வாக்காளர் பட்டியலில் இரட்டைப் பதிவுகள் இருப்பதாக கூறப்படுவதை இசி என்ற தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது.
சபா, சரவாக் வாக்காளர்கள் சிலாங்கூருக்குத் தங்களது வாக்களிப்பு முகவரிகளை மாற்றுவதற்கு சமர்பித்த சட்டப்பூர்வமான விண்ணப்பங்களே, பெர்சே 2.0 கண்டு பிடித்துள்ளதாகக் கூறப்படும் “மோசடி” என அது விளக்கியது.
சபா/சரவாக்கிலிருந்து சிலாங்கூருக்கு மாற்ற அவர்கள் கொடுத்துள்ள விண்ணப்பங்கள் தேசியப் பதிவுத் துறையின் வழக்கமான சோதனைகளுக்குக் காத்திருக்கின்றன.”
“ஒரு வாரம் அவை காட்சிக்கு வைக்கப்படும். அவை ஆட்சேபத்துக்கு உட்படுத்தப்பட்டு பின்னர் மே மாத மத்தியில் அரசாங்கத் தகவல் ஏட்டில் அறிவிக்கப்படும்,” என இசி தலைவர் அப்துல் அஜிஸ் முகமட் யூசோப் குறுஞ்செய்தி வழி தகவல் தெரிவித்துள்ளார்.
அந்த வாக்காளர்களுக்கு அங்கீகாரம் கிடைத்ததும் சபா, சரவாக் வாக்காளர் பட்டியலிலிருந்து அவர்களுடைய பெயர்கள் நீக்கப்பட்டு விடும். ஆனால் தகவல் ஏட்டில் அறிவிக்கப்பட்ட சிலாங்கூர் பட்டியலில் தொடர்ந்து இருக்கும் என அவர் விளக்கினார்.
“இசி வேண்டுமென்றே இரட்டைப் பதிவுகளைச் செய்வதில்லை. நாங்கள் எல்லா நேரங்களிலும் வாக்காளர் பட்டியலைத் தூய்மையாக வைத்திருக்க நாங்கள் பெரு முயற்சி செய்து வருகிறோம்,” என்றும் அப்துல் அஜிஸ் சொன்னார்.
2012ம் ஆண்டு முதல் கால் பகுதிக்கான புதுப்பிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலில் சபா, சரவாக்கைச் சேர்ந்த 24,015 வாக்காளர்கள் சிலாங்கூரில் இரண்டாவது முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக பெர்சே 2.0 அமைப்பு நேற்றுக் கூறியது.
ஆனால் அந்த விவரங்களைத் தெரிவித்த பெர்சே 2.0ன் நடவடிக்கைக் குழு உறுப்பினர் மரியா சின், எந்த எடுத்துக்காட்டையும் கூறவில்லை. அண்மைய எதிர்காலத்தில் நிருபர்கள் சந்திப்பில் அது வெளியிடப்படும் என்று மட்டும் அவர் சொன்னார்.