பிரதமரும் பிஎன் தலைவருமான நஜிப் அப்துல் ரசாக், கூட்டரசை ஆளும் கூட்டணிக்கு வாக்களிக்குமாறு சீனர்களைத் திசை திருப்பும் முயற்சிகளில் வெற்றி பெற முடியாது என்பதால் அவர் பிரிபூமி என்ற பூர்வகுடி வாக்காளர்கள் மீது கவனம் செலுத்த வேண்டும்.
நஜிப் அதனைச் செய்யா விட்டால் ‘பிரிபூமி மக்களையும் இழக்கக் கூடும்’ என முன்பு துணை அமைச்சராகவும் அம்னோ உச்ச மன்ற உறுப்பினராகவும் பணியாற்றியுள்ள அப்துல்லா அகமட் கூறினார்.
அடுத்த தேர்தலில் வெற்றி பெறுகின்ற தரப்பை முடிவு செய்யப் போவது “பிரிபூமி வாக்காளர்கள்” என்பதால் அவர்களை “நல்ல முறையில் கவனித்துக் கொள்ளுமாறு” நஜிப்புக்கு அவர் அறிவுரை கூறினார்.
“Apa yang dikejar tak dapat, dikendong tercicir,” என்னும் மலாய் பழமொழியையும் அவர் எடுத்துரைத்தார்.
டிஏபி பெரும்பாலான சீனர் பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெறும் என்றும் கலப்பு இனத் தொகுதிகளை பிஎன்-னும் பக்காத்தான் ராக்யாட்டும் பகிர்ந்து கொள்ளும் என்றும் டோலா கோக் லானாஸ் எனவும் அறியப்படும் அப்துல்லா ஆரூடம் கூறினார்.
“அதனால் மலாய் பெரும்பான்மையைக் கொண்ட 100க்கும் மேற்பட்ட தொகுதிகளே எஞ்சியுள்ளன. அவற்றில் எந்தக் கட்சி அதிகமான இடங்களை வெல்கிறதோ அதுதான் அரசாங்கத்தை அமைக்கும்,” என்றார் அவர்.
அப்துல்லா, நஜிப்பின் தந்தையும் இரண்டாவது பிரதமருமான அப்துல் ரசாக் ஹுசேனுக்கு அரசியல் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.
ஜோகூர்,பாகாங், சபா, பெர்லிஸ், நெகிரி செம்பிலான், மலாக்கா, சரவாக் ஆகியவை இன்னும் அம்னோ/பிஎன் வலுவான பிடிக்குள் இருப்பதாகச் சொன்னார்.
அதே கருத்தை அவர் கடந்த ஜனவரி மாதம் சிங்கப்பூரில் ஆற்றிய சொற்பொழிவின் போதும் குறிப்பிட்டுள்ளார்.
“பினாங்கு, கிளந்தான்,சிலாங்கூர், கோலாலம்பூர் கூட்டரசுப் பிரதேசம் ஆகியவை போய் விட்டன. பேராக், கெடா, திரங்கானு ஆகியவற்றில் யார் முதலிடத்தை பெறுவர் என்பது கேள்விக்குறியாகும்.”
“என்னுடைய கணக்கு சரி என்றால் மஇகா, மசீச, கெரக்கான் மற்றும் இதர உறுப்புக் கட்சிகள் வழங்கும் அர்த்தமுள்ள ஆதரவுடன் அம்னோ வெற்றி பெறும் வாய்ப்புக்கள் ஒரு படி கூடுதலாகவே உள்ளது.”
Ketuanan Melayu (மலாய் மேலாண்மை) என்னும் சொல்லை உருவாகியவர் அப்துல்லா என்பதை இங்கு குறிப்பிட வேண்டும்.
“இப்போது தேர்தல் நிகழ்ந்தால் முடிவு மிக அணுக்கமாக இருக்கும் ஆனால் தொங்கு நாடாளுமன்றம் வராது,” என்றார் அப்துல்லா.
தேர்தல் தேதியைத் தேர்வு செய்வது
தேர்தல்களை “நோன்புப் பெரு நாளுக்கு பின்னர் ஹஜ் பயணங்களுக்கு முன்னதாக” அல்லது செப்டம்பர் மாதம் வரவு செலவுத் திட்டம் தாக்கல் செய்யப்பட்டவுடன் தேர்தல்களை நடத்துவது விவேகமாகும் என அவர் நம்புகிறார்.
“நான் பிரதமராக இருந்தால் பொருளாதாரம் நன்றாக இருக்கும் போது, மக்களிடைய நல்ல உணர்வுகள் காணப்படும் போது நாடாளுமன்றத்தைக் கலைக்குமாறு நான் அகோங்கிற்கு ஆலோசனை கூறுவேன். செப்டம்பரில் வரவு செலவுத் திட்டத்துக்கு பின்னர் அது நடக்க முடியும்.”
“பிஎன் அரசாங்கம் இப்போது பணத்தை கொடுத்துக் கொண்டிருக்கிறது. ஆனால் எவ்வளவு காலத்துக்கு அதனைத் தொடர்ந்து செய்ய முடியும்?”
“அரசாங்கம் பெட்ரோலுக்குத் தொடர்ந்து உதவித் தொகைகளைக் கொடுப்பது விவேகமானதாகும். அதனால் இந்தோனிசியாவில் இப்போது நிகழ்கின்ற ஆர்ப்பாட்டங்களை இங்கு தவிர்க்க முடியும்.”
உலக எண்ணெய் விலைகள் அதிகரித்துள்ள வேளையில் உள் நாட்டு விலையை அதே நிலையில் வைத்திருப்பதற்காக அரசாங்கம் ரோன் 95 ரகப் பெட்ரோலுக்குத் தான் வழங்கும் உதவித் தொகையை ஒரு லிட்டருக்குப் பத்து சென் கூட்டியுள்ளதாக உள் நாட்டு வாணிக, கூட்டுறவு, பயனீட்டாளர் விவகார அமைச்சர் இஸ்மாயில் சாப்ரி யாக்கோப் அறிவித்தார்.