“மாட் இந்ரா, முஹைடின் தந்தையின் மாணவர்”

புக்கிட் கெப்போங்கை தாக்கிய கம்யூனிஸ்ட் தலைவர் என கூறப்பட்டுள்ள ஒருவருக்கும் அந்த விவகாரம் மீது  கடுமையாக விமர்சனம் செய்துள்ள மூத்த அம்னோ அரசியல்வாதிக்கும் இடையிலான வினோதமான தொடர்பு பற்றிய வரலாறு வெளியாகியுள்ளது.

1950ம் ஆண்டு கம்யூனிஸ்ட் கிளர்ச்சியின் போது புக்கிட் கெப்போங் போலீஸ் நிலையத்தைத் தாக்கி போலீஸ் அதிகாரிகளுக்கும் சிவிலியன்களுக்கும் மரணம் விளைவித்ததாக குற்றம் சாட்டப்பட்ட மெர்தேகாவுக்கு முந்திய தேசியவாதியான ‘மாட் இந்ரா’வுக்கு துணைப் பிரதமர் முஹடின் யாசினுடைய தந்தையார் மாட் யாசின் ஆசிரியர் என பாஸ் கட்சி கூறுகிறது.

அந்த வினோதம் மேலும் தொடர்கிறது…. ஒரு கட்டத்தில் மாட் இந்ரா முஹைடினுடைய மூத்த சகோதரியை திருமணம் செய்து கொள்ள விரும்பியதாகவும் கூறப்படுகிறது.

“மாட் இந்ரா துணைப் பிரதமர் முஹைடின் யாசினுடைய சகோதரியை மணந்து கொள்ள விரும்பினார். ஆனால் மாட் இந்ராவின் தந்தை அதற்கு இணங்கவில்லை”, என ஜோகூர் பாஸ் இளைஞர் பிரிவுத் தலைவர் சுஹாய்ஸான் காயாட் தமது பேஸ் புக் பக்கத்தில் எழுதியுள்ளார்.

அவர் ஜோகூர்பாருவில் மாட் இந்ராவின் இளைய சகோதரரான ஜொஹான் ஷாவை பெஞ்சாரா ஆயர் மொலெக்கில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்த பின்னர் அவர் அதனை எழுதினார்.

அந்தச் சந்திப்பின் போது பாஸ் துணைத் தலைவர் முகமட் மாட் சாபுவும் ஜோகூர் பாஸ் ஆணையாளர் டாக்டர் மாஹ்போட்ஸ் முகமட்டும் உடனிருந்தார்கள்.

“மாட் இந்ராவை கம்யூனிஸ்ட் என குற்றம் சாட்டியது பிரிட்டிஷ்காரர்களே,” என சுஹாய்ஸான் மேலும் கூறினார். மாட் இந்ரா இறுதியில் காலனித்துவ ஆட்சியாளர்களினால் சிறைப் பிடிக்கப்பட்டு தூக்கிலிடப்பட்டார்.

புக்கிட் கெப்போங் சம்பவத்தில் உண்மையான வீரர் மாட் இந்ரா என்றும் பிரிட்டிஷ் காலனித்துவ அரசாங்கத்தின் சட்டங்களையும் நிர்வாகத்தையும் அமலாக்கிய மலாய் போலீஸ் அதிகாரிகள் அல்ல என்றும் முகமட் சாபு கூறியதைத் தொடர்ந்து அவர் கடுமையான விமர்சனத்துக்கு இலக்காகியுள்ளார்.

அவ்வாறு மாட் சாபுவை கடுமையாகக் குறை கூறியவர்களில் முஹைடினும் ஒருவர் ஆவார்.

துன்புறுத்தப்பட்டு நாடு கடத்தப்பட்டனர்

ஜொஹானுடன் தாம் நடத்திய சந்திப்பு குறித்து விவரித்த சுஹாய்ஸான், ஜொஹன், அவரது தந்தை, மாற்றாந்தாய், தாத்தா ஆகியோர் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களினால் சித்தரவதை செய்யப்பட்ட பின்னர் 1950க்கும் 1954க்கும் இடையில் சிங்கப்பூருக்கு நாடு கடத்தப்பட்டதாகச் சொன்னார்.

“மக்கள் பிரிட்டிஷாரைக் கண்டு அஞ்சினர். அதனால் பிரிட்டிஷ்காரர்கள் மாட் இந்ரா மீது வழக்குத் தொடர்ந்த போது அவரை தற்காப்பதற்கு யாரும் முன்வரவில்லை.”

ஜொஹான் கூறியதாக சுஹாய்ஸான் தெரிவித்த சில விவரங்கள்:

– மாட் இந்ரா எட்டுக் குழந்தைகளில் இரண்டாவது மூத்த குழந்தை ஆவார். ஜொஹான் இரண்டு வயதாக இருந்த போது தாயார் இறந்து விட்டார்.

– புக்கிட் கெப்போங் நிகழ்வுக்கு முன்னர் மாட் இந்ராவை பிடிக்க உதவுகின்றவர்களுக்கு 25,000 டாலர் வெகுமதி வழங்க பிரிட்டிஷ்காரர்கள் முன் வந்தனர். அந்த சம்பவத்துக்குப் பின்னர் அது 75,000 டாலராக உயர்த்தப்பட்டது.

– அந்தச் சம்பவம் நிகழ்ந்த கடைசி நேரத்தில் தான் மாட் இந்ரா புக்கிட் கெப்போங்கை சென்றடைந்தார். அவர் அந்தப் போலீஸ் நிலையம் மீது நடந்த தாக்குதலில் சம்பந்தப்படவே இல்லை.

– மாட் இந்ரா, யூசோப் ரோனோ என்ற பெயரைக் கொண்ட போலீஸ் அதிகாரி ஒருவரைக் காப்பாற்றியுள்ளார்.

– மாட் இந்ராவை அப்போதைய ஜோகூர் அரசாங்கம் சமய ஆசிரியராக நியமித்தது. அவருக்கு சீருடையும் அதிகாரத்துவ சொங்கோக்கும் கொடுக்கப்பட்டன. அவர் பிரபலமான சமய ஆசிரியர் துவான் குரு பாடிலிடம் கல்வி கற்றார்.

– 1953ம் ஆண்டு தைப்பிங்கில் உள்ள கம்போங் ஜம்பு ஆயரில் மாட் இந்ரா துக்கிலிடப்பட்டார். அவர் கல்லறையில் தனியாக அடக்கம் செய்யப்பட்டார்.

– மாட் இந்ரா திருமணம் செய்து கொள்ளவே இல்லை

ஜொஹானுடன் நாளை கோலாலம்பூரில் உள்ள பாஸ் தலைமையகத்தில் நிருபர்களைச் சந்திக்கப் போவதாக ஜோகூர் பாஸ் இளைஞர் பிரிவு விடுத்த அறிக்கை ஒன்று கூறியுள்ளது.