நஸ்ரி புதல்வரின் தகராறு சம்பந்தப்பட்ட கேமிரா ஒளிப்பதிவு போலீசாருக்குக் கிடைத்துள்ளது

கோலாலம்பூரில் உள்ள ஆடம்பர அடுக்கு மாடி வீட்டுத் தொகுதி ஒன்றில் கடந்த மாதம் நிகழ்ந்த
ஒர் அமைச்சருடைய புதல்வர், அவரது மெய்க்காவலர், பாதுகாவல் மேற்பார்வையாளர் ஆகியோர் சம்பந்தப்பட்ட “தகராற்றின்” கேமிரா ஒளிப்பதிவுகள் பிரிக்பீல்ட்ஸ் போலீசாருக்கு கிடைத்துள்ளன.

பிரதமர் துறை அமைச்சர் நஸ்ரி அப்துல் அஜிஸின் புதல்வரான முகமட் நெடிம், நெடிமின் மெய்க்காவலர், பாதுகாப்பு மேற்பார்வையாளர் சம்பந்தப்பட்ட அந்த ஒளிப்பதிவுகள் இப்போது புலனாய்வு அதிகாரியிடம் இருப்பதாக சில வட்டாரங்கள் தெரிவித்தன.

அந்த விவகாரம் முடிந்து விட்டதாக பிரிக்பீல்ட்ஸ் ஒசிபிடி (போலீஸ் மாவட்டத் தலைவர்) கூறியுள்ள போதிலும் அந்த விஷயம் இன்னும் விசாரிக்கப்படுவதாக அவை குறிப்பிட்டன.

அந்த வீடியோ ஒளிப்பதிவில் நெடிம் உட்பட “இரண்டுக்கும் மேற்பட்ட நபர்கள்”  50 வயதான மேற்பார்வையாளரைப் பிடித்து வைத்துக் கொண்டு தாக்குவதைக் கண்டு போலீசார் வியப்படைந்துள்ளதாகவும் கூறப்பட்டது.

அதனால் சிறிய குற்றம் – குற்றவியல் சட்டத்தின் 160வது பிரிவின் கீழ் சச்சரவை ஏற்படுத்தியது- என போலீசார் அந்தச் சம்பவத்தை வகைப்படுத்தியிருப்பதில் சிக்கலை ஏற்படுத்தக் கூடும்.

அந்தப் பிரிவின் கீழ் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்படும் ஒருவருக்கு ஆறு மாதங்கள் வரை சிறைத் தண்டனை அல்லது ஆயிரம் ரிங்கிட் அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.

Mont Kiara பகுதியில் உள்ள அந்த ஆடம்பர அடுக்கு மாடி வீட்டுத் தொகுதியில் நெடிமும் அவரது மெய்க்காவலரும் பாதுகாப்பு மேற்பார்வையாளர் ஒருவரை தாக்கியதாக மார்ச் 23ம் தேதி மலேசியாகினி செய்தி வெளியிட்டது.