காமிலியா இப்ராஹிம்: “நோய்வாய்ப்பட்ட உறுப்பினர் நம்மை அழித்து விடுவார்”

அம்னோ மகளிர் பிரிவு “தொற்று நோய் பற்றிக் கொண்ட வீரர்” ஒருவருடன் 13வது பொதுத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட முடியாது என அதன் துணைத் தலைவு காமிலியா இப்ராஹிம் கூறுகிறார். அவர் அந்தப் பிரிவின் தலைவி ஷாரிஸாட் அப்துல் ஜலிலையே குறிப்பிடுகிறார் என்பது தெளிவு.

ஷாரிஸாட் தமது குடும்பத்துடன் பிணைக்கப்பட்டுள்ள தேசிய விலங்குக் கூட நிறுவன ஊழல் தொடர்பில் விலகிக் கொள்ள வேண்டும் என்ற தமது வேண்டுகோளை காமிலியா மீண்டும் வலியுறுத்தினார்.

இன்றைய சூழ்நிலை போருக்கு செல்லும் இராணுவம் ஒன்றின் நிலையைப் போன்று உள்ளதாக அவர் கூறினார்.

“எந்த ஒரு போரைப் போன்றும் தொற்று நோயுடன் வீரர் ஒருவர் இருந்தால் அந்த நோய் முழு இராணுவத்துக்கும் பரவி விடக் கூடும். அந்த சூழ்நிலையில் அந்த வீரரைப் போர்க்களத்துக்குக் கொண்டு செல்ல வேண்டுமா?”

“நமது உறுப்பினர்கள் நோய் வாய்ப்பட்டு மரணமடைய வேண்டும் என நாம் விரும்புகிறோமா அல்லது போர்க்களத்துக்கு நமது குழு செல்லும் பொருட்டு அந்த உறுப்பினரை அவர் குணமடையும் வரையில் நோய்த் தடுப்பு நிலையத்தில் வைக்க வேண்டுமா? என மிங்குவான் மலேசியாவில் இன்று வெளியான பேட்டியில் காமிலியா வினவினார்.

எதிர்வரும் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு முதலில் மகளிர் பிரிவு உறுப்பினர்கள் குறிப்பாக தலைவர்கள் தங்கள் பிரச்னைகளைத் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.

“அந்த வகையில் அம்னோ மகளிர் பிரிவு தனது தோற்றத்தை தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும். சர்ச்சைகள் நிறைந்ததாக அது பார்க்கப்படக் கூடாது,” என்றும் காமிலியா வலியுறுத்தினார்.

இரண்டு பெண்களும் ‘அணுக்கமாக இல்லை’

ஷாரிஸாட்டுடனான அவரது உறவுகள் குறித்து அவரிடம் அந்தப் பேட்டியில் வினவப்பட்டது. அதற்கு தாம் “ஷாரிஸாட்டுடன் மிக அணுக்கமாக இல்லை” அவர் பதிலளித்தார். என்றாலும் விவாதங்களுக்காக தாங்கள் சந்திப்பது உண்டு என்றார் அவர்.

தமக்கு செல்வாக்கு இல்லை எனக் கூறப்படுவதை அந்த அம்னோ மகளிர் துணைத் தலைவி மறுத்தார். உண்மையில் தாம் போட்டியின்றி தேர்வு பெற்றதாக கூறிய அவர், எல்லாத் தரப்புக்களும் தம்மை ஏற்றுக் கொண்டதை அது காட்டுவதாகத் தெரிவித்தார்.

“இன்னொரு வேட்பாளர் நியமனத்துக்கு போதுமான நியமனங்களைப் பெறத் தவறியதால் நான் போட்டியின்றித் தேர்வு பெற்றேன்,” எனறார் அவர்.

இயற்கையாகவே தாம் விளம்பரத்தை விரும்பாதவர் எனக் குறிப்பிட்ட காமிலியா “நான் எனது பணிகளைச் செய்கிறேன்,” என்றார்.