புறக்கணிப்பின் பலனை அனுபவிப்பீர்:என்யுபிஇ எச்சரிக்கை

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், மலாயன் பேங்கிங் பெர்ஹாட்(மே பேங்க்)டின் சுரண்டல் மற்றும் தொழிற்சங்கத்தை எதிர்க்கும் மனப்போக்கைக் கண்டும் காணாததுபோல் இருந்து வந்தால் ஏற்கனவே சரிவுகண்டுள்ள பிஎன் அரசுக்கான ஆதரவு மேலும் மோசமடையலாம் என்று தேசிய வங்கி ஊழியர் சங்கம்(என்யுபிஇ) எச்சரித்துள்ளது.

உறுப்பினர்களின் மனக்குறைகளைப் பலவழிகளில் வெளிப்படுத்திப் பார்த்தும் பயனில்லாமல் போய்விட்டதால் அடுத்து அத்தொழிற்சங்கம், மே பேங்க் எப்படி அதன் ஊழியர்களைச் சுரண்டி அவர்களின் தொழிற்சங்க உரிமைகளைக் கீழறுத்து வருகிறது என்பதை அதன் 30 ஆயிரம் உறுப்பினர்களிடமும் விவரிக்க தொடர்விளக்கக் கூட்டங்களை நடத்த விருக்கிறது. 

“அதைத் தடுத்து நிறுத்தாவிட்டால் மற்ற இடங்களுக்கும் அது பரவும்”, என்று என்யுபிஇ பொதுச் செயலாளர் ஜே.சாலமன் இன்று ஓர் அறிக்கையில் கூறியிருந்தார்.

அந்த அரசுத் தொடர்பு நிறுவனம், “மனித உரிமைகளைத் துணிச்சலாகவும் மூர்க்கத்தனமாகவும் மீறி வருகிறது, மலேசிய சட்டங்களைக் கேலிக்கூத்தாக்குகிறது, அதன் போக்கால் வருமான ஏற்றதாழ்வு மேலும் மோசமடைந்துள்ளது.

“என்யுபிஇ ஓராண்டுக்காலமாக பிரதமரை மன்றாடி கேட்டுக்கொண்டு வந்திருக்கிறது. என்யுபிஇ அரசாங்கத்துக்கு எப்போதுமே உறுதியான ஆதரவைத் தெரிவித்து வந்துள்ளது. ஆனாலும் பிரதமர் அதன் வேண்டுகோளுக்குச் செவி சாய்க்கவில்லை.”

அந்த வங்கியில் உயர் அதிகாரிகள் கடந்த பத்தாண்டுகளாக பெற்று வருவதுபோன்ற போனஸ் சலுகை அதன் சாதாரண ஊழியருக்குக் கொடுக்கப்படுவதில்லை. அது அவர்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று வலியுறுத்திய என்யுபிஇ,  பத்தாண்டுகளுக்கும் கணக்கிட்டு அவர்களுக்கு 80 மாத போன்ஸ் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியது.

ஆனால், மே பேங்க் தொழிலாளர்களுக்காக மட்டுமே உருவாக்கப்பட்டுள்ள (in-house union) மேபேங்க் அதிகாரிகளல்லாத பணியாளர்கள் சங்கம் (Maybank Non-Executive Empolyees Union (Mayneu)) புதிதாக அமைக்கப்பட்டுள்ள அச்சங்கத்தில் தனது உறுப்பினர்கள் சேர்வதைத் தடுப்பதற்காகவே என்யுபிஇ அவ்வளவு பெரிய தொகையை போனசாகக் கேட்டுள்ளது என்று கூறியது.

“தொழிற்சங்க எதிர்ப்பு நடவடிக்கைகள் பெருகிவருவதையும் உரிமைகளும் உண்மை வருமானமும் குறைந்து வருவதையும் கண்டு மலேசியர்கள் வெறுப்படைந்து போயிருக்கிறார்கள்”, என்று என்யுபிஇ அறிக்கை கூறியது.

அரசாங்கம் தொழில்களுக்கு அனுசரனையான கொள்கைகளைக் கடைப்பிடிப்பது சரிதான். ஆனால், அதற்காக மலேசியத்  தொழிலாளர்களின் நலன்கள் பலி கொடுக்கப்படுவதுதான் கவலை அளிக்கிறது என்று சாலமன் அறிக்கையில் சுட்டிக்காட்டியிருந்தார்.