கேடிஎம் தலைவர்: ரயில் நிலையங்களில் பிஎன் கொடி பறக்க விடப்படலாம்

சிலாங்கூர் மாநிலத்திலுள்ள கேடிஎம்பி கொம்மியூட்டர் ரயில் நிலயங்களில் பாரிசான் நேசனல் கொடிகள் பறக்க விடுவதற்கு அனுமதிக்குமாறு அதன் நிலைய அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை மூலம் கூறப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

ஒரு தகவலின்படி கேடிஎம்பியின் தலைவர் முகமட் ஸின் முகமட் இந்த உத்தரவை இட்டுள்ளார். இவர் சிலாங்கூர் மாநில பிஎன் ஒருங்கிணைப்பாளருமாவார்.

இந்த உத்தரவு கடந்த புதன்கிழமையிலிருந்து அமலுக்கு வந்திருக்க வேண்டும்.

“பிஎன்னிடம் அனுதாபம் உள்ள அதிகாரிகள்”

ஆனால், மலேசியாகினி தொடர்பு கொண்டபோது தாம் பின் கொடிகளைப் பறக்கவிடுவதற்கான குறிப்பிட்ட எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை என்று முகமட் ஸின் கூறினார்.

“நான் எந்த உத்தரவும் வெளியிடவில்லை. அவர்கள் கொடிகளை பறக்கவிட விரும்பினால், அதில் பிரச்னை இல்லை…மற்ற வழிகாட்டி பலகைகளுக்கு இடையூறாக இருக்கக்கூடாது.

“மற்றவர்கள் அவர்களுடையக் கொடிகளைப் பறக்கவிட வேண்டுமானால், அது ஒரு பிரச்னையல்ல. அது (ரயில் நிலைய) பாதுகாப்புக்குத் தடையாக இல்லாதிருந்தால் சரி”, என்று முகமட் ஸின் கூறினார்.

சிலாங்கூரில் பிஎன் எதிரணியாக இருக்கிறது. அதனால் பிஎன் மீது அனுதாபம் கொண்ட ஒரு கேடிஎம்பி அதிகாரி இருக்கலாம் என்று அவர் நம்புகிறார்.

“நான் எந்த உத்தரவும் இட்டதாக ஞாபகமில்லை… எனது கேடிஎம்பி அதிகாரிகள் எங்களுக்கு (பிஎன்னுக்கு) உதவ விரும்பலாம்.

“சிலாங்கூரில் நாங்கள் எதிரணியினர். நாங்கள் பிஎன் கொடிகளைப் பறக்க விட்டால், உள்ளூராட்சியினர் அதனை அகற்றி விடுகின்றனர். ஆகவே, எங்களிடம் அனுதாபம் கொண்டவர்கள் இருக்கலாம். அவர்கள் எங்களுக்கு பரப்புரை செய்ய விருப்பமுள்ளவர்களாக இருக்கலாம்”, என்றார் முகமட் ஸின்.