பாஸ், பலமுனை தாக்குதலை எதிர்நோக்கியுள்ள தன் துணைத் தலைவர் முகம்மட் சாபுவுக்கு ஆதரவு அளிக்கும் வகையில், நாட்டின் விடுதலைப் போராட்டத்தை மறுஆய்வு செய்யவேண்டும் என்று பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கைக் கேட்டுக்கொண்டிருக்கிறது.
மறுஆய்வு செய்வது, சுதந்திரப் போராளிகளின் போராட்டத்துக்கு அங்கீகாரம் அளிக்க அரசு உண்மையில் அக்கறை கொண்டுள்ளதைக் காண்பிக்கும் என பாஸ் உதவித் தலைவர் சலாஹுடின் ஆயுப் கூறினார். அவர், இன்று கோலாலம்பூரில் பாஸ் தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் பேசினார்.
“நஜிப் நேர்மையானவராக இருந்தால் நாட்டின் விடுதலைக்கு முந்திய வரலாற்றைத் திருத்தி எழுத அமைச்சரவைக் குழு ஒன்றை அமைக்க வேண்டும்.
“அக்குழுவில் எல்லாத் தரப்பினரும் இடம்பெற வேண்டும். நாங்கள் எங்கள் பிரதிநிதிகளை அனுப்பி வைக்க ஆயத்தமாக உள்ளோம்”, என்றாரவர்.
வரலாற்றைத் திருத்தி எழுத வேண்டும் என்பதை அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தில் பாஸ் வலியுறுத்தும் என குபாங் கிரியான் எம்பியுமான சலாஹுடின் தெரிவித்தார்.
முகம்மட் சாபு ஆகஸ்ட் 21-இல் தாசெக் குளுகோரில் ஆற்றிய உரையில், 1950-இல் புக்கிட் கெப்போங் போலீஸ் நிலையத்தின்மீது தாக்குதல் நடத்திய கிளர்ச்சிக்காரரான மாட் இந்திரா-வை சுதந்திரப் போராட்ட வீரராக அங்கீகரிக்க வேண்டும் என்று கூறியது சர்ச்சையைத் தோற்றிவித்துள்ளது.
பாஸ் தலைமைச் செயலாளர் முஸ்தபா அலி, முகம்மட்டின் உரையைக் கட்சி திரும்பக் கேட்டுப்பார்த்ததாகவும் அவர் பேசியதை அது அப்படியே ஏற்றுக்கொள்வதாகவும் கூறினார்.
“பேச்சின் மைய கருத்து சுதந்திரப் போராட்டத்தை மீளவும் பார்வையிட வேண்டும் என்பதாகும்”, என்றாரவர்.
“வரலாறு நேர்மையாக சித்திரிக்கப்படவில்லை என்பதால் அதைத் திருத்தி எழுதுவது அவசியம்.”
சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட பிகேஎம்எம் தலைவர்களான புர்ஹானுடின் ஹெல்மி, அஹ்மட் போஸ்டமான், இப்ராகிம் யாக்கூப் போன்றோருக்கு உரிய மதிப்பளிக்கப்பட வேண்டும் என்றாரவர்.
“அம்னோ தோற்றுவிக்கப்பட்டது 1946-இல்தான். ஆனால் இத்தலைவர்கள் 1945-இலேயே பிரிட்டிஷ்காரர்களால் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார்கள்.”
இப்படிக் கூறுவதால் பாஸ், அம்னோவின் பங்களிப்பை, குறிப்பாக ஒன் ஜப்பார், துங்கு அப்துல் ரஹ்மான் போன்றோரின் பங்களிப்பை அங்கீகரிக்கவில்லை என்பது பொருளல்ல என்றவர் வலியுறுத்தினார்.
“சுதந்திரப் போராட்டம் இரண்டு அணுகுமுறைகளைக் கொண்டிருந்தது. பிகேஎம்எம் எல்லா வகையிலும் எதிர்த்துப் போராடியது.
“ஒன்னும் துங்கும் அமைதியாக ஒத்துழைக்கத் தலைப்பட்டனர்….அதன் காரணமாக பிரிட்டிஷ் அதிகாரிகளாக செயல்படவும் ஆயத்தமாக இருந்தார்கள். அவர்களின் நோக்கமும் சுதந்திரம் பெறுவதுதான் என்பதை நாங்கள் ஒருபோதும் மறுத்ததில்லை.”
அதற்காக மற்ற விடுதலைப் போராளிகளின் பங்களிப்பை “இருட்டடிப்புச் செய்யக்கூடாது”, என்று முஸ்தபா கூறினார்.