வெட்டுமர ஊழல் பற்றித் தமக்கு எதுவும் தெரியாது என்கிறார் அனீபா

சபா முதலமைச்சரும் தமது மூத்த சகோதரருமான மூசா அமானிடமிருந்து ஆதாயமிக்க வெட்டுமர அனுமதிகளை ஊழல் வழிகளில் தாம் பெற்றதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம்(எம்ஏசிசி) கண்டு பிடித்துள்ளதாக கூறப்படுவது தமக்கு எதுவும் தெரியாது என வெளியுறவு அமைச்சர் அனீபா அமான் இன்று கூறிக் கொண்டுள்ளார்.

அந்தக் குற்றச்சாட்டை ஜோடித்தவர்கள் உண்மையில் ‘விரக்தி அடைந்தவர்களாக’ இருக்க வேண்டும்’ என கிமானிஸ் எம்பி-யுமான அவர் தெரிவித்தார்.

“அது குறித்து எனக்கு எதுவும் தெரியாது. அதனை வெளியிட்டவர்களை நீங்கள் ஏன் கேட்கக் கூடாது,” என தொடர்பு கொள்ளப்பட்ட போது அனீபா சொன்னார்.

எம்ஏசிசி அவரை விசாரித்ததா என்ற கேள்வியை எழுப்பிய போது அனீபா அதனை மீண்டும் மறுத்தார்.

“இது குறித்து நான் இப்போது தான் முதன் முறையாகக் கேள்விப்படுகிறேன். சம்பந்தப்பட்டவர்கள் என் மீது பழி போடுவதற்கு உண்மையில் விரக்தி அடைந்த நிலையில் இருக்க வேண்டும். நான் இது போன்ற அரசியலில் ஈடுபடுவது இல்லை. அதில் இழுக்கப்படுவதையும் நான் விரும்பவில்லை.”

கடந்த வியாழக் கிழமை சரவாக் ரிப்போர்ட் என்னும் இணையத் தளம், பல மில்லியன் ரிங்கிட் பெறும் வெட்டுமர அனுமதிகளை சபா முதலமைச்சர் மூசா அமான் தமது சகோதரரும் வெளியுறவு அமைச்சருமான அனீபா அமானுக்கு  ஊழல் வழிகளில் வழங்கியிருப்பதாக எம்ஏசிசி புலனாய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளனர் எனக் கூறியது. அது தொடர்பான எம்ஏசிசி ஆவணங்கள் வெளியில் கசிந்து தனக்குக் கிடைத்துள்ளதாகவும் அது தெரிவித்தது.

2008ம் ஆண்டு ஹாங்காங்கிலிருந்து 16 மில்லியன் ரிங்கிட்டை வெளியில் கடத்திச் செல்ல முயன்ற ஒர் ஏஜண்டும் மூசா அமானின் பேராளருமான மைக்கல் சியா பிடிபட்ட பின்னர் வெட்டுமர ஊழல் மீது எம்ஏசிசி மேற்கொண்ட புலனாய்வின் ஒரு பகுதி அந்த ஆவணங்கள் என்றும் சரவாக் ரிப்போர்ட் குறிப்பிட்டது.

அந்த விவகாரத்தில் தாம் சம்பந்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுவதை மூசாவும் மறுத்துள்ளார். அமான் குடும்பத்துடன் அணுக்கமான தொடர்புகளைக் கொண்ட சட்டத் துறைத் தலைவர் அப்துல் கனி பட்டெய்ல், சபாவில் முழுக்க முழுக்க மேற்கொள்ளப்பட்ட புலனாய்வை எம்ஏசிசி மூடுமாறு கட்டாயப்படுத்தினார் என்றும் சரவாக் ரிப்போர்ட் கூறிக் கொண்டது.

எம்ஏசிசி -யிடமிருந்து பெறப்பட்டதாகக் கூறப்பட்ட அந்த ஆவணங்களையும் வெளியிட்ட அந்த இணையத் தளம், இரண்டு நிறுவனங்கள் வழியாகப் பெறப்பட்ட இரண்டு வெட்டுமரச் சலுகைகளில் முக்கியமாக நன்மை அடைந்தவர்கள் அனீபாவும் அவரது நெருங்கிய உறவினருமான ஹைருல் அமானும் ஆவர் என்றும் சரவாக் ரிப்போர்ட் குறிப்பிட்டது.

Aktif Syabas Sdn Bhd, Para Era Sdn Bhd ஆகியவையே அந்த இரண்டு நிறுவனங்கள் ஆகும்.

அந்தக் குற்றச்சாட்டுக்களை உறுதி செய்வதற்காக மலேசியாகினி, எம்ஏசிசி-யுடன் தொடர்பு கொண்டது. ஆனால் இது வரை எந்தப் பதிலும் இல்லை.