ஆஸ்திரேலியாவின் லினாஸ் நிறுவனம், குவாந்தான் கெபெங்கில் அமைக்கும் தனது அரிய மண் தொழில் கூடத்தை இயக்குவதை அனுமதிக்க வேண்டாம் என மசீச கூட்டரசு அரசாங்கத்தை கேட்டுக் கொண்டுள்ளது.
அந்தத் தொழில் கூடம் பாதுகாப்பானதா இல்லையா என்பது இனிமேல் முக்கியமான விஷயமல்ல. அரசாங்கம் மக்களுடைய கருத்துக்களை அலட்சியம் செய்யக் கூடாது என மசீச தலைவர் டாக்டர் சுவா சொய் லெக் நேற்று விடுத்த அறிக்கை கூறியது.
“பெரும்பாலான மக்கள் லினாஸ் திட்டத்தை எதிர்ப்பது தெளிவாகத் தெரிகிறது. அது பாதுகாப்பானதா இல்லையா என்பது இப்போது கேள்வி அல்ல. பெரும்பான்மை மலேசியர்கள் லினாஸை விரும்பவில்லை.”
“மக்களுடைய கருத்துக்களை மதிக்கும் பொறுப்புள்ள அரசாங்கம் என்ற முறையில் கூட்டரசு அரசாங்கம் அந்தத் திட்டத்தை ரத்துச் செய்யுமாறு மசீச கூட்டரசு அரசாங்கத்தைக் கேட்டுக் கொள்கிறது.”
“லினாஸின் பாதுகாப்பு நிலை குறித்து முரண்பாடான கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ள வேளையில் லினாஸ் திட்டம் பெரும் எண்ணிக்கையிலான வேலைகளை உருவாக்கவும் போவதில்லை உயர்ந்த மதிப்பைக் கொண்ட முதலீட்டு தொழில் நுட்ப ஆற்றலையும் கொண்டு வரப் போவதில்லை.”
“சுருக்கமாகச் சொன்னால் பாகாங் லினாஸ் திட்டம் இல்லாமல் நிலைத்திருக்க முடியும்,” என சுவா தமது அறிக்கையின் ஐந்து பத்திகளை பெரிய எழுத்துக்களில் வெளியிட்டுள்ளார். அவற்றின் முக்கியத்துவத்தைக் குறிப்பது அதன் நோக்கமாகும்.
கழிவுப் பொருட்களை வெளியேற்றும் திட்டம் மீது சமரசம் வேண்டாம்
பாகாங் மசீச தலைவர்கள் உட்பட பல மலேசியர்கள் லினாஸ் தொழில் கூடத்துக்கு எதிராக ஆட்சேபம் தெரிவித்துள்ளனர் என்றும் சுவா குறிப்பிட்டார்.
அந்தக் கருத்துக்களை மசீச-வைச் சந்தித்த பல சுற்றுச் சூழல் போராட்ட அமைப்புக்களும் பகிர்ந்து கொண்டுள்ளன என்றார் அவர்.
என்றாலும் லினாஸ் திட்டம் பாதுகாப்பானது அல்ல மசீச கருதுவதாக அது பொருள்படாது என சுவா வலியுறுத்தினார்.
அந்தத் தொழில் கூடத்தின் பாதுகாப்புக்கு ஆதரவாக எந்த வாதத்தையும் அவர் முன் வைக்கவில்லை என்றாலும் அந்தத் தொழில் கூடம் தனது கழிவுப் பொருட்களை நாட்டுக்கு வெளியில் கொண்டு செல்வதற்கு உத்தரவாதம் அளிக்கத் தவறினால் அதற்கு தற்காலிக நடவடிக்கை அனுமதி வழங்கப்படுவதை தமது கட்சி ‘வன்மையாக’ எதிர்ப்பதாக அவர் தெளிவுபடுத்தினார்.
மசீச அந்த விவகாரத்தில் விட்டுக் கொடுக்காது. களத்தில் உள்ள மக்களுடைய கருத்துக்களுக்குச் செவிமடுக்கும் தனது நிலையிலிருந்து அது தடம் புரளாது,” என்றும் அவர் சொன்னார்.
லினாஸ் திட்டத்துக்கு கெரக்கானை அடுத்து அதிகாரப்பூர்வமாக ஆட்சேபம் தெரிவித்துள்ள இரண்டாவது பிஎன் உறுப்புக் கட்சி மசீச-வாகும். 2013ம் ஆண்டு மத்திக்குள் நடத்தப்பட வேண்டிய அடுத்த பொதுத் தேர்தலில் அந்த விவகாரம் வாக்காளர்கள் பதிலடி கொடுப்பர் என அந்த இரு கட்சிகளும் அஞ்சுகின்றன.
லினாஸ் எதிர்ப்பு அமைப்புக்கள் அந்தத் தொழில் கூடம் அணுக் கதிரியக்கக் கசிவுகளை வெளியிடக் கூடும் என அஞ்சி அதற்கு எதிராக இரண்டு பெரிய பேரணிகளை நடத்தியுள்ளன. ஆனால் அவற்றுக்குக் காலம் கடந்து கொண்டிருக்கிறது.
காரணம் இன்னும் மூன்று வாரங்களில் நடவடிக்கைகளைத் தொடங்கத் தான் தயாராக இருப்பதாக லினாஸ் அறிவித்துள்ளது. அங்கீகரிக்கப்பட்ட ஆனால் இன்னும் வெளியிடப்படாத தற்காலிக நடவடிக்கை அனுமதியே இன்னும் எஞ்சியுள்ள ஒரே ஒரு தடை என்றும் அது கூறியுள்ளது