இசா சட்டத்தை ரத்துச் செய்வது அரசாங்கத்துக்கு எளிதல்ல

1960ம் ஆண்டுக்கான இசா என்ற உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தை கைவிடுவது என்பது அரசாங்கத்துக்கு சிரமமான விஷயமாக இருந்தது.

அது குறிப்பாக உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேனுக்கு மிகவும் கடுமையான விஷயமாக இருந்தது என புக்கிட் அமானில் போலீஸ் தலைமையகத்தில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறினார்.

“தனி நபர்களைக் கைது செய்வதற்கு உள்ள அதிகாரத்தை கை விடுவது உள்துறை அமைச்சருக்கு எளிதான காரியமல்ல. என்றாலும் அவர் அதனை விருப்பதுடன் செய்தார். காரணம் அவர் மக்களுடைய எதிர்பார்ப்புக்களைப் புரிந்து கொண்டதாகும்,” என்றார் அவர்.

இசா சட்டத்துக்குப் பதிலாக அமலாக்கப்படும் 2012ம் ஆண்டுக்கான பாதுகாப்பு குற்றங்கள் (சிறப்பு நடவடிக்கைகள்)மசோதா, முதல் வாசிப்புக்காக  கடந்த செவ்வாய்க் கிழமை மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.

கால வரம்பின்றி ஒருவரைத் தடுத்து வைக்க வகை செய்யும் இசா-வை ரத்துச் செய்வதற்கு ஆதரவு அளித்த தேசியப் போலீஸ் படைத் தலைவர் இஸ்மாயில் ஒமாருக்கும் அவரது படையினருக்கும் நஜிப் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

“போலீஸ் படை அதனை எதிர்க்கவில்லை. என்றாலும் அந்த நடவடிக்கை… அனைத்துலகப் பயங்கரவாதம், தீவிரவாதம், குற்றச் சக்திகள் ஆகியவற்றை முறியடிப்பதற்கான அவர்களுடைய போராட்டத்துக்கு அது தடையாக இருக்காது என நம்பப்படுகிறது.”

அடிப்படை மனித உரிமைகளுக்கும் தேசியப் பாதுகாப்புக்கும் அமைதிக்கும் இடையில் நுட்பமான சமநிலையைக் காண்பதே அரசாங்கம் மற்றும் போலீசின் வேலையாகும் என்றும் நஜிப் சொன்னார்.

மக்களுடைய அந்த எதிர்பார்ப்புக்கள் “அநியாயமானவை அல்ல”. “அதனை அடையவும் முடியும்” என்றார் அவர்.

நஜிப் புக்கிட் அமானில் 435 மில்லியன் ரிங்கிட் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய அலுவலக கட்டிடத்தை அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்துப் பேசினார்.

அந்தக் கட்டிடத்தில் மருந்தகம் ஒன்றும் குழந்தைகள் பராமரிப்பு மய்யமும் ஒரு வயது முதல் ஐந்து வயது வரையிலான பிள்ளைகளுக்கான பெர்மாத்தா குழந்தைக் கல்வி மய்யமும் அமைந்துள்ளன.

புக்கிட் அமானில் புதிய பண்டபம் கட்டப்படுவது அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் சேர்க்கப்படும் என்றும் பிரதமர் அறிவித்தார்.

அவர் பின்னர் அவசர காலத்தின் போது சேவையாற்றிய 20 முன்னாள் போலீஸ் வீரர்களுக்கு காசோலைகளையும் வழங்கினார்.