சபாக் பெர்ணாம் எம்பி-யை கைது செய்வதற்கான ஆணையை நீதிமன்றம் பிறப்பித்தது

நீதிமன்ற நடவடிக்கைகளில் கலந்து கொள்ளத் தவறியதற்காக சபாக் பெர்ணாம் எம்பி அப்துல் ரஹ்மான்  பாக்ரி-க்கு எதிராக கைது ஆணையை கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

United Trade Arena (M) Sdn Bhdக்கு எதிராக Benzteel Sdn Bhd கொண்டு வந்த வழக்கில் 2.3 மில்லியன் ரிங்கிட்டைச் செலுத்துமாறு Majuikan Sdn Bhdன் தலைவருமான அப்துல் ரஹ்மானுக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நீதிமன்றம் உத்தரவிட்டது.

நீதிமன்ற நடவடிக்கைகளில் Majuikan இயக்குநர்களில் ஒருவர் என்ற முறையில் அப்துல் ரஹ்மான் கலந்து கொள்ளத் தவறி விட்டதாக தொடர்பு கொள்ளப்பட்ட போது வாதியின் வழக்குரைஞரான ஏ சஹா தேவா கூறினார்.

“தீர்ப்பளிக்கப்பட்ட தொகையைத் தாங்கள் ஏன் கொடுக்கவில்லை என்பதை  விளக்குவதற்கு நீதிமன்றத்துக்கு வர இயக்குநர்கள் தவறி விட்டனர்,” என அவர் சொன்னார்.

அதனைத் தொடர்ந்து உயர் நீதிமன்றம் கைது ஆணையை அண்மையில் பிறப்பித்தது. அது இன்று நிறைவேற்றப்படும்.

“கைது ஆணையை இன்று கொடுப்பதற்கு  அமீனா முயற்சி செய்வார்,” என சஹா தேவா சொன்னார்.

இந்தச் செய்தி எழுதப்படும் நேரத்தில் அப்துல் ரஹ்மான் நாடாளுமன்றத்தில் இல்லை.

அப்துல் ரஹ்மான் முன்பு மாநிலச் சட்ட மன்ற உறுப்பினராக இருந்த போது பொய்யான கோரிக்கைகளைச் சமர்பித்த குற்றசாட்டில் அப்துல் ரஹ்மானும் அவரது உதவியாளரும் குற்றவாளிகள் என  ஷா அலாம் செஷன்ஸ் நீதிமன்றம்  மார்ச் மாதம் முதல் தேதி தீர்ப்பளித்தது.

அவர்களுக்கு ஆறு ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 400,000 ரிங்கிட் அபராதமும் விதிக்கப்பட்டது.