இந்தோனிசிய நில நடுக்கத்தைத் தொடர்ந்து தென் கிழக்காசிய நாடுகளில் சுனாமி விழிப்பு நிலை

இந்தோனிசியாவின் சுமத்ரா கடற்கரைக்கு அப்பால் ரிக்டர் கருவியில் 8.7 ஆகப் பதிவான வலுவான நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.

அதனால் தென் கிழக்காசிய நாடுகள் சுனாமி விழிப்பு நிலையை அறிவித்துள்ளன. மக்கள் கடலோரத்திலிருந்து பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேற வேண்டும் என அவை கேட்டுக் கொண்டுள்ளன.

சுமத்ரா கடற்கரைக்கு அப்பால் மாலை மணி 4.32 வாக்கில் 22 கிலோமீட்டர் ஆழத்தில் நில நடுக்கம் மய்யம் கொண்டிருந்ததாக அமெரிக்க மண்ணியல் ஆய்வுத் துறை தகவல் வெளியிட்ட பின்னர் அமெரிக்க கண்காணிப்பாளர்கள் இந்தியப் பெருங்கடலை ஒட்டியுள்ள நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கையை வெளியிட்டனர். அதனைத் தொடர்ந்து இலங்கை, இந்தியா, தாய்லாந்து மலேசியா ஆகியவை மக்களை வெளியேற்றுவதற்கான உத்தரவுகளைப் பிறப்பித்தன.

அந்த நில நடுக்கம் 8.9 ஆக இருந்தது என முதலில் அமெரிக்க மண்ணியல் துறை கூறியது.

இந்தோனிசியாவில் உள்ள ஏச்சே, வடக்கு சுமத்ரா, பெங்குலு, லாம்புங் ஆகிய மாநிலங்கள் சுனாமியால் பாதிக்கப்படும் அபாயத்தைக் கொண்டுள்ளதாக அந்த நாட்டின் வானிலை ஆய்வுத் துறை அறிவித்தது.

இலங்கையும் இந்தியாவும் சுனாமி எச்சரிக்கையை வெளியிட்ட வேளையில் சுற்றுலாத் தலமான அந்தமான் கடலோரத்தை ஒட்டியுள்ள மக்கள் பாதுகாப்பான இடத்துக்கு வெளியேற வேண்டும் என தாய்லாந்து கேட்டுக் கொண்டுள்ளது. மலேசியாவும் கடலோரப் பகுதிகளிலிருந்து மக்களை வெளியேற்ற நடவடிக்கை எடுத்துள்ளது.

இலங்கைத் தீவின் கிழக்குப் பகுதியை மலேசிய நேரப்படி இன்று மாலை மணி 6.40க்கு  உயரமான அலைகள் தாக்கும் என அந்த நாட்டு அரசாங்கம் அறிவித்தது. மக்கள் கடலோரத்திலிருந்து சீராக வெளியேற வேண்டும் என்றும் அது கேட்டுக் கொண்டது.

1,340 கிலோமீட்டர் தொலைவில் நிகழ்ந்த இந்தோனிசிய நில நடுக்க அதிர்வுகள் இலங்கையில் உணரப்பட்டது.

இந்தியாவும் இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள அந்தமான், நிக்கோபார் தீவுகளுக்கு சுனாமி எச்சரிக்கையைப் பிரகடனம் செய்துள்ளது.

அதே வேளையில் தமிழ் நாடு, ஆந்திரப் பிரதேச மாநிலங்களுக்கு அது சற்று  குறைந்த சுனாமி எச்சரிக்கையை விடுத்துள்ளது.

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நில நடுக்க அதிர்வுகள் உணரப்பட்டன. கடலோரப் பகுதிலியிலிருந்து மக்கள் வெளியேற வேண்டும் என்றும் அது கேட்டுக் கொண்டது.

2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ம் தேதி சுமத்ராவுக்கு அப்பால் 9.2 ஆகப் பதிவான நில நடுக்கம் தாக்கிய போது ஏற்பட்ட சுனாமி தெற்காசியாவில் பேரழிவை கொண்டு வந்தது. 220,000 பேர் உயிரிழந்தனர்.

ஜப்பானில் கடந்த ஆண்டு 9.0 ஆக பதிவான நில நடுக்கத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட சுனாமிக்கும் அணுப் பேரிடருக்கும் 19,000 பேர் பலியானார்கள்.

-ஏஎப்பி