ஏப்ரல் 28ம் தேதி புக்கிட் மேராவில் லினாஸ் எதிர்ப்புப் பேரணி

பேராக்கில் உள்ள லினாஸ் எதிர்ப்புப் போராளிகள் ஏப்ரல் 28ம் தேதி புக்கிட் மேராவில் பேரணி ஒன்றுக்கு ஏற்பாடு செய்து வருகின்றனர்.

அதே நாளன்று கோலாலம்பூரில் ஹிம்புனான் ஹிஜாவ் நடத்த எண்ணியுள்ள ஊர்வலத்துடன் ஒருமைப்பாட்டைக் காட்டும் வகையில் அந்தப் பேரணி நடத்தப்படுகிறது.

அந்த விவரங்களை மாநில லினாஸ் எதிர்ப்புக் குழுத் துணைத் தலைவர் ஹோன் எங் கீ வெளியிட்டார்.

கோலாலம்பூரில் நிகழும் ஊர்வலத்தில் பங்கு கொள்ள முடியாதவர்கள் அந்தப் போரட்டத்துக்கு தங்கள் ஆதரவை பேராக் மக்கள் தெரிவிக்க அந்தப் பேரணி உதவும் என்றார் அவர்.

“லினாஸுக்கு எதிராக நாங்கள் பேசுவதற்கு மிகவும் பொருத்தமான இடம் புக்கிட் மேரா ஆகும். ஏனெனில் அந்த இடத்தில்தான்  Asian Rare Earth (ARE) என்ற அரிய மண் தொழில் கூடம் அமைந்திருந்தது.

அந்தத் தொழில் கூடம் 1994ம் ஆண்டு மூடப்பட்டது. அதனைத் தொடர்ந்து பெரிய அளவில் துப்புரவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. காரணம் புக்கிட் மேரா பகுதியில் ரத்தப் புற்று நோய்க்கு இலக்கானவர் எண்ணிக்கை வழக்கத்திற்கு மாறாக அதிகமாக இருந்ததாகும்.

பேரணியின் போது பங்கேற்பாளர்கள் பச்சை நிறக் கொடிகளை உயர்த்துவார்கள். சுற்றுச் சூழலை பாதுகாக்க அவர்கள் கொண்டுள்ள உறுதியைக் காட்டும் வகையில் அது அமைந்திருக்கும்.

“பங்கேற்பாளர்களுக்கு தங்களது சொந்த பச்சை நிறைக் குடையைக் கொண்டு வருமாறும் ஆலோசனை கூறப்பட்டுள்ளது. நாங்கள் லினாஸ் எதிர்ப்புச் சின்னத்தை அதில் முத்திரையிடுவோம்,” என்றார் அவர்.

பாகாங்கில் அமையும் லினாஸ் அரிய மண் தொழில் கூடத்துக்கு ஆட்சேபம் தெரிவிக்கும் வகையில் KLCC-யிலிருந்து ஊர்வலமாக மெர்தேக்கா சதுக்கத்துக்குச் செல்லப் போவதாக ஹிம்புனான் ஹிஜாவ் அறிவித்துள்ளது.

அந்த ஊர்வலம் அன்றைய தினம்  தூய்மையான, சுதந்திரமான தேர்தல்களைக் கோரி பெர்சே 3.0 பிற்பகல் 2 மணி தொடக்கம் அந்தச் சதுக்கத்தில் நடத்தும் குந்தியிருப்பு ஆட்சேபக் கூட்டத்துடன் இணைந்து கொள்ளும்.

தேர்தல் சீர்திருத்தத்துக்கான வேண்டுகோளுடன் ஒருமைப்பாட்டைக் காட்டும் அதே வேளையில் ஹிம்புனான் ஹிஜாவ் பேரணிக்கு ஆதரவு அளிக்கும் வகையில் “துணைப் பேரணியாக” புக்கிட் மேரா பேரணி விளங்கும் என்றும் ஹோன் சொன்னார்.