நிரந்தர வசிப்பிடத்தகுதி பெற்றிருந்தவர் என்றும் பின்னர் நான்கே மணி நேரத்தில் குடியுரிமை பெற்றவர் என்றும் கூறப்பட்ட மிஸ்மாவை ஊடகங்கள் தேடிக் கண்டுபிடித்துள்ளன.
ஆனால் அவர், தமக்குக் குடியுரிமை வழங்கப்பட்டதில் முறைகேடு நிகழ்ந்ததாகக் கூறப்படுவதை மறுக்கிறார்.
“எல்லாரையும்போல் நானும் சட்டத்தைப் பின்பற்றியே பெற்றேன். மற்றவர்கள் சொல்வதைப்போல் அல்ல”, என்று அவர் கூறியதாக மலாய் நாளேடான சினார் ஹரியான் கூறியது.
இந்தோனேசியாவின் பாவேனில் பிறந்தவரான மிஸ்மா, “குறுக்குவழியில்” குடியுரிமை பெற்றார் என்று கூறப்படுவதைக் கேட்டு ஆத்திரமுற்றார்.
கடந்த வாரம், தேசிய பதிவுத் துறை (என்ஆர்டி)யின் இணையத் தளத்தில் நிரந்தர வசிப்பிடத் தகுதி பெற்றிருந்த மிஸ்மா, தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியலில் வாக்காளராக இடம்பெற்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அது கண்டுபிடிக்கப்பட்ட சில மணி நேரத்தில், மிஸ்மாவின் நிலை மலேசியக் குடியுரிமை பெற்றவர் எனத் ‘தரம் உயர்த்தப்பட்டிருந்தது’.
பின்னர் அதற்கு விளக்கமளித்த என்ஆர்டி, 29 ஆண்டுகளாக நிரந்தர வசிப்பிடத் தகுதியுடன் இருந்த மிஸ்மாவுக்கு இவ்வாண்டு ஜனவரியில் குடியுரிமை வழங்கப்பட்டதாகக் கூறியது. ஆனால் அதன் இணையத்தளத்தில் ஏன் இந்தக் குளறுபடி நேர்ந்தது என்று அது தெளிவுபடுத்தவில்லை.
பக்காத்தான் ரக்யாட் நாடுமுழுக்க இதேபோன்று 1597 சம்பவங்கள் நிகழ்ந்திருப்பதாகக் கூறி அது பற்றி விவாதிக்க பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், அவசர நாடாளுமன்றக் கூட்டத்தை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது.