளை ஒருங்கிணைத்து ஒன்று சேர்க்குமாறு உதவியாளர் என்ற முறையில் நான் கேட்டுக் கொள்ளப்பட்டேன்.”
“அந்த நகலின் பிரதிகள் பின்னர் போலீஸ் பதவி ஆணைகளாக அமலாக்கப்பட்டன,” என நூர் அஜிஸுல் தமது சத்தியப் பிரமாணத்தில் கூறியுள்ளார்.
போலீஸ் அதிகாரிகள் மீது குற்றச்சாட்டுக்களை ஜோடிக்குமாறு உத்தரவு
போலீஸ் படையில் ஊழலைத் துடைத்தொழிக்கும் இயக்கத்தின் ஒரு பகுதி என அந்த இட மாற்றங்களுக்கு நியாயம் கற்பிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தவறுகள் செய்துள்ளனர் என்னும் தோற்றத்தைத் தருவதற்கு அவர்களை சிக்க வைப்பதும் அதில் அடங்கியிருந்தது.
“அது போலீஸ் படையில் மூசா ஊழலையும் அதிகார அத்துமீறல்களையும் ஒழிக்கிறார் என்ற எண்ணத்தை அளித்தது. ஆனால் உண்மைக்கும் அதற்கும் வெகு தொலைவாகும்.”
“ஐஜிபி பற்றி அந்த அதிகாரிகள் திரட்டிய அனைத்துத் தகவல்களும் பொய் எனக் கூறும் அளவுக்கு அந்த அதிகாரிகளுடைய நம்பகத்தன்மை சிதறடிக்கப்பட்டது.”
“அந்த அதிகாரிகள் துயரங்களை அனுபவித்தனர். தங்களது குடும்பம், சொந்த ஊர் ஆகியவற்றிலிருந்து வெகு தொலைவுக்கு மாற்றப்பட்டனர்.”
“பதவி உயர்வு வாய்ப்புக்கள் மறுக்கப்பட்டது, உரிய நடைமுறை இல்லாத ஒழுங்கு நடவடிக்கைகள், திறமை நிரூபிக்கப்படாத அவர்களுடைய உதவியாளர்களுக்கு பதவி உயர்வு போன்ற துயரங்களை அவர்கள் அனுபவித்தனர். ‘நிர்வாக’ ஆணைகளை மீறுகின்றவர்களுக்கு என்ன நடக்கும் என்பதற்கான எச்சரிக்கையாக அந்த அதிகாரிகள் கருதப்பட்டனர்.”
எதிர்ப்பாளர்களைக் களையெடுக்கின்ற அந்த நடவடிக்கையினால் போலீஸ் படையின் நெறிமுறைகள் மிகவும் தாழ்ந்து விட்டன. அதன் விளைவாக மூசா காலத்தில் குற்றச் செயல் விகிதம் பெரிதும் அதிகரித்திருந்தது என்றும் அந்த முன்னாள் உதவியாளர் தெரிவித்தார்.
“தெங்கு கோ-வை விடுவிக்குமாறு சட்டத்துறைத் தலைவர் ஆணையிட்டதும் சட்ட நுணுக்கங்களைப் பயன்படுத்தி கிரிமினல் ஒருவர் விடுவிக்கப்பட்டதையும் தங்களது சொந்த சகோதர அதிகாரிகள் நீதிமன்றத்துக்கு இழுக்கப்படுவதையும் கண்டு அரச மலேசியப் போலீஸ் படையில் இருந்த பலர் நிலகுலைந்து விட்டனர்,” என அவர் வருத்தமுடன் கூறினார்.
“இதனை வெளியிட்டதற்காக அமைச்சரும் அரசாங்கமும் எனக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டும். (இப்போதைய ஐஜிபி) இஸ்மாயில் ஒமாரின் புதிய தலைமைத்துவத்தின் கீழ் படை மேம்பாடு காணும் என்ற எதிர்பார்ப்புடன் நான் இதனைச் செய்துள்ளேன்,” என அவர் தமது சத்தியப் பிரமாணத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் முன்னாள் குழு உறுப்பினரான ரோபர்ட் பாங், மூசாவின் உதவியாளராக இருந்த நூர் அஜிஸுல் தம்மை அணுகியதை மலேசியாகினி தொடர்பு கொண்ட போது உறுதி செய்தார். தாமும் அஜிஸுகும் முன்னாள் ஐஜிபி ஒருவரைச் சந்தித்து அந்த விவகாரத்தில் அவருடைய உதவியைக் கோரியதாகவும் அவர் தெரிவித்தார்.
நூர் அஜிஸுல் எல்லாவற்றையும் சொல்லத் தயார்
2009ம் ஆண்டு நூர் அஜிஸுலின் சத்தியப் பிரமாணத்துக்கு பதில் அளிக்குமாறு மலேசியாகினி விடுத்த வேண்டுகோளை மூசா நிராகரித்து விட்டார். இந்தப் புதிய குற்றச்சாட்டு மீது கடந்த சில நாட்களாக அவரிடமிருந்து எந்தப் பதிலும் இல்லை.
இப்போது ஒர் அமைச்சில் பணியாற்றும் நூர் அஜிஸுலுடன் அண்மைய வாரங்களில் மலேசியாகினி தொடர்பு கொண்டது. தமது சத்தியப் பிரமாணத்தில் உள்ள விவரங்களை உறுதி செய்யுமாறு அவரிடம் கேட்டுக் கொள்ளப்பட்டது. அவரும் அவற்றை உறுதி செய்தார்.
ஆனால் அந்த விவகாரம் பற்றி மேலும் கருத்துக் கூற அவர் மறுத்து விட்டார். பஞ்சாயத்து மன்றம் அமைக்கப்பட்டால் அதில் சாட்சியமளிப்பதையே தாம் விரும்புவதாக அவர் சொன்னார்.
பஞ்சாயத்து மன்றம் அமைக்கப்பட்டால் அப்துல் கனி, மூசா, ஏசிஏ ஆகியவற்றுக்கு எதிராக சாட்சியமளிக்க பல முன்னாள், இன்னாள் போலீஸ் அதிகாரிகள் தயாராக இருப்பதாக மலேசியாகினி ஏற்கனவே செய்தி வெளியிட்டுள்ளது.
நீதிபதிகள் நியமனங்களில் முது நிலை வழக்குரைஞர் ஒருவர் தரகராக செயல்பட்டார் எனக் கூறப்பட்ட லிங்கம் ஒளிநாடா ஊழலைப் போன்று ‘Copgate’ என அழைக்கப்படும் போலீஸ் ஊழலும் இருப்பதாகத் தோன்றுகிறது. அந்த லிங்கம் ஒளிநாடா ஊழல் தொடர்பில் அரச விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.
போலீஸ் ஊழல் தொடர்பில் சுமத்தப்பட்டுள்ள புதிய குற்றச்சாட்டும் கடுமையானதாகும். காரணம் போலீஸ் அதிகாரிகளுடைய இட மாற்றம், பதவி உயர்வு ஆகியவற்றில் இரகசியக் கும்பல் தலைவர் செல்வாக்கு பெற்றிருந்தாக கூறப்படுவது உட்பட பல விஷயங்கள் அந்தக் குற்றச்சாட்டில் அடங்கியுள்ளன.
ஆனால் பஞ்சாயத்து மன்றம் அமைக்கப்பட வேண்டும் என்ற யோசனையை பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் நிராகரித்து விட்டார்.
“அந்தக் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் தேவை,” என்றார் அவர்.