பர்மாவில் நடந்துமுடிந்த இடைத் தேர்தலில் ஆங் சான் சூ சீயின் கட்சி போட்டியிட்ட 44 தொகுதிகளிலும் வெற்றிபெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இடைத்தேர்தல் நடந்த 45 தொகுதிகளில் 44 தொகுதிகளில் சூ சீயின் ஜனநாயகத்துக்கான தேசிய லீக் கட்சி போட்டியிட்டது; ஒரு தொகுதியில் அக்கட்சி வேட்பாளரின் மனு நிராகரிக்கப்பட்டிருந்தது.
ஆங் சான் சூசி தலைமையிலான என்எல்டி என்ற ஜனநாயகத்துக்கான தேசிய லீக் கட்சி இரண்டு தசாப்தங்களின் பின்னர் இப்போது தான் தேர்தலொன்றில் போட்டியிட்டுள்ளது.
பர்மாவைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஆளும் இராணுவ- பின்புல அரசாங்கம் அண்மையில் அரசியல் சீர்திருத்தங்களைக் கொண்டுவர உறுதியளித்திருந்த நிலையில், உலகம் இந்தத் தேர்தலை ஒரு பரீட்சையாக பார்க்கிறது.
தேர்தலுக்கான பிரசாரங்களின் போது, வெளிநாட்டு ஊடகவியலாளர்களுக்கும் அனைத்துலக கண்காணிப்பாளர்களுக்கும் பல ஆண்டுகளுக்குப் பின்னர் அங்கு தாராளமான அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.
தேர்தல் சுமூகமாக நடந்தால் அந்நாட்டுக்கு எதிராக உள்ள சில தடைகளை விலக்கிக்கொள்ளத் தயார் என்று ஐரோப்பிய ஒன்றியம் உறுதி வழங்கியிருந்தது.
இதற்கிடையில், நேற்றைய வாக்குப்பதிவின் போது தலைநகர் நேப்பிடோவில் பல முறைகேடுகள் நடந்துள்ளதாக என்எல்டி கட்சி தேர்தல் ஆணையத்துக்கு முறைப்பாடு செய்துள்ளது.
வாக்குச்சீட்டில் தமது கட்சி சின்னத்துக்கு நேரே மெழுகு பூசப்பட்டிருந்ததை பல இடங்களில் அவதானித்ததாகவும், மெழுகை உரித்துவிட்டு அந்த வாக்குகளை செல்லுபடி அற்றதாக்கும் முயற்சிதான் அது என்றும் என்எல்டி சுட்டிக்காட்டியுள்ளது.
பின்னணி
பர்மாவில் பல தசாப்தங்களாக தொடர்ந்த இராணுவ ஆட்சியின் முன்னாள் பிரமுகர்களும் தற்போது ஆளும் இராணுவ அனுசணை கொண்ட அரசாங்கமும் பரவலான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுவருவதாக நெடுநாளாக குற்றஞ்சாட்டப்பட்டுவந்தது.
ஆனால், 2010 இல் புதிய தலைமுறைத் தலைவர்களிடம் அதிகாரம் மாறத் தொடங்கியது முதல் அங்கு மாற்றங்களுக்கான அறிகுறிகள் தென்படுவதாக அனைத்துலம் கருதியது.
பல அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டனர், ஊடகங்கள் மீதான கெடுபிடிகள் தளர்த்தப்பட்டன, குறிப்பாக ஆங் சான் சூசி மற்றும் அவரது என்எல்டி கட்சியின் அரசியல் மீள் பிரவேசம் தொடங்கியது.
1990 பொதுத் தேர்தலில் என்எல்டி அமோக வெற்றி பெற்ற போதிலும் இராணுவம் ஆட்சியை ஒப்படைக்க மறுத்தது. அதன்பின்னர் கடந்த 20 ஆண்டுகளில் அதிகமான காலத்தை சூசி வீட்டுக்காவலில் தான் கழித்தார்.
கடந்த 2010 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலிலும் அவர் போட்டியிட அனுமதிக்கப்படவில்லை. இன்றைய தேர்தலில் போட்டியிட்ட 17 எதிரணி அரசியல் கட்சிகளில் ஒன்றுதான் ஆங் சான் சூசியின் இந்த என்எல்டி.
அங்கு ஆட்சியில் உள்ள இராணுவ அனுசரணை அரசாங்கத்தின் ஆதிக்கத்தில் இந்த 45 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பெரிதளவு மாற்றத்தைக்கொண்டுவந்துவிடாது என்பதும் இங்கு கவனிக்கப்பட வேண்டிய விடயம்.