பிஎன் இடங்களிலும் வாக்காளர் எண்ணிக்கை பெருகியுள்ளது

பக்காத்தான் ராக்யாட் வசம் உள்ள தொகுதிகளில் மட்டும் வாக்காளர் எண்ணிக்கை பெரிதும் அதிகரிக்கவில்லை, அம்னோ வசம் குவா மூசாங், பெக்கான் தொகுதிகளில் உட்பட பல பிஎன் இடங்களிலும் வாக்காளர் எண்ணிக்கை பெருகியுள்ளது.

2008 பொதுத் தேர்தலுக்குப் பின்னர் வாக்காளர் எண்ணிக்கை 20 விழுக்காட்டுக்கு மேல் கூடியுள்ள 17 நாடாளுமன்றத் தொகுதிகளில் அவையும் அடங்கும்.

அந்த அதிகரிப்பு தேசிய சராசரி உயர்வான 13.8 விழுக்காட்டை விட மிக அதிகமாகும். 2011ம் ஆண்டு இறுதி கால் பகுதிக்கான புதுப்பிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலில் அந்த விவரங்கள் காணப்படுகின்றன.

12வது பொதுத் தேர்தலில் அந்த 17 இடங்களில் 9ல் பக்காத்தான் வென்றது- புக்கிட் கந்தாங் (2009 இடைத் தேர்தலில் பக்காத்தான் தக்க வைத்துக் கொண்டது), கோப்பெங், உலு சிலாங்கூர் (2010 இடைத் தேர்தலில் பிஎன் அந்தத் தொகுதியை மீண்டும் கைப்பற்றியது), சிலாயாங், உலு லங்காட், செர்டாங், பூச்சோங், சுபாங், கோத்தா ராஜா ஆகியவை அந்த 9 தொகுதிகளாகும்.

குவா மூசாங்கிலும் பெக்கானிலும் வாக்காளர் எண்ணிக்கை பெரிதும் கூடிருப்பதும் வியப்பளிக்கும் விஷயமாகும். காரணம் அவை இரண்டும் மக்கள் தொகை வளர்ச்சி குறைவாக இருக்கும் கிராமப்புறங்களில் உள்ளன.

அத்துடன் அவை இரண்டும் பிஎன் கோட்டைகளாகும். அங்கு கடும் அரசியல் போட்டிகள்

எதிர்பார்க்கப்படவில்லை. குவா மூசாங்கில் கடந்த மூன்று ஆண்டுகளில் வாக்காளர் எண்ணிக்கை 28,8986 லிருந்து 37,259 ஆகக் கூடியுள்ளது. கூடுதல் வாக்கு எண்ணிக்கை 8,273 ஆகும். அது 28.5 விழுக்காடு ஏற்றத்தை குறித்தது,

அந்தத் தொகுதிக்கான பேராளராக அம்னோ மூத்த உறுப்பினரும் முன்னாள் நிதி அமைச்சருமான  தெங்கு ரசாலி ஹம்சா 9 தவணைகளாக இருந்து வருகிறார்.

செல்வாக்கு குறைந்து விட்டதால் அந்தத் தொகுதியில் நிற்க வேண்டாம் சில குவா மூசாங் அடி நிலைத் தலைவர்கள் தெங்கு ரசாலியைக் கேட்டுக் கொண்டுள்ளனர். கிளந்தானுக்கான எண்ணெய் உரிமப் பணம், பெல்டாவை பங்குப் பட்டியலில்  சேர்ப்பது ஆகிய விவகாரங்களில் அவர் எதிர்க்கட்சிகளை ஆதரிக்கிறார்.

பெக்கானில் கடந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து வாக்காளர் எண்ணிக்கை கூடத் தொடங்கியது. சில கனரகத் தொழில் கூடங்கள் அமைந்துள்ள கிராமப்புறத் தொகுதியாகும். அங்கு 2008ம் ஆண்டுக்குப் பின்னர் அங்கு வாக்காளர் எண்ணிக்கை 31.8 விழுக்காடு கூடியுள்ளது.

அந்தத் தொகுதி அம்னோ தலைவரும் பிரதமருமான நஜிப் அப்துல் ரசாக்-கின் வலுவான கட்டுக்குள் உள்ளது.

அம்னோ தலைமைச் செயலாளர் தெங்கு அட்னான் தெங்கு மான்சோர் வசமிருக்கும் புத்ரா ஜெயா தொகுதியில் வாக்காளர் எண்ணிக்கை 81 விழுக்காடு கூடியுள்ளது. பல அரசாங்க ஊழியர்கள் தாங்கள் வாக்களிக்கும் தொகுதியை புத்ரா ஜெயாவுக்கு மாற்றிக் கொண்டது அதற்கு முக்கியக் காரணமாகும்.

ஜோகூர் தெப்ராவ் தொகுதியில் எண்ணிக்கை அதிகரிப்பு 30 விழுக்காட்டைத் தாண்டியுள்ளது. மசீச-வின் தெங் பூன் சூன் வசம் அந்தத் தொகுதி உள்ளது. தாம் மீண்டும் போட்டியிடப் போவதில்லை என தெங் அறிவித்துள்ளார்.

பக்காத்தான் தனது தொகுதிகளில் வாக்காளர் எண்ணிக்கை மாற்றங்களை கண்காணித்து வருகிறது. கிராமப் புறங்களில் எண்ணிக்கை கூடுவதற்கு அடுத்த பொதுத் தேர்தலில்பிஎன் -னுக்கு ஆதரவு கிடைக்கும் வகையில் வாக்காளர்கள் மாற்றப்படுவதும் மோசடியும் காரணம் என அது கூறியது.

ஆனால் மலேசியர்கள் கடைசி நேரத்தில் பதிவு செய்யும் பழக்கத்தைக் கொண்டவர்கள் என்பதால் அது இயல்பான அதிகரிப்பு என தேர்தல் ஆணையம் தெரிவித்தது.