“நியாயமான விவாதங்கள் அனுமதிக்கப்பட வேண்டும்” என MCCBCHST கூறுகிறது

அண்மையக் காலமாக முஸ்லிம் அல்லாதவர்கள் இஸ்லாத்தை சிறுமைப்படுத்துவதாக அண்மையில் பேராக் அரசப் பேராளர் ராஜா நஸ்ரின் ஷா கூறியிருப்பதற்கு MCCBCHST என்ற சமயங்களுக்கு இடையிலான மன்றம் பதில் அளித்துள்ளது.

தான் ஒரு போதும் இஸ்லாத்தின் நிலை குறித்து கேள்வி எழுப்பியதில்லை  என்றும் நியாயமான விவாதங்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் அது கூறியுள்ளது.

சமயப் பிரச்னைகளில் திருகுதாளம் வேண்டாம் என பல்வேறு தரப்புக்களுக்கு ராஜா நஸ்ரின் விடுத்த வேண்டுகோளை தான் ஆதரிப்பதாக மலேசிய பௌத்த, கிறிஸ்துவ, இந்து, சீக்கிய, தாவோ சமயங்களுக்கு இடையிலான மன்றமான MCCBCHST தெரிவித்தது.

“கூட்டரசு அரசமைப்பின் 3 வது பிரிவில் கூறப்பட்டுள்ளவாறு கூட்டரசின் சமயம் என்ற இஸ்லாத்தின் நிலை குறித்து MCCBCHST ஒரு போதும் கேள்வி எழுப்பியதில்லை என நாங்கள் எங்கள் தரப்பில் வலியுறுத்த விரும்புகிறோம்,” என அது விடுத்த அறிக்கை குறிப்பிட்டது.

என்றாலும் அதே மூன்றாவது பிரிவு “கூட்டரசின் எந்தப் பகுதியிலும் அமைதியாகவும் ஒற்றுமையாகவும் மற்ற சமயங்கள் பின்பற்றப்படலாம்” எனத் தெளிவாக வரையறுத்து மற்ற சமயங்களுக்கும் பாதுகாப்பு அளித்துள்ளது என அந்த அமைப்பு வலியுறுத்தியது.

“மற்ற சமயங்களில் தலையிடாதது, மற்ற சமயங்களை மதிப்பது போன்ற பண்புகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும்” என ராஜா நஸ்ரின் விடுத்த அறிக்கையை எடுத்துக் காட்டிய MCCBCHST மன்றம் அனைத்து
 சமயப் பிரிவுகளும் ஒன்று மற்றதின் சமயத்தை மதிக்க வேண்டும் என்பதையும் கூட்டரசு  அரசமைப்புக்கு வகுத்துள்ள எல்லைக்குள் இயங்க வேண்டும் என்பதையும் சுட்டிக் காட்டியது.

மலேசிய அரசியல், அரசாங்கச் சேவை, பாதுகாப்புப் படைகள் ஆகியவற்றில் மலாய் முஸ்லிம்கள் ஆதிக்கம் செலுத்துவதால் முஸ்லிம் அல்லாதார், முஸ்லிம்களுக்கு எந்த மருட்டலையும் விடுக்கும் நிலையில் இல்லை என MCCBCHST வலியுறுத்தியது.

“இனப் பிரச்னைகளை எழுப்ப வேண்டாம் என முஸ்லிம் அல்லாதாருக்கு எச்சரிக்கை விடுக்கப்படுவது பற்றி நாங்கள் வருத்தமடைந்துள்ளோம். உண்மையில் அந்த அறிக்கை அனைவருக்கும் விடுக்கப்பட வேண்டும்.”

“MCCBCHST இனப் பிரச்னைகளுக்கு ஊக்கமூட்டுவதும் இல்லை. அவற்றை பயன்படுத்துவதும் இல்லை. முஸ்லிம் அல்லாதாருடைய உரிமைகள் பாதிக்கப்படும்போது அது அந்த விவகாரம் தொடர்பில் அரசமைப்பு விதிகளை சுட்டிக் காட்டுகிறது,” என்றும் அதன் அறிக்கை குறிப்பிட்டது.

3வது பிரிவின் எல்லையை விளக்கிய அந்த மன்றம், “இந்த நிலத்தின் உச்சச் சட்டம் அரசமைப்பே” என 4வது பிரிவு கூறுவதாக தெரிவித்தது.

‘ஆரோக்கியமான விவாதம் வலுவான மலேசியாவை உருவாக்கும்’

தனது வாதத்திற்கு வலிமை சேர்க்கும் பொருட்டு  MCCBCHST, ஆங்கில மொழி நாளேடான தி ஸ்டாரில் வெளியான சட்ட நிபுணர் பேராசிரியர் ஷாட் சாலீம் பாருக்கி-யின் கருத்துக்களை மேற்கோள் காட்டியுள்ளது.

“என்றாலும் கூட்டரசின் சமயமாக இஸ்லாம் இருந்தாலும் மலேசியா இஸ்லாமிய நாடு அல்ல. இந்த நிலத்தில் ஷாரியா, அடிப்படைச் சட்டமாக இல்லை. அரசமைப்பே உச்சமானது. அத்துடன் 3வது பிரிவு(இஸ்லாம் மீதான) அரசமைப்பில் உள்ள மற்ற எதனையும் அணைக்கவும் இல்லை.. மற்ற எந்த அரசமைப்பு விதிகளையும் நிராகரிப்பதற்கு 3வது பிரிவை நம்பியிருக்கவும் முடியாது..”

இப்போது பணயம் வைக்கப்பட்டுள்ளது, அரசமைப்பு விதிகளுக்கான விளக்கமே என மன்றம் கருதுகிறது.

“ஆகவே சட்ட வரம்புக்குள் நியாயமான விவாதங்கள் அனுமதிக்கப்பட வேண்டும். ஆரோக்கியமான விவாதங்கள் நமது அரசமைப்பு அடிப்படையில் வலுவான மலேசியாவை மேம்படுத்த நமக்கு வாய்ப்பளிக்கும்,” என்றும் அது தெரிவித்தது.

கடந்த செவ்வாய்க்கிழமையன்று பேராக் மாநிலச் சட்டமன்றக் கூட்டத் தொடரைத் தொடக்கி வைத்த ராஜா நஸ்ரின், இஸ்லாம் மீதான வழிகாட்டிகள் மீறப்படுவது குறித்து ஏமாற்றம் தெரிவித்தார்.

இஸ்லாம் தொடர்பான விவகாரங்களில் சவால் விடுப்பதும் அந்தச் சமயத்தைச் சிறுமைப்படுத்துவதும் முஸ்லிம் அல்லாதாரிடையே அதிகரித்து வருவதாகவும் பேராக் பட்டத்து இளவரசர் குறிப்பிட்டார். அது உறுதியாக கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்றார் அவர்.

அதற்கு அடுத்த நாள் MPM என அழைக்கப்படும் மலாய் ஆலோசனை மன்றத்தில் அங்கம் பெற்றுள்ள 164 அரசு சாரா மலாய் அமைப்புக்கள், ராஜா நஸ்ரினுக்கு ஆதரவு தெரிவித்து இஸ்லாத்தை சிறுமைப்படுத்தவோ அவமானப்படுத்தவோ வேண்டாம் என முஸ்லிம் அல்லாதாருக்கு எச்சரிக்கை விடுத்தன.