அடுத்த பொதுத் தேர்தலில் தான் போட்டியிடுவதற்கு நான்கு நாடாளுமன்ற 12 சட்ட மன்றத் தொகுதிகளை ஒதுக்குமாறு பிபிபி என்ற மக்கள் முற்போக்குக் கட்சி கேட்டுக் கொண்டுள்ளது.
அந்த இடங்கள் பினாங்கு, பேராக், கோலாலம்பூர் ஆகியவற்றில் உள்ளதாக அந்தக் கட்சியின் தலைவர் எம் கேவியஸ் கூறினார். தேர்தல் வேட்பாளர்களை முடிவு செய்வது பாரிசான் நேசனல் தலைவர் என்றமுறையில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கைப் பொறுத்ததாகும் என்றார் அவர்.
கோலாலம்பூரில் நேற்று பத்துமலை-மாரான் ஒரே மலேசியா பெரு நடையை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்த பின்னர் கேவியஸ் நிருபர்களிடம் பேசினார்.
பிபிபி மேற்கொண்ட கள ஆய்வு அடிப்படையில் அந்த இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.
2008 பொதுத் தேர்தலில் பேராக்கில் தைப்பிங் நாடாளுமன்றத் தொகுதியும் ஜோகூரில் பாசிர் பெர்டாமார் தொகுதியும் பிபிபி-க்கு கொடுக்கப்பட்டது. அதில் அதன் வேட்பாளர்கள் டிஏபி வேட்பாளர்களிடம் தோல்வி கண்டார்கள்.
பிஎன் -னுக்கு புதிய வாக்காளர்களுடைய ஆதரவைக் கவருவதற்காக பல திட்டங்களை பிபிபி தயாரித்துள்ளதாக தெரிவித்த கேவியஸ், கலந்துரையாடல்கள், கருத்தரங்குகள், கூட்டங்கள் ஆகியவை அவற்றுள் அடங்கும் என்றார்.
பெர்னாமா