இந்நாட்டில் தமிழ்ப்பள்ளிகள் பற்றி பேசப்படுகின்றது. 200 ஆண்டு வரலாறை எட்டவிருக்கும் மலேசிய தமிழ்ப்பள்ளிகளுக்கு எண்ணற்ற குறைபாடுகள் இருக்கின்றன. அவற்றைப் பற்றி பலர் பல ஆண்டுகளாக பேசியும் எழுதியும் வருகின்றனர். ஆனால், அப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களின், குறிப்பாக படிப்பில் பிந்தங்கிய மாணவர்களின், வளமான எதிர்காலம், அவர்கள் மேன்மையடைவதற்கான வழிகாட்டல்கள் குறித்து பேசுவது மிக மிகக் குறைவு. அது குறித்து விவாதிக்க, கருத்து பரிமாறிக்கொள்ள வேண்டிய கட்டத்தை நாம் இப்போது அடைந்துள்ளோம் என்று தமிழ் அறவாரிய அலுவலகத்தில் இன்று காலையில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் கூறப்பட்டது.
“தமிழ்ப்பள்ளிகளின் கட்டடங்கள், திடல்கள், மாணவர்களின் எண்ணிக்கை போன்றவை பற்றி அடிக்கடி பேசுகின்ற நாம் அப்பள்ளிகளின் பயிலும் மாணவர்களின் தரத்தை மேன்மையடையச் செய்வது எப்படி என்று பேசுவதில்லை”, என்று மலேசிய தமிழ் அறவாரியத்தின் தலைவர் சி.பசுபதி செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறினார்.
நமது குறிக்கோள்
மாணவர்களை மேன்மையடையச் செய்வது நமது குறிக்கோள் என்பதை வலியுறுத்திய பசுபதி, அதனை நடைமுறைப்படுத்துவது எப்படி என்பது குறித்து கற்றறிந்தவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், தமிழ் ஆர்வலர்கள் மற்றும் இதர பெருமக்களுடன் கருத்துப் பரிமாற்றம் செய்துகொள்வதற்கு ஏதுவாக தமிழ் அறவாரியம் ஒரு தமிழ்ப்பள்ளி கருத்தரங்குக்கு ஏற்பாடு செய்துள்ளது என்றார்.
இக்கருத்தரங்கு எதிர்வரும் சனிக்கிழமை ஏப்ரல் 7, 2012 இல் மலாயா பல்கலைக்கழகத்தில் நடைபெறும் என்று தமிழ் அறவாரியத்தின் செயல்முறை இயக்குனர் சி.ம. இளந்தமிழ் செய்தியாளர்களிடம் கூறினார்.
நாட்டின் பல்வேறு மாநிலங்களிலிருந்து 500 க்கும் மேற்பட்டவர்கள் இக்கருத்தங்கில் பங்கேற்பர் என்றும் அவர் கூறினார்.
தமிழ்ப்பள்ளியின் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவது குறித்து நாம் கவலை தெரிவிக்கிறோம். அதற்கு பல காரணங்கள் உண்டு. குழந்தை பிறப்பு விகிதம் ஒரு காரணம். அதைவிட முக்கியமானது தமிழ்க் கல்வியின் தரம். இது மேம்படுத்தப்பட வேண்டும். “தரம் உயர்ந்தால், அது பெற்றோர்களையும் மாணவர்களையும் தமிழ்ப்பள்ளிகள்பால் ஈர்க்கும்”, என்று பசுபதி மேலும் கூறினார்.
இவற்றை எல்லாம் உறுதிப்படுத்தாமல், தமிழ் மக்கள் தங்களுடைய குழந்தைகளை தமிழ்ப்பள்ளிக்குத்தான் அனுப்ப வேண்டும் என்று வற்புறுத்துவது முறையல்ல என்றாரவர்.
அமெரிக்க தென்கொரிய கல்வி நிபுணர் மாணவர்களின் மேன்மை குறித்து கருத்துரைக்கையில் பெற்றோர்களின் நிலைமை, சூழ்நிலை பற்றி கவலைப்பட வேண்டாம். சிறந்த ஆசிரியரின் பங்குதான் முதன்மையானது என்பதை வலியுறுத்தியதாக பசுபதி கூறினார்.
17,000 மாணவர்கள் யுபிஎஸ்ஆர் தேர்வு எழுதுகின்றனர். பலர் பல்வேறு தரங்களைப் பெறுகின்றனர், தோல்வி அடைபவர்கள் உட்பட. அவர்கள் அனைவரும் குறைந்தபட்சம் “சி” தரத்தை அடைவதை நாம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் உறுதி செய்ய வேண்டும் என்ற தமது கடப்பாட்டை தெரிவித்த அவர், அதை அடைய முடியும் என்று நம்பிக்கையும் தெரிவித்தார்.
அரசு சாரா அமைப்புகள் மிக முக்கியமான சேவைகளை வழங்குகின்றன. “நாங்கள் எங்களுடைய பங்கை ஆற்ற தயாராக இருக்கிறோம். அதில் ஒன்று நடைபெறவிருக்கும் தமிழ்ப்பள்ளிகள் கருத்தரங்கு என்றார் பசுபதி.
ஏப்ரப் 7 இல் நடைபெறவிருக்கும் இக்கருத்தரங்கில் “உண்மையாக தமிழ்ப்பள்ளிக்கு பங்காற்றுபவர்களின் அனுபவங்கள், ஆலோசனைகள் கட்டுரை வடிவில் படைக்கப்படும். கேள்வி பதில் அங்கம், கலந்துரையாடல், தீர்மானம் ஆகியவை முன்வைக்கப்படும்”, என்று இக்கருத்தரங்கின் ஒருங்கிணைப்பாளர் இளந்தமிழ் தெரிவித்தார்.
மேலும், பள்ளி மேலாளர் வாரியம், பெற்றோர் ஆசிரியர் சங்கம் தொடர்பான படைப்புகளும் இடம்பெறும்.
இறுதியில், தமிழ் அறவாரியத்தின் தலைவர் சி.பசுபதி, ஆலோசகர் கா.ஆறுமுகம், சைல்ட் என்ற அமைப்பின் தலைவர் டாக்டர் ஐயங்கரன் மற்றும் தமிழ் அறவாரியத்தின் உதவித் தலைவர் வே. இளஞ்செழியன் ஆகியோரின் ஆய்வு சார்ந்த படைப்புகளும் உண்டு.
மாணவர்களை மையப்படுத்தி அவர்களின் மேன்மைக்கு வழிகோலுவதை நோக்கமாகக் கொண்ட இக்கருத்தரங்களில் பங்கேற்க அனைவரும் அழைக்கப்படுகின்றனர்.
தொடர்புக்கு: சி.ம.இளந்தமிழ் 012-3143910, யுகேன் 017-3104625, அலுவலக தொலைபேசி 03-26926533.