மெர்தேக்கா சதுக்கத்தில் ஏப்ரல் 28ம் தேதி ஏற்பாடு செய்யப்படும் பெர்சே 3.0 குந்தியிருப்பு மறியலில் கலந்து கொள்வதற்கு ஆயிரக்கணக்கான பேரை திரட்டுமாறு பாஸ் கட்சி இன்று தனது உறுப்பினர்களை கேட்டுக் கொண்டுள்ளது.
கட்டுப்படுத்தப்படா விட்டால் நாட்டின் இறையாண்மை, பொருளாதாரம், உறவுகள் ஆகியவற்றைக் கால ஒட்டத்தில் நாசப்படுத்தக் கூடிய வாக்காளர் பட்டியல் முறைகேடுகள், வாக்காளர் பதிவு குளறுபடிகள் ஆகியவற்றை ஆய்வு செய்ய அரச விசாரணை ஆணையத்தை அமைக்குமாறும் பாஸ் துணைத் தலைவர் முகமட் சாபு அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டார்.
தேர்தல் ஆணையத்தில் உள்ளவர்கள் உட்பட பல அரசாங்க அதிகாரிகள், வாக்காளர்களாக மாறும் பொருட்டு குடி மக்கள் அல்லாத பலருக்கு அடையாளக் கார்டுகளை கொடுத்து வருவதாக பொக்கோக் செனா எம்பி மாஹ்புஸ் ஒமார் கூறிய குற்றச்சாட்டுக்களை அவர் தற்காத்துப் பேசினார்.
“தூய்மை செய்யுமாறு ( வாக்காளர் பட்டியலை தூய்மை செய்யுமாறு) பல முறை வேண்டுகோள் விடுக்கப்பட்டும் நாம் இது வரை காணாத அளவுக்குக் கறை படிந்ததாக அந்தப் பட்டியல் உள்ளது. பிஎஸ்சி பரிந்துரைகளில் அழியா மை மட்டுமே இது வரை ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.”
“பொக்கோக் செனா எம்பி (மாஹ்புஸ்) கூறுவது போல குடி மக்கள் அல்லாதாருக்கு அதிகாரிகள் அடையாளக் கார்டுகளைக் கொடுத்து வருகின்றனர் என்பதற்கு எங்களிடம் ஆதாரங்கள் உள்ளன.
அதனால் தான் அந்த விவகாரம் மீது அரச விசாரணை ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என நாங்கள் கோருகிறோம்,” என்றார் மாட் சாபு என்றும் அழைக்கப்படும் முகமட் சாபு சொன்னார்.
அந்த ஆணையத்தை அமைப்பதற்கான காலக் கெடுவைத் தாம் விதிக்கப் போவதில்லை என கூறிய அவர், அடுத்த ஆண்டு மார்ச் மாதன் வரையில் தேர்தல் நடத்தப்பட வேண்டிய அவசியம் இல்லை என்பதால் இன்னும் கால அவகாசம் இருப்பதாக குறிப்பிட்டார்.
“அடுத்து வரும் வாரங்களில் நாங்கள் அந்தக் குளறுபடிகளை வெளியிடுவோம். எடுத்துக்காட்டுக்கு சிலாங்கூரில் வாக்காளர் எண்ணிக்கை மிக அதிகமாக உயர்ந்துள்ளது,” என மாட் சாபு குறிப்பிட்டார்.
“உதாரணத்துக்கு சுபாங் நாடாளுமன்றத் தொகுதியில் வாக்காளர் எண்ணிக்கை 35 விழுக்காடு கூடியுள்ளது. அதே வேளையில் அருகில் உள்ள பெட்டாலிங் ஜெயா செலத்தானில் ஏழு விழுக்காடு மட்டுமே அந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.”
“ஏன் இந்த பெரிய வேறுபாடுகள் ?” என அவர் வினவினார்.