பல காரணங்களால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் பள்ளிப் படிப்பை பாதியிலேயே விட்டு விடுகின்றனர். ஒன்றுமே செய்தாவர்களுக்கான ஒரே வழி தகாத வழி! அவ்வழி செல்லும் மாணவர்கள் நாட்டின் அனைத்து இனங்களிலும் காணப்படுகின்றனர். ஆனால், சுட்டிக்காட்டப்படுபவர்கள் இந்திய மாணவர்களே.
எப்படியோ போய்த் தொலையுங்கள் என்று அவர்களை விட்டு விடலாமா?
“அப்படிச் செய்யவே கூடாது” என்று கூறுகிறார் அம்மாதிரியான மாணவர்கள் மேம்பாடடையவும் மேற்கல்வியைத் தொடர்வதற்கும் கைத்தொழிலைக் கற்றுக்கொள்வதற்கும் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வரும் மைஸ்கில்ஸ் அறவாரியத்தின் இயக்குனர் சி.பசுபதி. இவர் தமிழ் அறவாரியத்தின் தலைவருமாவார்.
தமிழ்ப்பள்ளிகளிலும் தேசியப்பள்ளிகளிலும் 35,000 மாணவர்கள் படிக்கின்றனர். இவர்களில் 28,000 மாணவர்கள் மட்டுமே எஸ்பிஎம் தேர்வு எழுதுகின்றனர். 7,000 மாணவர்கள் பாதியிலேயே கல்விக்கு முற்றுப்புள்ளி வைக்கின்றனர். நாம் அன்றாடம் எதிர்கொள்ளும் கேள்விப்படும் பிரச்னைக்களுக்கு இந்த 7,000 மாணவர்கள்தான் அடிப்படைக் காரணம் என்று இன்று செய்தியாளர்களிடம் பேசிய பசுபதி கூறினார்.
முறையான அடிப்படைக் கல்வி கற்காத இம்மாணவர்கள் எப்படி வாழ்க்கையில் முன்னேற்றம் காண முடியும். அதுதான் மிகப் பெரிய பிரச்னை என்றாரவர்.
சமூகத்திற்கான கடப்பாடு
முறையான கல்வி கற்கும் வாய்ப்பை இழந்த இம்மாணவர்களுக்கு தொழிற்திறன் பயிற்சி – மாற்றுக் கல்வி – அளிப்பதற்காக மைஸ்கில்ஸ் அறவாரியம் அமைக்கப்பட்டது என்று கூறிய பசுபதி, இத்தொழில் திறன் பயிற்சி மனிதவள அமைச்சுடன் இணந்து கூட்டாக அளிக்கப்படுகிறது என்று மேலும் கூறினார்.
மைஸ்கில்ஸ் அறவாரியம் 2011 ஆண்டில் அமைக்கப்பட்டது. இது முற்றிலும் இலாப நோக்கமற்றது என்பதை பசுபதி வலியுறுத்தினார்.
இதற்கு முன்னர் தொடங்கப்பட்ட மொன்பர்ட் (Monfort) பள்ளி மற்றும் தொழிற்சங்கவாதி வி.டேவிட் தோற்றுவித்த விட் (Workers Institute of Technology) ஆகியவை அவற்றின் நோக்கங்களிலிருந்து மாறி விட்டன. ஆனால், மைஸ்கில்ஸ் தோற்றுவித்துள்ள Primus Institute of Technology) இலாப நோக்கத்தைக் கொண்டதல்ல என்பதை அவர் தெளிவுபடுத்தினார்.
“இது சமூகத்திற்கான நமது கடப்பாட்டை அமல்படுத்துவதாகும்.”
“இதர இலாப நோக்கத்தைக் கொண்ட கல்வி நிலையங்களுடன் எங்களை ஒப்பிடாதீர்கள்”, என்றும் அவர் கூறினார்.
வேலை வாய்ப்பு உண்டு
வசதி படைத்த மாணவர்கள் இதர கல்வி நிலையங்களுக்குச் செல்லலாம். “நமது அமைப்பு வசதியற்ற குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்காகவும் படிப்பை பாதியில் விட்டு விட்ட மாணவர்களுக்காகவும் இயங்குகிறது.
படிப்பை பாதியில் விட்டு விட்ட மாணவர்களைப் பொறுத்த வரையில் மைஸ்கில்ஸ் அறவாரியத்திற்கு இரு முக்கிய குறிக்கோள்கள் இருக்கின்றன. ஒன்று, அவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபடுவதைத் தவிர்ப்பது; மற்றொன்று, அவர்கள் தங்களுக்கும் தங்களுடைய குடும்பத்திற்கும் பயனுடையவர்களாக இருத்தல் என்று பசுபதி விளக்கம் அளித்தார்.
“நாங்கள் பிரதமர்துறையுடன் தொடர்பு கொண்டுள்ளோம். மாணவர்களின் வாழ்க்கைப்படிக்கான உதவிப் பணம் பெற முயன்று வருகிறோம்”, என்று அவர் தெரிவித்தார்.
மாணவர்களுக்கு தொழிற்திறன் பயிற்சி 6 லிருந்து 12 மாதங்கள் வரையில் அளிக்கப்படுகிறது. பயிற்சியின் முடிவில் மாணவர்களுக்கு மலேசிய தொழிற்திறன் சான்றிதழ் வழங்கப்படும்.
தொழிற்பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்பாடு செய்யப்படும். பிரைமஸ் தொழிற்கழகத்தில் பயிற்சியை முடித்துக்கொண்ட முதல்கட்ட 10 மாணவர்கள் வால்வோ வாகன நிறுவனத்தில் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர் என்று பசுபதி தெரிவித்தார்.
மைஸ்கில்ஸ் திட்டப்படி மாணவர்கள் தொழிற்பயிற்சி மட்டுமல்லாது உயர்கல்வி போதனையும் பெறலாம்.
மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் அரசாங்க ஆசிரியர்கள் முறைப்படி பயிற்சி பெற்றவர்கள். இப்போது 6 மலாய் ஆசிரியர்கள் பயிற்சி அளிக்கின்றனர்.
மாணவர்களில் பெரும்பாலானோர் இந்தியர்கள் என்றாலும் இதர மலாய் மற்றும் சீன மாணவர்களுக்கும் இடம் உண்டு. சாபா மற்றும் சரவாக்கிலிருந்தும் மாணவர்கள் வரவிருக்கின்றனர். ஓராங் அஸ்லி மாணவர்களும் பயிற்சி பெறுகின்றனர் என்ற தகவலை பசுபதி வழங்கினார்.
முப்பது பெண்களும் பிரைமஸ் தொழிற்பயிற்சி கழகத்தில் வழக்குரைஞர்களின் செயலாளர் தொழிலுக்கான பயிற்சி பெற்று வருவதாகவும் அவர் கூறினார்.
விவேகனந்தா ஆசிரமத்திற்கு வாருங்கள்
இந்தியர்களுக்கு இது ஒரு சிறப்பான வாய்ப்பு. இதனைத் தவறாமல் பயன்படுத்திக்கொள்ள அனைவரும் முன்வர வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
மைஸ்கில்ஸ் அறவாரியம் இந்தத் தொழிற்பயிற்சி திட்டங்களில் குறித்து விரிவான விளக்கங்கள், தகவல்கள் அளிப்பதற்காகவும் மாணவர்கள் பதிவு செய்யப்படுவதற்கககவும் “மைஸ்கில்ஸ் திறந்த நாள் 2012” என்ற நிகழ்வுக்கு ஏற்பாடு செய்துள்ளது.
இந்நிகழ்வில் கல்வி ஆலோசனைகள், தொழிற்திறன் பயிற்சி பற்றிய விளக்கங்கள், பயிற்சிக்கான பதிவு, வர்ணம் தீட்டும் போட்டி, என்திறன் போட்டி, பொருட்காட்சி மற்றும் தன்னார்வலர் பதிவு போன்ற அங்கங்களுடன் போட்டிகளுக்கு ரொக்கப் பரிசுகளும் உண்டு.
மைஸ்கில்ஸ் திறந்த நாள் 2012 பற்றிய விபரம்:
நாள் : 15 ஏப்ரல், 2012 (ஞாயிற்றுக்கிழமை)
நேரம் : காலை மணி 11.00 – மாலை மணி 5.00
இடம் : விவேகனந்தா ஆஸ்ரமம், எண்.220, ஜாலான் துன் சம்பந்தன், பிரிக்ஸ்பீல்ட்ஸ் 50470 கோலாலம்பூர்.