தேவாலயம்: ஜயிஸ் “முறையான அதிகாரமின்றி” நடவடிக்கை மேற்கொண்டது

டமன்சாரா உத்தாமா மெதடிஸ்ட் தேவாலயம்(டியும்சி), தங்கள் கட்டிடத்தில் சிலாங்கூர் இஸ்லாமிய சமயத்துறை(ஜயிஸ்)“சட்டப்படி முறையான அதிகாரமின்றி” அதிரடிச் சோதனை நடத்தியதாகச்  சாடியுள்ளது.

“ஜயிஸும் போலீஸ் அதிகாரிகளும் வாரண்ட் இன்றி எங்கள் கனவு மையத்துக்குள் வந்தனர் என்பதைத் திரும்பவும் வலியுறுத்துகிறோம்”, என்று மூத்த பாதிரியார் டேனியல் ஹோ இன்று ஓர் அறிக்கையில் குறிப்பிட்டார்.

“அவர்கள் நன்றிநவுலும் விருந்து நடைபெற்றுக்கொண்டிருந்தபோது குறுக்கே புகுந்தார்கள். அவர்கள் உள்ளே நுழைந்து புகைப்படம் எடுத்தார்கள். வீடியோவிலும் பதிவு செய்தார்கள்”, என்று கூறிய அவர் மண்டபத்தைவிட்டு வெளியேறிய பின்னரும் அவர்கள் புகைப்படம் எடுப்பதையும் வீடியோ பதிவையும் நிறுத்தவில்லை என்றார்.

“அவர்களுடன் நாங்கள் ஒத்துழைக்கவில்லை என்று கூறி ஜயிஸ் அதிகாரிகள் பலமுறை எச்சரிக்கையும் விடுத்தனர்.

“அதனிடையே சாதாரண உடையில் இருந்த போலீஸ்காரர்கள் கனவு மைய வளாகத்துக்குள் மோட்டார் சைக்கிளுடன் நுழைந்தனர். சிலர் வளாகத்தை வலம் வந்தனர்”, என்று ஹோ குறிப்பிட்டார்.

கடந்த புதன்கிழமை ஜயிஸ் அதிகாரிகள் வாரண்ட் இன்றி அதிரடிச் சோதனை நடத்திய பின்னர், ஒருவாரமாக மெளனமாக இருந்த டியுஎம்சி இப்போது இந்த அறிக்கையை வெளியிட்டிருக்கிறது.

ஆனால் பாதிரியார், அந்தத் தேவாலயம் முஸ்லிம்களை மதமாற்றும் நடவடிக்கையில் ஈடுபடுவதாகக் கூறப்படுவது பற்றி எதுவும் கருத்துத் தெரிவிக்கவில்லை.

நேற்று ஜயிஸ் வெளியிட்டிருந்த அதன் அதிகாரப்பூர்வ அறிக்கையில், டியுஎம்சியில் “அதிரடிச் சோதனை” மேற்கொண்டதாகக் கூறப்படுவதை மறுத்து தாங்கள் முரட்டுத்தனமாக நடந்துகொள்ளவில்லை என்றது.

“அன்றிரவு ஜயிஸ் அமலாக்க அதிகாரிகள் முரட்டுத்தனமாக நடக்கவில்லை…..சுமார் 100 பேர் கலந்துகொண்டிருந்த அந்நிகழ்வு முடிவுக்கு வந்த பின்னர்தான் மண்டபத்தைச் சோதனை செய்தோம்”, என்று ஜயிஸ் இயக்குனர் மர்சுகி உசேன்(வலம்) கூறினார். 

“ஜயிஸ் அதிரடிச் சோதனை நடத்தியது,முரட்டுத்தனமாக நடந்துகொண்டது, அத்துமீறி உள்ளே நுழைந்தது என்று கூறுவதெல்லாம் அபாண்டமாகும்”, என்று மர்சுகி தெரிவித்தார்.

கடந்த வாரம் ஹோ, எச்ஐவி/ஏய்ட்ஸ் நோயாளிகளுக்கு நிதிதிரட்ட தொண்டு அமைப்பான ஹராபான் கொம்முனிடி டியுஎம்சி மண்டபத்தில் ஏற்பாடு செய்திருந்த விருந்துநிகழ்வில் ஜயிஸ் அதிகாரிகள் அத்துமீறி நுழைந்தனர் என்று சாடியிருந்தார்.

இதே மண்டபத்தில்தான் மனித உரிமை மேம்பாட்டுச் சங்கம் (ப்ரோஹாம்) தேர்தல் நடைமுறை மீதான கருத்தரங்கம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்தது என்பதும் அதில் பெர்சே 2.0 தலைவர் அம்பிகாவும் தேர்தல் ஆணையத் துணைத் தலைவர் வான் அஹ்மட் வான் ஒமாரும் கலந்துகொண்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.