‘அஞ்சலகங்களில் வாக்காளர் பதிவு பாரங்கள் தீர்ந்து விட்டன’

வாக்காளர் பதிவுக்கான இறுதி நாள் என அறிவிக்கப்பட்ட கடந்த சனிக்கிழமையன்று பல இணைய குடிமக்கள் வாக்காளர்கள் பதிவு செய்ய முயன்ற போது பெரும்பாலான அஞ்சலகங்களில் பதிவு பாரங்கள் தீர்ந்து விட்டதைக் கண்டு ஏமாற்றம் அடைந்தனர்.

சில அஞ்சலகங்கள் பொது மக்கள் கூடுவதைத் தவிர்ப்பதற்காக தங்களது நுழைவாயில்களில் அறிவிப்புக்களையும் ஒட்டியிருந்தன.

தமது நண்பர் ஒருவர் பெட்டாலிங் ஜெயாவில் இரண்டு அஞ்சலகங்களுக்குச் சென்றதாகவும் அங்கு பதிவு பாரங்கள் இல்லாததால் அவர் பதிவு செய்யத் தவறி விட்டார் என்றும் முன்னாள் நிகழ்ச்சி  அறிவிப்பாளரான  Qiu Yue தமது முகநூல் பக்கத்தில் கூறிக் கொண்டுள்ளார்.

கூடுதல் பாரங்கள் எப்போது கிடைக்கும் என்பதும் அங்குள்ள அதிகாரிகளுக்கு தெரியவில்லை.

சுபாங், கெபோங், செலாயாங், ஷா அலாம் ஆகியவற்றில் உள்ள அஞ்சலகங்களும் அதே பிரச்னையை எதிர்நோக்கியதாக தெரிய வருகிறது.

தமது நண்பர் கெப்போங்கிலும் சுங்கை பூலோவிலும் உள்ள ஆறு அஞ்சலகங்களுக்கு சென்றதாகவும் தம்மை வாக்காளராகப் பதிவு செய்து கொள்ள முடியவில்லை என்றும் மலேசியாகினி வாசகர் ஒருவரும் கூறிக் கொண்டுள்ளார்.

பலர் தங்களை பதிந்து கொள்வதற்குக் கடைசி நேரம் வரையில் காத்திருந்ததால் பாரங்கள் தீர்ந்து விட்டதாக தேர்தல் ஆணையத் துணைத் தலைவர் வான் அகமட் வான் ஒமார் அண்மையில் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.

பதிவு செய்ய பெரும் எண்ணிக்கையிலான மக்கள் குறிப்பாக சிலாங்கூரில் அஞ்சலகங்களுக்கு சென்றுள்ளனர். அதனை தாங்கள் எதிர்பார்க்கவில்லை என அவர் சொன்னார்.

“அத்துடன் குறிப்பிட்ட கால அட்டவணைக்குள் பாரங்களை அச்சகம் கொடுக்க முடியாமல் போனதும் இன்னொரு காரணமாகும்.”

கூடுதல் பாரங்களை அச்சிட்டுக் கொடுக்குமாறு இசி அச்சகத்துக்கு உத்தரவிட்டுள்ளது. இன்று பற்றக்குறைப் பிரச்னை தீர்ந்து விடும் என அவர் நம்புகிறார்.

உண்மையில் பொது மக்கள் இசி இணையத் தளத்துக்குச் சென்று அந்தப் பாரத்தை பதிவிறக்கம் செய்து அச்சிட்டுக் கொள்ளலாம் என்றும் வான் அகமட் குறிப்பிட்டார்.

மார்ச் 31ம் தேதிக்கு முன்னதாக பதிவு செய்து கொள்ளும் எல்லா தகுதி பெற்ற குடி மக்களும் அடுத்த பொதுத் தேர்தலில் அது ஜுன் அல்லது அதற்குப் பின்னர் நிகழுமானால் வாக்களிக்க முடியும் என இசி தலைவர் அப்துல் அஜிஸ் முகமட் யூசோப் மார்ச் 28ம் தேதி அறிவித்தார்.

2012ம் ஆண்டு முதல் கால் பகுதிக்கான வாக்காளர் பட்டியல் மே மாதம் அரசாங்கத் தகவல் ஏட்டில் அறிவிக்கப்படும் என்றும் அவர் சொன்னார்.