பெரும்பான்மை மக்களுடைய ஆதரவைத் தான் பெற்றுள்ளதாக இசி என்ற தேர்தல் ஆணையம் கூறிக் கொள்வதால் அது பொதுத் தேர்தலில் போட்டியிட வேண்டும் என தேர்தல் சீர்திருத்தப் போராட்ட அமைப்பான பெர்சே 2.0 இன்று சவால் விடுத்துள்ளது.
“பெரும்பான்மை மக்கள் இசி-க்கு வாக்களித்து அங்கு அமரவில்லை. அது தேர்தலில் போட்டியிடுவதில்லை.” “அது பெரும்பான்மை என்ற விஷயத்தைப் பேச விரும்பினால் தேர்தலில் போட்டியிடுமாறு அதனைக் கேட்டுக் கொள்ளுங்கள்,” பெர்சே நடவடிக்கைக் குழு உறுப்பினரான பி சுப்ரமணியம் கூறினார்.
எதிர்ப்பாளர்களுக்கு பெரும்பான்மை மக்களுடைய ஆதரவு இல்லை என இசி தொடர்ந்து கூறி வருவது பற்றி வினவப்பட்ட போது அவர் அவ்வாறு பதில் அளித்தார்.
பெரும்பான்மை மக்கள் இசி-யை ஆதரிப்பதாக இதற்கு முன்னர் இசி துணைத் தலைவர் வான் அகமட் வான் ஒமார் கூறிக் கொண்டிருந்தார்.
இசி விலக வேண்டும் என பெர்சே 2.0 கேட்டுக் கொண்டுள்ளது பற்றிக் குறிப்பிட்ட வான் அகமட், அரசமைப்பில் கூறப்பட்டுள்ளவாறு தேர்தல் ஆணையர்களை அகோங் நியமிப்பதால் கூட்டரசு அரசமைப்பை மதிக்குமாறு அந்தக் கூட்டமைப்பை வலியுறுத்தினார்.
அரசமைப்பு உரிமைகள் திருடப்பட்டுள்ளன
ஏப்ரல் 28 பேரணிக்கு 500,000 பேரை பெர்சே 2.0 இலக்கு வைத்துள்ளது பற்றிக் குறிப்பிட்ட நடவடிக்கைக் குழுவின் இன்னொரு உறுப்பினரான மரியா சின் “அது மக்கள் கருத்து” என்றார்.
“பல வாக்காளர் பட்டியல் மோசடிகள் அம்பலப்படுத்தப்பட்டுள்ளன. தேர்தலில் மக்களை “ஏமாற்றுவதின் மூலமும்” “மோசடி செய்வதின் மூலமும்” இசி மக்களுடைய அரசமைப்பு உரிமைகளை திருடி விட்டதை அவை மெய்பிக்கின்றன.”
பெரும்பான்மை பிரதிநிதித்துவம் என்ற இசி வாதத்திற்கு அர்த்தமே இல்லை என நடவடிக்கைக் குழுவின் இன்னொரு உறுப்பினரான கே ஆறுமுகம் கூறினார். காரணம் தமது வாக்குரிமை ஒரே ஒரு வாக்காளருக்குக் கூட மறுக்கப்பட்டாலும் இசி தனது அரசமைப்பு பொறுப்பை நிறைவேற்றத் தவறி விட்டதாகப் பொருள்படும் என அவர் சொன்னார்.
எனவே தேர்தல் ஆணையர்கள் அனைவரும் பதவி விலக வேண்டும் என்ற தனது கோரிக்கையை இன்று விடுத்துள்ள அதிகாரத்துவ அறிக்கையில் குழு மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
“ஒரு நபர் ஒரு வாக்கு என்பதை உறுதி செய்வதற்குப் பதில் மோசடிகளுக்கு உடந்தையாக இருப்பதின் மூலம், மக்களுடைய வாக்குகளை செல்லாததாக்கி விட்டது.”
“நடப்பு இசி தொடர்ந்து பணியாற்ற அனுமதித்தால் கறை படிந்த, நேர்மையற்ற, ஜனநாயகத்துக்கு புறம்பான பொதுத் தேர்தலுக்கே வழி வகுக்கும்,” என பெர்சே 2.0ன் கூட்டுத் தலைவர் ஏ சமாட் சைட் வாசித்த அறிக்கை கூறியது.