‘வெறுப்பு இயக்கம் பினாங்கு முதலமைச்சருக்கு அபாயத்தை கொண்டு வருகிறது’

பினாங்கு பாயான் முத்தியாரா பள்ளிவாசல் ஒன்றுக்கான நிலம் பற்றி பினாங்கு அம்னோவும் இரண்டு ஊடக அமைப்புக்களும் தொடர்ந்து “பொய்களை” வெளியிட்டு வந்தால் முதலமைச்சர் லிம் குவான் எங்-கின் தனிப்பட்ட பாதுகாப்புக்கும் பொதுப் பாதுகாப்புக்கும் அவை பொறுப்பேற்க வேண்டியிருக்கும்.

இவ்வாறு லிம்-மின் அரசியல் செயலாளர் ஜைரில் கிர் ஜொஹாரி இன்று விடுத்த ஒர் அறிக்கையில் கூறியிருக்கிறார். 

 மலாய் உரிமைகள் நெருக்குதல் அமைப்பான பெர்க்காசா லிம்-முடன் நேரடியாக மோதப் போவதாக மருட்டல் விடுத்துள்ளதால் முதலமச்சருடைய பாதுகாப்பைச் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்றும் அவர் சொன்னார்.

பினாங்கு அம்னோ தலைவர்களும் லிம்-முக்கு எதிராக ” வெறுப்பும் வன்முறையும் ” கலந்த மொழியைப் பயன்படுத்தி வருவதாகவும் அவர் கூறிக் கொண்டார்.

“அந்தப் பொய்கள் தொடர்ந்து தொலைக்காட்சியிலும் பிஎன் கட்டுக்குள் உள்ள பத்திரிக்கைகளிலும் மலாய்க்காரர் அல்லாதாருக்கு எதிராகவும் முஸ்லிம் அல்லாதாருக்கு எதிராகவும் வெறுப்புணர்வைத் தூண்டி விட  பெரிய செய்திகளாகப் போடப்பட்டு வருகின்றன.”

“அத்தகைய பொய்களை சாதாரண ஏப்ரல் முட்டாள் நகைச்சுவைகளாக எடுத்துக் கொள்ள முடியாது,” என்றார் ஜைரில்.

அந்த நிலம் “விற்பனை செய்யப்பட்டது அல்லது காணாமல் போனது” பற்றி விளக்குவதற்கு லிம்-முக்கு ஒரு வாரக் காலக் கெடுவை வழங்கும் இறுதி எச்சரிக்கையை விடுத்த- கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற பெர்க்காசா பேரணி பற்றி அவர் கருத்துரைத்தார்.

பெர்க்காசா இளைஞர் தலைவர் ரிசுவான் அஸுடின் தலைமையில் இயங்கிய அந்த அமைப்பு “மிகவும் கொச்சையாகவும்  வன்முறையாகவும்” அங்கு நடந்து கொண்டதாக தமக்குத் தெரிவிக்கப்பட்டது என்றும் ஜைரில் குறிப்பிட்டார்.

விளக்கம் கிடைக்கா விட்டால் தனிப்பட்ட முறையில் லிம்-முடன் மோதப் போவதாகவும் அந்த அமைப்பு மருட்டியுள்ளது என்றார் அவர்.

அம்னோ நடவடிக்கையை போலீஸ் கவனத்தில் கொள்ள வேண்டும் என வலியுறுத்திய ஜைரில் லிம்-மின் தனிப்பட்ட, பொதுப் பாதுகாப்புக்கு அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் “அது சமயத்தைப் பயன்படுத்துவதாக” வருணித்தார்.

அந்தக் குற்றச்சாட்டுக்களை லிம் மறுத்துள்ள போதிலும் அந்த மறுப்பை உத்துசான் மலேசியாவும் டிவி3ம் வெளியிட மறுத்துள்ளதுடன் லிம்-முக்கு எதிரான கூற்றுக்களை அடிக்கடி பெரிய செய்திகளாக போட்டு வருகின்றன என்றும் அவர் சொன்னார்.

“அந்தப் பொய்களைக் கண்டு பல முஸ்லிம்கள் மிகவும் கவலை அடைந்துள்ளனர். அவர்களில் பலர் தனிப்பட்ட முறையில் லிம்-மை அணுகி விளக்கம் கேட்டுள்ளனர். அந்தக் குற்றச்சாட்டுக்கள் அம்னோ வெளியிடும் அப்பட்டமான பொய்கள் என்பதை அறிந்து அவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்…”

லிம் போன்ற மலாய் அல்லாத, முஸ்லிம் அல்லாத தலைவருக்கு எதிராக கூறப்படும் அந்த்தகைய இனவாதமும் சமயப் பொய்களும் பாவமானவை, ஏற்றுக் கொள்ள முடியாதவை என அவர்கள் கருதுகின்றனர். காரணம் அவை லிம்-முக்கு தனிப்பட்ட முறையில் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளன.”