84 வயதான துவாங்கு அப்துல் ஹலிம் முவாஸாம் ஷா நாட்டின் 14வது யாங் டி பெர்துவான் அகோங்காக அரியணை அமர்ந்தார்.
இன்று காலை கோலாலம்பூரில் உள்ள புதிய இஸ்தானா நெகாராவில் முழு அரச பாரம்பரியங்கள் நிறைந்த சடங்குகளுடன் அவர் அரியணை அமரும் வைபவம் நடைபெற்றது.
இஸ்தானா நெகாராவில் பாலாய் ரோங் ஸ்ரீ என அழைக்கப்படும் அரியணை மண்டபத்தில் துவாங்கு அப்துல் ஹலிம் அரியணை அமர்வதற்கான உறுதி மொழி எடுத்துக் கொள்ளும் சடங்கு நடத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து 21 பீரங்கிக் குண்டுகள் வெடிக்கப்பட்டன. அரச மலேசிய ஆகாயப் படையின் இசைக்குழு லெப்டினண்ட் சாப்ரி அப்துல்லா தலைமையில் நெகாரா கூ தேசிய கீதத்தை இசைத்தது.
மலாய் ஆட்சியாளர்கள், யாங் டி பெர்துவா நெகிரிக்கள், பிரதமர், அமைச்சர்கள் அந்நிய அரசதந்திரிகள் உட்பட 900க்கும் மேற்பட்ட பெருமக்கள் அந்த கோலாகலமான சடங்குகளில் கலந்து கொண்டனர்.
அந்தச் சடங்கு இந்த நாட்டுக்கும் துவாங்கு அப்துல் ஹலிமுக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும். முதலாவதாக துவாங்கு அப்துல் ஹலிம் இரண்டாவது முறையாக யாங் டி பெர்துவான் அகோங்காக அரியணை அமர்ந்துள்ளார்.
அவர் தமது 42 வயதில் நாட்டின் ஐந்தாவது யாங் டி பெர்துவான் அகோங்காக 1970ம் ஆண்டு நியமிக்கப்பட்டார்.
இப்போது 40 ஆண்டுகளுக்குப் பின்னர் துவாங்கு அப்துல் ஹலிம் 14வது யாங் டி பெர்துவான் அகோங்காக அதே பொறுப்புக்கு மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
இரண்டாவதாக ஜாலான் டூத்தாவில் அமைக்கப்பட்டுள்ள புதிய இஸ்தானா நெகாராவில் அரியணை அமரும் முதலாவது மாமன்னர் என்ற பெருமையும் அவருக்கு கிடைத்துள்ளது..