நாடாளுமன்ற மக்களவைத் தலைவர் பண்டிகர் அமின் மூலியாவின் உத்தரவுக்குப் பணிய மறுத்த மூன்று எதிரணி உறுப்பினர்கள் அவையை விட்டு வெளியேற்றப்பட்டனர். அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட அமளியினால் நாடாளுமன்ற நடவடிக்கைகள் இன்றைக்கு தள்ளிவைக்கப்பட்டது.
தேர்தல் சீர்திருத்தம் மீதான நாடாளுமன்ற சிறப்புக்குழுவின் அறிக்கையில் அக்குழுவின் சிறுபான்மை உறுப்பினர்களின் அறிக்கையும் பின்னடக்கமாக சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கை அவைத் தலைவரால் நிராகரிக்கப்பட்ட பின்னர் அம்மூவரும் அம்முடிவு குறித்து கேள்வி எழுப்பினர்.
“நிறைநிலை பிரிவு 42 இன் கீழ் அவைத் தலைவர் பேசும்போது, நீங்கள் வாயை மூட வேண்டும்.
“நிறைநிலை பிரிவு 43 இன் கீழ் அவைத் தலைவரின் முடிவு குறித்து கேள்வி எழுப்ப முடியாது. பிரிவு 44 இன் கீழ், கோம்பாக், (அஸ்மின் அலி), சுபாங் (ஆர். சிவராசா), மற்றும் கோலசிலாங்கூர் (சுல்கிப்லி அஹமட்) அவையை விட்டு வெளியேறுமாறு நான் உத்தரவிடுக்கிறேன்.”
மதிய உணவுக்குப் பின்னர் தொடங்கிய கூட்டத்தில் வெளியேறுமாறு உத்தரவிடப்பட்ட மூவரும் அவையின் தலைவராக அமர்ந்திருந்த ரோனல்ட் கியாண்டியுடன் பண்டிகர் அளித்த தீர்ப்பு குறித்து விவாதத்தில் ஈடுபட்டனர்.
அம்மூவரும் காமன்வெல்த் நாடுகளின் நாடாளுமன்றங்கள் இதுபோன்ற விவகாரம் குறித்து எடுத்துள்ள முடிவுகளை மேற்கோள்காட்டி வாதிட்டனர். அவர்களின் வாதம் எடுபடவில்லை.
முன்னதாக அவைத் தலைவர் பண்டிகர் தாம் ஒரு “கம்போங் ஸ்பீக்கர்” தானே என்று கூறிக்கொண்டதை வைத்து எதிரணியினர் மேற்கோளாக காட்டிய முடிவுகள் முதிர்ந்த அவைத் தலைவர்களால் எடுக்கப்பட்டவை, கம்பத்லிருந்து வந்த ஒருவரால் அல்ல என்று சாடையாக இடித்துரைத்தார் அஸ்மின் அலி.
“அம்னோவின் கையாள்”
அஸ்மின், சிவராசா மற்றும் சுல்கிலி ஆகிய மூவரும் நாடாளுமன்ற அவையை விட்டு வெளியேறாமல் அங்கேயே இருந்தனர். அவர்களுடன் இதர எதிரணி உறுப்பினர்களும் சேர்ந்து கொண்டனர்.
எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம் எழுந்து நின்று அவைத் தலைவர் பண்டகரை “அம்னோவின் கையாள்” என்று நேரடியாக குற்றம் சாட்டினார்.
பண்டிகர் தவறான முடிவை எடுத்திருந்தால், அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அன்வார் கூறினார்.
உடனே பாரிசான் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுந்து நின்று “வெளியேறுங்கள்! வெளியேறுங்கள்!” என்று கூவினர். அன்வாரை பார்த்து “லிவாட்! லிவாட்! என்று குரலெழிப்பினர்.
எதிரணி உறுப்பினர்கள் அவைத் தலைவரை நோக்கி “Leave the chair! Leave the chair!” என்று முழக்கமிட்டனர்.
பிஎஸ்சி அறிக்கை மீதான விவாதத்தை தொடருமாறு அவைத் தலவர் விடுத்த வேண்டுகோள் உதாசீனப்படுத்தப்பட்டதால், பிஎஸ்சி அறிக்கை விவாதிக்கப்பட வேண்டிய தேவை இல்லை ஏனென்றால் எதிரணிக்கு அதில் ஈடுபாடு இல்லை என்று பண்டிகர் தீர்மானித்தார்.
தமது குரலை உயர்த்தி பிஎஸ்சி அறிக்கை மீதான வாக்கெடுப்புக்கு அவர் உத்தரவிட்டார். பெரும்பான்மை வாக்கு வித்தியாசத்தில் அந்த அறிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவையின் நடவடிக்கையை நாளை வரையில் தள்ளிவைக்கப்பட்டது.