பனிச்சரிவில் சிக்கிய நூற்றுக்கும் அதிகமான பாகிஸ்தானிய சிப்பாய்கள்

இமாலய பிரதேசத்தில் இருக்கும் இலகுவில் செல்ல முடியாத பாகிஸ்தானிய இராணுவ தளம் ஒன்றில் ஏற்பட்ட பனிச்சரிவில் நூற்றுக்கும் அதிகமான பாகிஸ்தானிய சிப்பாய்கள் அடித்துச் செல்லப்பட்டதாக பாகிஸ்தான் இராணுவம் கூறியுள்ளது.

வானூர்தி மற்றும் மோப்ப நாய்களின் உதவியுடம் மீட்புக் குழுக்கள் தேடுதலில் ஈடுபட்டுள்ளதாகவும், சில சடலங்கள் மீட்கப்பட்டதாகவும் பாகிஸ்தான் இராணுவம் கூறியுள்ளது.

சியாச்சின் பனிமலையில், கடல் மட்டத்தில் இருந்து 6000 மீட்டர் உயரத்தில் ஒரு இலகுவில் சென்றடைய முடியாத இடத்தில் இருந்த படையணி தலைமையகத்தை பனிச்சரிவு தாக்கியுள்ளது.

இந்தப் பகுதி உலகின் மிகவும் உயரமான மோதல் களங்களில் ஒன்றாக கூறப்படுகிறது. அங்கு ஆயிரக்கணக்கான இந்திய, பாகிஸ்தானிய துருப்பினர் நிறுத்தப்பட்டிருக்கிறார்கள்.

இந்த பகுதியில் கடந்த காலங்களில் மோதலை விட மோசமான காலநிலை காரணமாகவே அதிகமான சிப்பாய்கள் உயிரிழந்து வருவதாக இராணுவ நிபுணர்கள் கூறுகிறார்கள்.