பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் இவ்வாண்டு நிகழும் எனக் கருதப்படும் தேர்தலில் வெற்றி பெறுவார். அதற்கு இப்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்ற விரிவான அரசியல், பொருளாதார சீர்திருத்தங்கள் அந்த வெற்றிக்கு துணை புரியும். ஆனால் நீண்ட கால அடிப்படையில் அது சொந்தக் காலில் நிலைத்திருக்க வேண்டுமானால் அதற்குப் புது ரத்தம் தேவை. இவ்வாறு முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் கூறுகிறார்.
2008ம் ஆண்டு நிகழ்ந்த தேர்தலில் பிஎன்-னை கை விட்டு விட்ட சீன, இந்திய வம்சாவளி வாக்காளர்களை மீண்டும் கவருவதற்காக நஜிப் பல தசாப்தங்களாக பெரும்பான்மை மலாய்க்காரர்களுக்குச் சாதகமாக இருந்த ஆதரவுக் கொள்கைகளை அகற்றத் தொடங்கியுள்ளார்.
“இப்போது பிரதமருடைய செல்வாக்கு மிகவும் கணிசமாக அதிகரித்துள்ளது,” என 86 வயதான மகாதீர் ராய்ட்டர் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறினார். அந்தப் பேட்டி பெட்ரோனாஸ் இரட்டைக் கோபுரத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்றது.
நஜிப் அண்மைய வாரங்களில் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு நன்கொடைகளை வழங்குவதாக அறிவித்தார். அந்த நடவடிக்கைகளைத் தொடர்ந்து அவருக்கு ஆதரவு கூடியுள்ளது என மகாதீர் சொன்னார்.
“ஆனால் ஆளும் பிஎன் அச்சாணியான நஜிப்-பின் அம்னோ உள் மாற்றங்களை ஏற்றுக் கொள்ளத் தயங்கும் போக்கைக் கைவிட வேண்டும்.”
“அந்த கட்சியே நல்ல முறையில் நிர்வகிக்கப்படவில்லை. புதியவர்கள் நுழைய அவர்கள் அனுமதிக்கவில்லை. அவர்கள் அச்சமடைந்துள்ளனர்,” என்றார் மகாதீர்.
“என்றாலும் பிஎன் இன்னும் வெற்றி பெறும் என நான் எண்ணுகிறேன். ஆனால் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெறுவது தான் நிச்சயம் பிரச்னையாக இருக்கும். நஜிப் கூடுதல் இடங்களைப் பிடிப்பார் என நம்புகிறேன். அது 2008ஐ விட அதிகமாக இருக்க வேண்டும். நஜிப் கூடுதல் இடங்களில் வெற்றி பெறவில்லை என்றால் அவரது நிலை ஆட்டம் கண்டு விடும்.”
நஜிப் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் தேர்தலை நடத்தியாக வேண்டும். என்றாலும் பொருளாதாரம் வலிமையாக இருப்பதையும் அரசியல் சீர்திருத்தங்களையும் பயன்படுத்திக் கொள்ளும் பொருட்டு அவர் வரும் ஜுன் மாதம் பெரும்பாலும் தேர்தலை நடத்தக் கூடும் என பரவலாக கணிக்கப்பட்டுள்ளது.
‘என் காலத்தில் அம்னோ வலுவாக இருந்தது’
ஆளும் கட்சி வட்டாரத்தில் மகாதீருக்கு இன்னும் செல்வாக்கு உள்ளது. கடந்த தேர்தலில் பிஎன் எதிர்பாராத தோல்விகளைச் சந்தித்ததைத் தொடர்ந்து அப்ப்போதைய பிரதமர் அப்துல்லா அகமட் படாவியை வெளியேற்றுவதற்கும் நஜிப்-பைக் கொண்டு வருவதற்கும் மகாதீர் அரும்பாடுபட்டார்.
மகாதீர் தமது ஆட்சியின் போது அரசியல் புரவலர் போக்கும் அதிகார அத்துமீறலும் நிறைந்திருந்ததாகக் கூறப்படுவதை மறுக்கும் வகையில் அண்மையில் ‘A Doctor in the House’ என்னும் தலைப்பைக் கொண்ட 843 பக்க புத்தகத்தை வெளியிட்டார்.
ஆதரவுக் கொள்கைகளை கைவிடுவதற்கான நடவடிக்கைகள் எதிர்பார்க்கப்பட்டதைக் காட்டிலும் நீண்ட காலம் பிடிப்பதாக அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.
“எல்லா அத்துமீறல்களையும் முதலில் அகற்ற வேண்டும். எடுத்துக்காட்டுக்கு நாங்கள் மலாய்க்காரர்களுக்கு கார்களை இறக்குமதி செய்வதற்கும், வர்த்தகம் செய்யவும் அனுமதிகளை வழங்குகிறோம். குத்தகைகளையும் கொடுக்கிறோம். ஆனால் அவற்றை அவர்கள் விற்று விடுகின்றனர்,” என்றும் மகாதீர் குறிப்பிட்டார். “அது நிறுத்தப்பட வேண்டும். அது இன்னும் தொடருகிறது.”
1957ம் ஆண்டு சுதந்திரம் பெற்றது முதல் பிஎன் கூட்டணியில் ஆதிக்கம் செலுத்தி வரும் அம்னோவுக்கு புத்துயிரூட்ட இன்னும் நிறைச் செய்யப்பட்ட வேண்டுமென மகாதீர் சொன்னார்.
“பண அரசியல், அரசியல் சதிகள்” போன்ற பிரச்னைகளைத் தீர்க்கவும் தேர்தலுக்கு முன்னதாக மூன்று மில்லியன் உறுப்பினர்களிடையே ஐக்கியத்தை ஏற்படுத்தவும் அம்னோ கட்சித் தேர்தல்களை 18 மாதங்களுக்கும் நஜிப் தள்ளிப் போட்டுள்ளார்.
“என் காலத்தில் அம்னோ வலுவாக இருந்தது. இப்போது அப்படி அல்ல. நீங்கள் அவரை ஆதரித்தால் உங்களுக்கு குத்தகைகள் கிடைக்கும் எல்லாச் சலுகைகளும் கிடைக்கும். கட்சி விழுந்து விட்டதா இல்லையா என்பது பற்றி அவர்களுக்கு கவலையே இல்லை. அவர்கள் பதவிகளை தக்க வைத்துக் கொண்டு அந்தச் சலுகைகள் அனைத்தையும் அங்கீகரிக்க வேண்டும்,” என்றார் அவர்.
“ஆகவே தங்களைக் காட்டிலும் சிறந்தவர்கள் யாரும் வந்தால் தங்கள் பதவிக்கு மருட்டல் ஏற்பட்டுள்ளதாக அவர்கள் அஞ்சுகின்றனர். அதனால் தகுதி பெற்ற மக்கள் உள்ளுக்குள் வருவதை அவர்கள் கூடினபட்சம் தடுக்க முயலுகின்றனர்,” என அவர் மேலும் சொன்னார்.
ராய்ட்டர்ஸ்