பினாங்கு இந்த மாதம் ஊராட்சி மன்றத் தேர்தல் மசோதாவைத் தாக்கல் செய்யும்

பினாங்கில் ஊராட்சி மன்றத் தேர்தல்கள் மீண்டும் நிகழ்வதற்கு வகை செய்யும் பொருட்டு மாநிலச் சட்டமன்றத்தில் விரைவில் மசோதா ஒன்றை மாநில அரசாங்கம்  தாக்கல் செய்யும்.

அந்த மாநில ஆட்சி மன்ற உறுப்பினர்களில் ஒருவரான சாவ் கோன் இயாவ் அந்தத் தகவலை நேற்று வெளியிட்டார்.

பினாங்குத் தீவிலும் பிராவின்ஸ் வெல்லெஸ்லியிலும் ஊராட்சி மன்றத் தேர்தல்களுக்கான மசோதா என அழைக்கப்படும் அது ஏப்ரல் 30ம் தேதி தொடங்கும் சட்டமன்றக் கூட்டத் தொடரில் சமர்பிக்கப்படும் என அவர் சொன்னார்.

அந்த மசோதா தாக்கல் செய்யப்படுவது, அத்தகைய நடவடிக்கை மாநில அரசின் அதிகாரத்துக்கு அப்பாற்பட்டது என வாதாடும் கூட்டரசு அரசாங்கத்துடன் மாநில அரசாங்கம் மோதுவதற்கு வழி வகுத்து விடும்.

கூட்டரசு அரசமைப்பின் கீழ் ஊராட்சி மன்ற விவகாரங்கள் மாநில நிர்வாகத்தின் கீழ் வருவதாக சாவ் குறிப்பிட்டார்.

“அது குறித்து சில தரப்புக்களுக்கு மாற்றுக் கருத்துக்கள் இருக்கலாம். என்றாலும் அரசமைப்பின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்து நாங்கள் மாநிலச் சட்டம் ஒன்றை இயற்றுகிறோம்,” என்றார் அவர்.

நாங்கள் அந்த நகல் மசோதாவுக்கு இறுதி வடிவம் கொடுத்து வருகிறோம். அந்த மசோதா தாக்கல் செய்யப்பட்ட பின்னர் நாங்கள் பொது விவாதம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்வோம். அந்த நகல் மசோதாவை ஆராய குழு விவாதமும் நிகழும்,” என அவர் வலியுறுத்தினார். ஊராட்சி மன்றத் தேர்தல்களை மீண்டும் கொண்டு வருமாறு கூட்டரசு அரசாங்கத்தைக் கேட்டுக் கொள்ளும் தீர்மானம் ஒன்றை மாநில அரசாங்கம் 2009ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நிறைவேற்றியது.

சட்ட விதிகளுக்கு உட்பட்டு ஊராட்சி மன்றத் தேர்தல்களை நடத்தும் முறை மீது பினாங்கிற்கு ஆலோசனை கூற வழக்குரைஞர் குழு ஒன்றை மாநில அரசாங்கம் அமைத்துள்ளது.

ஊராட்சி மன்றத் தேர்தல்களை நடத்துமாறு தேர்தல் ஆணையத்தைக் கேட்டுக் கொள்ளும் கடிதம் ஒன்றை முதலமைச்சர் லிம் குவான் எங், 2010ம் ஆண்டு அனுப்பினார். ஆனால் தேர்தல் ஆணையம் அந்த வேண்டுகோளை நிராகரித்து விட்டது. அதனைத் தொடர்ந்து மாநில அரசாங்கம் சட்ட நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியது.

அந்த மசோதா நிறைவேற்றப்பட்டதும் அந்தப் பிர்சனை நீதிமன்றத்துக்குச் செல்லும். அந்த விஷயம் சட்டத்துக்கு உட்பட்டதா அல்லது புறம்பானதா என்பது நீதிமன்றத் தீர்ப்பை நாடி மாநில அரசாங்கம் வழக்கு ஒன்றை சமர்பிக்கும் என்றும் சாவ் தெரிவித்தார்.

நீதி மன்றத் தீர்ப்பு எங்கள் பக்கம் இருந்தால் ஊராட்சி மன்றத் தேர்தல்களை நடத்துமாறு தேர்தல் ஆணையத்தை கட்டாயப்படுத்துமாறு நீதி மன்றம் கேட்டுக் கொள்ளப்படும் என்றார் அவர்.
.
“அது இல்லை என்றால் கதை அத்துடன் முடிந்தது. நாங்கள் நீதிமன்றம் முடிவு செய்வதற்கு விட்டு விடுவோம்.”

நகல் மசோதா அடிப்படையில் பார்த்தால், அந்த மசோதா நிறைவேற்றப்பட்டு அரசாங்கத் தகவல் ஏட்டில் அறிவிக்கப்பட்ட பின்னர் 18 மாதங்களில் முதலாவது தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என சாவ் தெரிவித்தார்.

ஒவ்வொரு ஊராட்சி மன்றமும் மேயர் உட்பட 50 பேருக்கு மேற்போகாத உறுப்பினர்களை வைத்திருக்க அனுமதிக்கப்படும்.

என்றாலும் மேயர் பதவிக்கு நேரடியான வாக்களிப்பு இருக்காது என்றும் அவர் தமது குழுவினரை தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களிலிருந்து எடுத்துக் கொள்வார்.