வழக்குரைஞர் மன்றம்: பிஎஸ்சி அறிக்கை முழுமையானதும் நிறைவானதுமாய் இல்லை

தேர்தல் சீர்திருத்தங்கள் மீதான நாடாளுமன்றத் தேர்வுக் குழு (பிஎஸ்சி) வெளியிட்டுள்ள அறிக்கை “முழுமையானதும் இல்லை, நிறைவானதும் இல்லை” என வழக்குரைஞர் மன்றம் கருதுகிறது.

அந்தக் குழு வழங்கியுள்ள 22 பரிந்துரைகளில் சில, சரியான பாதையில் எடுக்கப்பட்டுள்ளதை ஒப்புக் கொண்ட வழக்குரைஞர் மன்றத் தலைவர் லிம் சீ வீ, உருப்படியான சீர்திருத்தங்களுக்கு விரிவான முழுமையான பரிந்துரைகளை கொடுக்கத் தவறி விட்டது என்றார்.

வாக்காளர் பட்டியல் தொடர்பான பிரச்னைகளை போதுமான அளவுக்கு பிஎஸ்சி கவனிக்கத் தவறி விட்டது குறித்து வழக்குரைஞர் மன்றம் பெரிதும் கவலைப்படுகிறது.

வாக்காளர் பட்டியலில் புதிய வாக்காளர்களை சேர்க்கும் முறை மோசடிகளிலிருந்து விடுபட்டதாக இருக்க வேண்டும் என வாதாடிய லிம், தவறான பதிவுகளை நீக்குவதற்கு நடப்புப் பட்டியல் தூய்மைப்படுத்தப்பட வேண்டும் என்றார்.

“பிஎஸ்சி அந்த வகையில் ஒர் அரசாங்க அமைப்பான மிமோஸ் வாக்காளர் பட்டியலை சுருக்கமாக ஆய்வு செய்வதற்கு மட்டுமே ஒப்புதல் அளித்து பெயரளவுக்கு நடவடிக்கை எடுத்தது. அதுவும் மிகவும் வரம்புக்குட்பட்ட அளவுகோலுடன் அந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.”

“நமது வாக்காளர் பட்டியலை மேலும் ஆழமாகவும் விரிவாகவும் ஆய்வு செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது.”

“எடுத்துக்காட்டுக்கு இந்தியாவில் வாக்காளர் பட்டியலைப் புதுப்பிப்பது தொடர்ச்சியான நடவடிக்கை ஆகும். வீட்டுக்கு வீடு கணக்கெடுப்பு வழி அவ்வப்போது திருத்தங்களும் செய்யப்படுகின்றன.”

பிஎஸ்சி வழங்கிய இறுதி அறிக்கையுடன் சிறுபான்மையினர் அறிக்கையையும் ஏற்றுக் கொள்ள மக்களவை மறுத்துள்ளது பற்றியும் லிம் குறிப்பிட்டார். அது மிகவும் ‘வருந்தத்தக்கது’, காமன்வெல்த் நாடுகளில் பின்பற்றப்படும் நாடாளுமன்ற பழக்கங்களுக்கு முரணானது என அவர் சொன்னார்.

“பிஎஸ்சி-யில் ஒன்பது உறுப்பினர்கள் இருந்தனர். அவர்களில் பக்காத்தான் ராக்யாட்டைச் சேர்ந்த மூவர் உட்பட நால்வர் ஆளும் கூட்டணியைச் சாராதவர்கள்.”

இணக்கம் ஏற்படாத, கருத்து மாறுபட்ட அம்சங்களை அறிந்து கொள்ள சிறுபான்மையினர் அறிக்கை தயாரிக்கப்படுகிரது,” என லிம் விளக்கினார்.

சிறுபான்மையினர் அறிக்கையை அனுமதிக்க மக்களவை சபாநாயகர் பண்டிக்கார் அமின் முலியாமறுத்து விட்டதால்  குழுவில் தெரிவிக்கப்பட்ட மாற்றுக் கருத்துக்களையும் இணக்கம் இல்லாத சூழ்நிலையையும் பிஎஸ்சி அறிக்கை பிரதிபலிக்கவில்லை என்றும் வழக்குரைஞர் மன்றத் தலைவர் தெரிவித்தார்.

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், அந்த அறிக்கை நிறைவாக இல்லாததால்  வாக்காளர் பட்டியலில் காணப்படும் பிரச்னைகளைச் சரி செய்வதற்கு முழுமையான தீர்வு காணவும் அரசியல் உறுதியைக் காட்டுவதோடு பிஎஸ்சி பரிந்துரைகளை அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன்னதாக உடனடியாக அமலாக்க வேண்டும் எனவும் லிம் கேட்டுக் கொண்டார்.