முன்னாள் வர்த்தகக் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் ராமிலி யூசோப் வெளியிட்டுள்ள தகவல்கள் பழைய குற்றச்சாட்டுக்கள் என ஐஜிபி என்ற தேசிய போலீஸ் படைத் தலைவர் இஸ்மாயில் ஒமார் வருணித்துள்ளார்.
அந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்ப்பில் புதிய புகார்கள் ஏதும் தமக்குக் கிடைக்கவில்லை என்றார் அவர்.
“நீங்கள் பழைய கதையைப் பற்றிச் சொல்கின்றீர்களா? அது கவனிக்கப்பட்டு விட்டது,” என Copgate என்ற போலீஸ் ஊழல் பற்றி நிருபர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதில் அளித்த இஸ்மாயில் கூறினார்.
“எனக்கு அந்த விவகாரம் மீது புதிதாக எந்தப் புகாரும் வரவில்லை. பலர் வெளியில் வந்து குற்றச்சாட்டுக்களை சுமத்துகின்றனர். அவர் மட்டும் தனியாக இல்லை. ஆனால் அவற்றுக்கு ஆதாரங்களும் விவரங்களும் இருக்க வேண்டும். ஏதும் இருந்தால் அவர் நாட்டின் முறைகளை பின்பற்ற வேண்டும்,” என்றார் அவர்.
முன்னாள் ஐஜிபி மூசா ஹசானுக்கு ரகசியக் கும்பல் தலைவன் ஒருவன் ஆதரவளித்தான் என்றும் சட்டத் துறைத் தலைவர் அப்துல் கனி பட்டெய்ல், அப்போதைய ஊழல் தடுப்பு நிறுவனம் ஆகிய தரப்புக்களின் ஒத்துழைப்புடன் தம்மையும் தமது ஆட்களையும் சிக்க வைத்தார் என்றும் ராம்லி தெரிவித்துள்ள குற்றச்சாட்டுக்கள் பற்றிக் கருத்துரைக்குமாறு இஸ்மாயில் இதற்கு முன்னர் கேட்டுக் கொள்ளப்பட்டார்.