மங்கோலிய பெண்ணான அல்தான்துயாவின் படுகொலை வழக்கு விசாரணை நடந்த ஆண்டு 2007 க்குப் பின்னர் முதல்முறையாக தனது மகள் இப்போது பிரதமராக இருக்கும் நஜிப் அப்துல் ரசாக்குடன் எடுத்துக்கொண்ட “ஒரு படத்தை நிச்சயமாக பார்த்திருப்பதாக” அப்பெண்ணின் தகப்பனார் கூறுகிறார்.
இரு ஆண்களுடன் தமது மகள் அல்தான்துயா எடுத்துக்கொண்ட ஒரு படத்தை அவர் தம்மிடம் காட்டினார் என்றும் அவ்விருவரும் நஜிப் மற்றும் அவருடைய நெருங்கிய நண்பர் அப்துல் ரசாக் பகிண்டா என்று பின்னர் தமக்குத் தெரியவந்ததாகவும் அல்தான்துயாவின் தந்தையான செட்டீவ் ஷாரீபூ நேற்று சுவாராம் என்ற மனித உரிமை கழகத்துடன் நடந்த கூட்டத்தில் கூறினார்.
அக்டோபர் 2006 இல் மலேசியாவுக்கு புறப்படுவதற்கு முன்பு, “சில நிறுவனங்களுக்கு” மொழிபெயர்ப்பு வேலை செய்ததற்காக தமக்கு வாக்குறுதியளிக்கப்பட்ட தொகையைப் பெற்றுக்கொள்வதற்காக தாம் ரசாக்கை சந்திக்கப் போவதாக அல்தான்துயா தம்மிடம் கூறியதாக ஷாரீபூ மொழிபெயர்ப்பாளர் மூலம் கூறினார்.
அல்தான்துயா கொலை வழக்கில் அவரை கொலை செய்வதற்கு உடந்தையாக இருந்ததாக ரசாக் மீது குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் அவர் தற்காப்பு விவாதம் செய்ய அழைக்கப்படாமலே விடுவிக்கப்பட்டார்.
அக்கொலைக்காக இரு போலீஸ்காரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டு, அவர்கள் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டு, அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அவர்களின் மேல்முறையீடு இன்னும் விசாரணைக்காக காத்திருக்கிறது.
“அதைப் (படத்தை) பார்த்தது நான் மட்டுமல்ல…பூர்மா ஒயுன்சிமெக்கும் (வலம்) அதைப் பார்த்தார். 2007 ஆம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் ஒரு சாட்சியான அவர் இது பற்றி நீதிமன்றத்தில் கூறியுள்ளார்”, என்று ஷாரீபூ கூறினார்.
“அவர் (அல்தான்துயா) அப்படத்தைக் காட்டியபோது, பூர்மாவும் அங்கிருந்தார். தாம் மலேசியாவுக்கு சென்று தமக்கு சேர வேண்டிய பணத்தை பெற்றுக்கொள்ளப் போவதாக அவர் எங்களிடம் கூறினார்.”
“எனது கண்களால் நான் கண்ட” மூவர் இருந்த அந்தப் படத்தை பற்றி விவரித்த ஷாரீபூ, அப்படம் பாரிஸில் ஓர் உணவகத்தில் எடுக்கப்பட்டது என்பது அதன் பின்புறக்காட்சியில் காணப்படும் பிரஞ்ச் சொற்களிலிருந்து தெரிந்து கொள்ளலாம் என்றார்.
அல்தான்துயாவுக்கு தரகுப் பணம்
மொழிபெயர்ப்பு வேலையில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் பெயர்களை அல்தான்துயாவால் நினைவு கூற முடியவில்லை என்று சுவாராம் கூட்டத்தில் கூறிய ஷாரீபூ, அவர் ஒப்புக்கொண்ட ஒவ்வொரு மொழிபெயர்ப்பு வேலை திட்டத்திற்கும் “0.0003 லிருந்து 3 விழுக்காட்டிற்கு இடையிலான” தரகுப் பணம் தரப்படும் என்று ரசாக் வாக்குறுதி அளித்திருந்தார் என்று அல்தான்துயா தம்மிடம் கூறியதாக அவர் தெரிவித்தார்.
எனினும், அத்தரகுப் பணம் அமெரிக்க டாலாரிலா அல்லது யூரோவிலா என்பதில் தாம் தீர்வாக இல்லை என்று ஷாரீபூ கூறினார். ஆனால், அது “ஒரு பெரும்” தொகை என்றார்.
“பின்னர், அது அமெரிக்க டாலரில் கொடுக்கப்படும் நான் கேள்விப்பட்டேன். நான் இதனை கர்பால் சிங்கிடம் கூறினேன். நாங்கள் கணக்கிட்டுப் பார்த்ததில் அத்தொகை சுமார் ரிம100 மில்லியனாகியது”, என்று அவர் மேலும் கூறினார்.
தமது மகளின் அகால மரணத்தினால் தாமும் தமது குடும்பத்தினரும் தொடர்ந்து அனுபவித்து வரும் துயரங்களுக்காக மலேசிய அரசாங்கம், ரசாக் மற்றும் அவ்விரு போலீஸ் அதிகாரிகளுக்கு எதிராக ரிம100 மில்லியன் சிவில் வழக்கை ஷாரீபூ தொடர்ந்துள்ளார்.