பள்ளிவாசல் நிலப் பிரச்னை: பினாங்கு அம்னோ இளைஞர் பிரிவு குறை கூறப்பட்டது

பாயான் முத்தியாராவில் உள்ள பள்ளிவாசல் நிலம் தனியார் மேம்பாட்டு நிறுவனம் ஒன்றிடம் ‘விற்கப்பட்டது’ தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சையில்  உண்மையில்லாத அறிக்கைகளை வெளியிடுவதாக  அம்னோ இளைஞர் பிரிவை பினாங்கு பாஸ் துணை ஆணையர் முஜாஹிட் யூசோப் ராவா சாடியிடிருக்கிறார்.

பினாங்கு மாநிலத்தின் “தூய்மையான” புதல்வன் என தம்மை வருணித்துக் கொண்ட அவர் மாநில அம்னோ இளைஞர் தலைவர் ஷேக் ஹுசேன் மைதின் அந்தப் பிரச்னையை ‘திசை திருப்புவதாக’ குற்றம் சாட்டினார்.

‘ பினாங்கு மலாய்க்காரர்களின் ஹீரோ’ எனத் தம்மை எண்ணிக் கொண்ட ஒருவர் அந்த விவகாரம் தொடர்பில் வெளியிடும் உண்மையற்ற தகவல்களை வெளியிடும் அம்னோவுக்குச் சொந்தமான மலாய் மொழி நாளேடுகளான உத்துசான் மலேசியா, பெரித்தா ஹரியான் போன்ற நாளேடுகளையும் முஜாஹிட் குறை கூறினார்.

“அவை குற்றம் சாட்டப்பட்டவருடைய விளக்கங்களை வெளியிடாததின் மூலம் அவருக்கு நீதி கிடைக்காதது இன்னும் மோசமான விஷயமாகும்,” என அந்த பாரிட் புந்தார் எம்பி விடுத்த அறிக்கை தெரிவித்தது.

மார்ச் 31ம் தேதி அந்த விவகாரம் தொடர்பில் தமது நிலையை விளக்குமாறு முதலமைச்சர் லிம் குவான் எங்-கிற்கு இரண்டு வார அவகாசத்தை பினாங்கு அம்னோ வழங்கியது. கடந்த வெள்ளிக்கிழமை பெர்க்காசாவும் கொம்தாரில் சிறிய அளவில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்தி ஒரு வாரக் காலக் கெடுவை லிம்-முக்கு கொடுத்தது.

பாயான் முத்தியாரா நிலம் இன்னும் பிரிக்கப்படவில்லை என்றும் முழு நிலமும் Ivory Properties என்ற நிறுவனத்துக்கு 1.02 பில்லியன் ரிங்கிட்டுக்கு விற்கப்பட்டுள்ளது என்றும் லிம் ஏற்கனவெ விளக்கமளித்துள்ளார்.

எந்த ஒரு மேம்பாட்டுத் திட்டத்திலும் பள்ளிக்கூடங்களும் பள்ளிவாசல்கள், சூராவ்கள் உட்பட சமய மய்யங்களுக்கு இடம் ஒதுக்கப்பட வேண்டும் என்பது கட்டாயம் என தம்முடைய எதிர்ப்பாளர்களுக்கு அவர் நினைவுபடுத்தினார்.

பினாங்கு நகராட்சி மன்றம் விதிக்கும் எல்லா நிபந்தனைகளையும் பூர்த்தி செய்யப் போவதாகவும் பள்ளிவாசல், சூராவ் உட்பட மற்ற சமய வழிபாட்டு மய்யங்களுக்கும் தேவை எழுந்தால் நிலம் ஒதுக்கப் போவதாக Ivory Propertiesம் அறிக்கை வெளியிட்டுள்ளது.