உங்கள் கருத்து: “மக்கள் சக்தி பற்றி மற்றவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த ஹிண்ட்ராப் துணிச்சலாக ஏதோ ஒன்றைச் செய்துள்ளது. ஆனால் பக்காத்தான் காலம் காலத்துக்கு ஹிண்ட்ராப்புக்கு நன்றிக் கடன் பட்டுள்ளது என எண்ணக் கூடாது.”
ஹிண்ட்ராப்-பை சந்திப்பது பற்றி அன்வார் இன்னும் முடிவு செய்யவில்லை.
ஜிம்னி ரிக்கெட்: ஒரு காலத்தில் இன சமய வேறுபாடின்றி அனைத்து மலேசியர்களுடைய நன்மைக்காக போராட்டம் நடத்தப்பட்ட போது அதன் ஒரு பகுதியாக இருக்கும் பொருட்டு அன்வார் இப்ராஹிம் ஹிண்ட்ராப்-புக்கும் பி உதயகுமாருக்கும் தோழமைக் கரம் நீட்டினார்.
அந்த நேரத்தில் அன்வாருக்கு அதிகமான உதவி தேவைப்பட்டது. பக்காத்தான் ராக்யாட்டின் பொதுவான நோக்கத்தின் கீழ் உதயாவும் ஹிண்ட்ராப்பும் இந்தியர்களை கொண்டு வர முடியும் என்பதும் அவருக்கு தெரிந்திருந்தது.
ஆனால் பொதுவான போராட்டத்துக்கு அன்வார் நீட்டிய நட்புக் கரத்தை நிராகரித்து விட்டு, 15 நாடாளுமன்ற, 38 சட்டமன்ற இடங்களுக்கு உதயா கோரிக்கை விடுத்தார். அதனை பக்காத்தான் ஏற்கா விட்டால் பிஎன், பக்காத்தான் ஆகிய இரண்டுக்கும் எதிராக இந்தியர்களை ஒன்று திரட்டும் என்றும் உதயா கூறினார்.
இன்று அவர் கீழே விழுந்து விட்ட ஹீரோவைப் போல முணுமுணுத்துக் கொண்டிருக்கிறார். அரசியல் ரீதியில் தாம் உயிருடன் நிலைத்திருப்பதற்குத் விரக்தி அடைந்த நிலையில் அவர் மேற்கொள்ளும் முயற்சிகளில் நிபந்தனைகளை விதிக்க முடியும் என அவர் இன்னும் கற்பனை செய்து கொண்டிருக்கிறார். மிகவும் பரிதாபமான சூழ்நிலை.
இன அடிப்படை அரசியலை வெறுக்கும் ஆட்சியை அமர்த்துவதற்கு நம்முடன் இணைந்து செல்ல பெரும்பான்மை நகர்ப்புற இந்தியர்கள் தயாராகி விட்டனர். அதனை அவர் இன்னும் உணரவில்லை எனத் தோன்றுகிறது. மக்கள் போராட்டத்துக்கு அவர் இனிமேலும் பொருத்தமானவர் அல்ல என்பதை அது உணர்த்தி விட்டது.
தாம் பரிசீலிப்பதாக அன்வார் மிகுந்த மரியாதையுடன் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
காந்தி: ஹிண்ட்ராப்பைக் குறை கூறுகின்றவர்கள் குறுகிய கண்ணோட்டத்தைக் கொண்டவர்கள். நன்றி இல்லாத பக்காத்தான் பல இனம் பற்றிப் பேசுகிறது. ஆனால் அது வெறும் உதட்டளவில் மட்டும் தான்.
உதயா இல்லாவிட்டால் இந்தியர்கள் எதிர்நோக்கும் இக்கட்டான சூழ்நிலைகளை எந்த இந்தியரும் இவ்வளவு பெரிதாக அம்பலப்படுத்தியிருக்க மாட்டார்கள். பக்காத்தானுடன் ஒத்துழைக்க உதயா தயாராக இருக்கிறார். ஆனால் பிஎன் அல்லது பக்காத்தானில் உள்ள மண்டோர்களைப் போன்று அவர் மண்டியிடத் தயாராக இல்லை.
அவர் காரியத்தில் கண்ணாக இருக்கிறார். மௌனமாக இருக்கும் பெரும்பாலான மலேசிய இந்தியர்கள் கண்ணை மூடிக் கொண்டு வாக்களிக்கப் போவதில்லை.
பொய்யைக் கண்டு பிடிக்கும் எந்திரம்: பிஎன் -னுக்கும் பக்காத்தானுக்கும் வேறுபாடு இல்லை என ஹிண்ட்ராப்பும் உதயாவும் அடிக்கடி கூறி வந்துள்ளனர். உண்மையில் பக்காத்தான் தலைவர்களை ஹிண்ட்ராப் ‘மண்டோர்கள்’ என்றுதான் அழைக்கிறது.
இந்தியர்கள் கணிசமாக இருக்கும் இடங்களில் மும்முனைப் போட்டியை திணிக்கப் போவதாகக் கூட ஹிண்ட்ராப் மருட்டியுள்ளது.
சிலாங்கூர் மந்திரி புசார் காலித் இப்ராஹிம் மட்டுமே எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல் இந்து ஆலயம் ஒன்றுக்கு போராடுவதற்காக துணிச்சலாக ஷா அலாம் நகர மண்டபத்துக்குச் சென்றதை ஹிண்ட்ராப் மறந்து விட்டது. உண்மையில் அவர் மண்டோரா?
நாடோடி: மக்கள் சக்தி பற்றி மற்றவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த ஹிண்ட்ராப் துணிச்சலாக ஏதோ ஒன்றைச் செய்துள்ளது. ஆனால் பக்காத்தான் காலம் காலத்துக்கு ஹிண்ட்ராப்புக்கு நன்றிக் கடன் பட்டுள்ளது என எண்ணக் கூடாது.
மலேசிய இந்தியர்கள் எப்போதும் மதில் மேல் பூனைகளாவும் கடப்பாட்டு காட்டாதவர்களாகவுமே இருந்து வந்துள்ளனர். தானியங்கள் நிறைந்த ரயில் பெட்டி வந்தால் மட்டுமே அவர்கள் இயங்குவர். ஆகவே உங்களுடைய துரதிர்ஷ்டத்துக்கு ஏன் மற்றவர்கள் மீது பழி போட வேண்டும்.
உண்மையில் ஹிண்ட்ராப் தனது எதிர்காலப் பாதையை உறுதி செய்து தான் இணைய விரும்பும் கூட்டணியுடன் எந்த நிபந்தனையும் இல்லாமல் சேர்ந்து கொள்ள வேண்டும்.