நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட பல்கலைக்கழக, பல்கலைக்கழகக் கல்லூரிச் சட்டத் திருத்த மசோதாவை பிகேஆர் கடுமையாக சாடியுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ள திருத்தங்கள் மாணவர்கள் அரசியலில் பங்கு கொள்வதை மேலும் கடுமையாக்கியுள்ளதாக அந்தக் கட்சியின் உதவித் தலைவர் என் சுரேந்திரன் கூறினார்.
“அந்தத் திருத்தங்கள் மேலோட்டமானவை, பயனற்றவை, மாணவர்கள், பல்கலைக்கழகங்கள் மீது அம்னோ/பிஎன் வைத்துள்ள இரும்புப் பிடியை தொடர்ந்து நிலை நிறுத்தும் நோக்கத்தைக் கொண்டவை,” என்றார் அவர்.
அரசியல் கட்சிகளில் மாணவர்கள் உறுப்பியம் பெறுவதற்கு அந்தத் திருத்தங்கள் அனுமதித்தாலும் அவர்கள் பல்கலைக்கழகத் தேர்தல்களில் பங்கு கொள்ளக் கூடாது என்றும் மாணவர் அமைப்புக்களில் பதவிகளை வகிக்கக் கூடாது என்ற கட்டுப்பாடும் விதிக்கப்படுகிறது.”
“அரசியல் கட்சிகளில் உறுப்பினர்களாகும் மாணவர்கள் பல்கலைக்கழகங்களில் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது என்பதே அதன் அர்த்தம் என சுரேந்திரன் விடுத்த அறிக்கை கூறியது.
“இத்தகைய தேவையற்ற ஒடுக்குமுறையான கட்டுப்பாடுகள் அரசியல் கட்சிகளில் உறுப்பினர்களாகும் மாணவர் உரிமைகளை அர்த்தமற்றதாக்கி விட்டது.”
“அந்தக் கட்டுப்பாடுகள் கூட்டரசு அரசமைப்பின் 10வது பிரிவை மீறுகின்றன. அதனால் அவை சட்ட விரோதமானவை, அரசமைப்புக்கு முரணானவை.”
“சீர்திருத்தங்களை அறிமுகம் செய்வதாக நஜிப் வாக்குறுதி அளித்துள்ள போதிலும் மாணவர்களுக்கும் பல்கலைக்கழகங்களுக்கும் கூடுதல் சுதந்திரத்தை வழங்கும் எண்ணம் அரசாங்கத்துக்கு இல்லை என்பது இப்போது தெளிவாகி விட்டது,” என்றும் சுரேந்திரன் குறிப்பிட்டார்.
இன்று மொத்தம் மூன்று மசோதாக்கள் மக்களவையில் முதலாவது வாசிப்புக்குத் தாக்கல் செய்யப்பட்டன. 2012ம் ஆண்டுக்கான பல்கலைக்கழக, பல்கலைக்கழகக் கல்லூரிச் சட்டத் திருத்த மசோதா, 2012ம் ஆண்டுக்கான தனியார் உயர் கல்விக் கூட திருத்த மசோதா, 2012ம் ஆண்டுக்கான கல்விக் கூடங்கள் (கட்டொழுங்கு) மசோதா ஆகியவையே அவை.
பல்கலைக்கழக, பல்கலைக்கழகக் கல்லூரிச் சட்டத்தையே குறை கூறிய சுரேந்திரன், பிரதமர் அந்தச் சட்டத்தை முழுமையாக ரத்துச் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
துணை வேந்தர்கள் நியமனம், பல்கலைக்கழக இயக்குநர்கள் வாரியம், மேலவை ஆகியவற்றின் உறுப்பினர்கள் நியமனம் ஆகியவற்றை அந்தச் சட்டத்தின் கீழ் அரசாங்கம் தன் கட்டுக்குள் வைத்திருக்கிறது.
பல்கலைக்கழக, பல்கலைக்கழகக் கல்லூரிச் சட்டத்தின் நான்காவது பிரிவு “பல்கலைக்கழக விவகாரங்களில் அமைச்சர் நேரடியாகத் தலையிடுவதற்கு அனுமதிக்கிறது என சுரேந்திரன் குறிப்பிட்டார்.
அந்தக் கட்டுப்பாடுகள் இந்த நாட்டில் இயங்கும் உள்நாட்டுப் பல்கலைக்கழகங்களின் தரம் வீழ்ச்சி காண வழி வகுத்து விட்டது என அவர் கூறிக் கொண்டார்.
“நமது பல்கலைக்கழகங்களின் நிர்வாக, கல்வி சார்ந்த அம்சங்களில் பிஎன் இரும்புப் பிடியை வைத்திருப்பதற்கு அது அனுமதிக்கிறது. அதனால் நமது பல்கலைக்கழகங்களில் உண்மையான சிந்தனையும் புத்தாக்க உணர்வும் அறிவாற்றல் ஆர்வமும் தாழ்ந்து விட்டது. அதனைத் தொடர்ந்து அவற்றின் கல்வித் தரமும் விழுந்து விட்டது.”
ஆகவே பிரதமர் பல்கலைக்கழக, பல்கலைக்கழகக் கல்லூரிச் சட்டத் திருத்தங்களை மீட்டுக் கொண்டு அந்தச் சட்டத்தை முழுமையாக ரத்துச் செய்வதற்கு புதிய மசோதாவைக் கொண்டு வர வேண்டும் என்றும் சுரேந்திரன் கேட்டுக் கொண்டார்.
“பல்கலைக்கழக, பல்கலைக்கழகக் கல்லூரிச் சட்டத்திற்கு சமர்பிக்கப்பட்டுள்ள நேர்மை இல்லாத போலியான ஒப்பனையான திருத்தங்கள் மக்களுடைய ஆதரவைத் தரப் போவதில்லை என்பதை நஜிப் புரிந்து கொள்ள வேண்டும்,” என்றும் அவர் சொன்னார்.